வடக்குக் கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்தவதற்கு வடக்குக் கிழக்கில் தொடர்பில்லாத அமைப்புக்களுக்கு வளங்களை அள்ளி வழங்குவதன் நோக்கம் என்ன? என யாழ். மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் கேள்வி எழுப்பட்டுள்ளது.
இது குறித்து இன்றைய தினம் யாழ். மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையத்தின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்,
யாழ். மாவட்ட அரச சாரர்ப்பற்ற நிறுவனங்களின் இணையம் கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகின்ற ஒரு கூட்டமைப்பாகும். 28 தன்னார்வத் தொண்டுப் பணி நிறுவனங்களின் ஒன்றிணைந்த அமைப்பாக கட்சிஅரசியல் சாரா அமைப்பாக இயங்கிவருகின்றது.
கடந்த காலங்களில் யாழ். மாவட்டத்தின் மக்கள் நலன்சார்ந்த பணிகளை ஒன்றிணைக்கின்ற பணிகளை மேற்கொண்டதோடு மக்கள் நலன்சார்ந்த விடயங்களுக்காக தொடர்ந்து தேர்ச்சியாக குரல் கொடுத்தும் வந்திருக்கின்றது.
இடப்பெயர்வு, சுனாமி, யுத்த அனர்த்த காலங்களின் மக்களின் நலனுக்காக அயராது உழைத்திருக்கிறது. இதனால் கடந்த அரசினால் பல நெருக்கடிகளுக்கும் ஆளாகியிருந்தது.
இந்தக் காலகட்டத்தில் சிவில் சமூகங்களின் தன்னார்வத் தொண்டுப் பணிகளை முடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட பலவகையான கட்டுப்பாடுகள் மற்றும் மறைமுகமான அழுத்தங்கள் காரணமாக தன்னார்வத் தொண்டுப் பணிகளை பல சிவல் சமூக அமைப்புக்கள் இடைநிறுத்திக் கொண்டன.
அப்போது மிகநெருக்கடியான சூழலுக்குள் சிவில் சமூக அமைப்புக்கள் தள்ளப்பட்டன. குறிப்பாக உள்ளூரில் பணியாற்றிய பல சர்வதேச நிறுவனங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது.
ஐ.நா நிறுவனங்களும் மக்கள் பணியிலிருந்து விலகவேண்டிய, ஒதுங்க வேண்டிய சூழலுக்குள் தள்ளப்பட்டார்கள். அதேவேளை உள்ளு10 நிறுவனங்கள் மீது விதிக்கப்பட்ட கடுமையான கட்டுப்பாடு காரணமாக உள்ளூர் நிறுவனங்கள் பணி செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு ஒரு வகையில் செயலிழந்து போனார்கள்.
இருந்தாலும் உள்ளூர் நிறுவனங்கள் தமது தன்னார்வத் தொண்டுப் பணிகளை தமது இயலாற்றலுக்கு ஏற்ப செயற்படுத்தி வந்தார்கள். இந்த நிலையில் 2015 ஆண்டு ஆட்சி மாற்றம் நடைபெற்று புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்டது.
அதன் வழி சுதந்தரமான சூழல் சிருஷ்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஐனநாயகப் பண்பு நிலையும் வெளிப்பாட்டுச் சுதந்திரத்துக்கான வாய்ப்பு நிலைகளும் உருவாக்கப்படும் என்ற எதிர்பார்ப்பபு இலங்கை மக்கள் மத்தியில் இருந்தது.
அந்த சூழலில் சிவில் அமைப்புக்களும் தமது மக்களுக்கான தன்னார்வத் தொண்டுப் பணிக்கான சூழல் உருவாகும் என்று எதிர்பார்த்தார்கள்.
இந்த புதியஅரசியல் சூழலில் யுத்தத்த்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மக்களின் நலன்சார்ந்த பணிக்கான வளங்கள் குறிப்பாக நிதிக்கொடை நிறுவனங்களின் நிதிகள், நிபுணத்துவ உதவிகள் மற்றும் பௌதீக வளங்கள் வடக்கு கிழக்கை நோக்கி வந்தடையும் என்ற எதிர்பார்ப்பு காணப்பட்டது.
சிவில் அமைப்புக்கள் வலுவடைவதே நிலைத்த சமாதானத்துக்கான மற்றும் ஜனநாயகச் செயற்பாட்டுக்கான சிறந்த வழியாக எப்போதும் அமையும் என்பது யாவரும் அறிந்த ஒருவிடயம்.
இதற்கு பாதிக்கப்பட்ட சமூகத்தின் சிவில் அமைப்புக்கள் வலுவடைதல் முக்கியமானதாகும். இதனை யாழ். மாவட்ட அரசார்பற்ற நிறுவனங்களின் இணையமும் நம்புகின்றது.
ஆனால் இந்த நிலைமையில் புதிய அரசு பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் முன்னேற்றத்தை ஏற்படுத்தவில்லை எனலாம். இது மிகவும் கவலையளிக்கின்ற விடயமாகும்.
கடந்த அரசினால் நிர்மூலமாக்கப்பட்ட சிவில் அமைப்புக்களினது தன்னார்வ தொண்டு பணிகள்; மீள் - கட்டுமாணம் கருத்திற் கொள்ளப்படவில்லை.
யாழ்மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. கடந்த ஆட்சிக் காலத்தில் நிர்மூலமாக்கப்பட்ட சிவில் அமைப்புக்களை மீள் கட்டுமாணப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கு ஆதரவு அளிக்கப்படவில்லை.
அது பற்றிய கரிசனைகளை சர்வதேச நிதிக் கொடையாளர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புக்கள் சர்வதேச அரச சர்பற்ற நிறுவனங்கள், சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள் இலங்கை அரசு, வடக்கு மாகாண சபை போன்ற பலரும் கவனம் செலுத்தவில்லை எனலாம்.
ஆனால் இதே காலகட்டத்தில் சிவில் சமூக அமைப்புக்களின் முக்கியத்துவம் பற்றி அதிகளவில் பேசப்பட்டிருக்கிறது. சிவல் சமூக அமைப்புக்களின் கருத்துக்களின் முக்கியத்துவம் உணரப்பட்டிருக்கிறது. சிவில் சமூகஅமைப்புக்களின் குரல்கள் ஐ.நாடுகள் சபையின் மனித உரிமைசபையில் முக்கியம் பெற்றிருக்கின்றன.
இந்தச் சூழலில் யுத்தத்தினாலும் கடந்த அரசின் செயற்பாடுகளாலும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக ஒலித்த சிவில் அமைப்புக்களின் மீள் கட்டுமாணத்துக்கு போதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படாமல். புதிய சிவில் அமைப்புக்கள் புற்றீசல் போல உருவாக்கப்பட்டன.
புதிது புதிதாக சிவல் சமூகக் குழுக்கள் உருவாக்கப்பட்டன. அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாய்ப்புக்கள் வழங்கப்படவில்லை அல்லது மிகமிக குறைந்த வாய்ப்புக்கள் வழங்கப்பட்டன எனலாம். அவ்வாறான புதிய சிவல் அமைப்புக்களை நோக்கி வளங்கள் திசைமுகப்படுத்தப்பட்டன.
இந்த நுட்பமான செயலிக்கத்தினால் வடக்கு கிழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர்களால் கொழும்பை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புக்கள் வளங்களை தமதாக்கிக் கொண்டன. நிர்வாகச் செலவுகளுக்காக அதிகளவு வளங்கள் ஒதுக்கப்பட்டன.
புதிது புதிதாக பல காரியாலயங்கள் உருவாக்கப்பட்டு குறுங்காலத்தில் மூடப்பட்டன. வெறுமனே நிகழ்ச்சிகளில் பங்குபற்றி கையொப்பமிடும் பங்காளர்களாக மட்டுமே பாதிக்கப்பட்ட மக்கள் கருதப்பட்டார்கள்.
நிகழ்ச்சிகளை திட்டமிடுவதிலோ அதனை நடைமுறைப்படுத்தவதிலோ பாதிக்கப்பட்ட சிவில் சமூகத்தின் கருத்துக்களும் பங்களிப்புக்களும் கோரப்படவில்லை. சில கண்துடைப்பு நடவடிக்கைகளே மேற்கொள்ளப்பட்டன.
பாதிக்கப்பட்டவர்கள் தமது செயற்பாடு என்று சொந்தங் கொண்டாடக்கூடியளவிற்கு எந்தவொரு திட்டங்களும் உருவாக்கப்படவில்லை எனலாம். ஒருவகையில் பாதிக்கப்பட்ட மக்கள் ஏமாற்றப்பட்டார்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.
இதனை பல்வேறு நாடுகளின் உயர்ஸ்தானிகர்கள், சர்வதேச நிதிக் கொடை நிறுவனங்கள், ஐ.நாடுகள் சபையின் அமைப்புக்கள் ஏன் புரிந்து கொள்ளவில்லை? என்ற கேள்வி உண்டு. இது பாதிக்கப்பட்டவர்கள் திட்டமிட்டு ஏமாற்றப்படுகிறார்களா? என்ற பலத்த சந்தேகத்தை ஏழுப்புகின்றது.
பாதிக்கப்பட்ட சமூகத்திடம் ஆலோசனைகளைப் பெற உண்மையானதும் நேர்மையானதும் செயல் முனைப்புள்ளதுமான செயல்முறை ஏன் பின்பற்றப்படவில்லை? திட்டங்களை அவர்களே உருவாக்குவதற்கும் நிர்வகிப்பதற்கும் வாய்ப்புக்களை ஏன் வழங்க மறுக்கிறார்கள்?
வடக்குக் கிழக்கில் சிவில் சமூக அமைப்புக்களை வலுப்படுத்தவதற்கு வடக்குக் கிழக்கில் தொடர்பில்லாத அமைப்புக்களுக்கு வளங்களை அள்ளி வழங்குவதன் நோக்கம் என்ன? என்பதான கேள்விகள் எழுகின்றன.
கிள்ளித் தெளிக்கும் செயல்முறை ஏன் ஊக்கிவிக்கப்படுகின்றது என்பது புரியாத புதிராகவுள்ளது.
ஆகவே யாழ். மாவட்டத்தின் 28அமைப்புக்கள் சார்பாக சர்வதேச நாடுகளின் உயர்ஸ்தானிகர்களுக்கும் ஐ.நாடுகள் சபையின் அமைப்புக்களுக்கும் சர்வதேச நிதிக்கொடையாளர்கள் இலங்கை அரசாங்கம் மற்றும் வடக்கு மாகாண சபை போன்றோறிற்கு வினயமா ககேட்டுக்; கொள்வது.
1. கடந்த ஆட்சியாளர்களால் நிர் மூலமாக்கப்பட்ட வடக்குக் கிழக்கின் சிவில் சமூகங்களை மீள் நிர்மாணம் செய்வதற்கு அதிகம் கவனம் செலுத்தவேண்டும். இந்தமீள் நிர்மாணம் என்பது பாதிக்கப்பட்ட பகுதிகளின் சிவல் அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் திட்டங்களை வடிவமைத்தல் அவர்களிடமே பொறுப்பக்களை ஒப்படைத்தல் அவர்களே செயற்பாடுகளுக்கு சொந்தம் கொண்டாடுதல் என்ற அடிப்படையில் அமைதல் வேண்டும்.
2.பாதிக்கப்பட்ட சமூகம் சாராத அல்லது நீண்ட யுத்தத்தின் அனுபவங்களோடு தொடர்பில்லாத வெறுமனே வளங்களை தமதாக்கிக் கொள்வதற்காக புற்றீசலாக வடக்கு கிழக்கை நோக்கி பறந்து வருபவர்கள் தொடர்பாக எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். அவர்களின் செயற்பாடுள் திட்டங்கள் தொடர்பான வெளிப்படைத் தன்மையை பேணுவதற்கு உதவ வேண்டும்.
3. புற்றீசலாக முளைக்கின்ற சிவில் சமூக அமைப்புக்களுக்கு பின்னால் ஒரு திட்டமிடப்பட்ட வலையமைப்பும் அரசியலும் உள்ளது என்பதை புரிந்து கொண்டு பாதிக்கப்பட்டோரின் நலன் சார்ந்து செயற்படுவதற்கான வழிப்படுத்தும் ஆற்றலைப் பெறுதல் வேண்டும்.
4. ஆங்கிலத்தில் பேசுதல் ஆங்கிலத்தில் நன்றாகஅ றிக்கையிடுதல் என்ற தகுதிகளைக் கொண்டிருக்கின்ற பாதிக்கப்பட்ட சமூகம் சாராதோர் வளங்களைச் சுறுட்டிக் கொள்வதற்கான வாய்ப்புக்களைத் தடுத்து பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீள் நிர்மாணத்துக்கு உதவுவதற்கான வழிகளைக் கண்டுகொண்டு பாதிக்கப்பட்டவர்கள் வலுவடைவதற்கான வாய்ப்புக்களுக்கான உறுதிப்பாட்டை நிலை நிறுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்ட சமூகத்தின் மீள்கட்டுமாணமே நிலைத்த சமாதானத்திற்கும், மீள் நல்லிணக்கத்திற்கும், நிலைமாறு கால நீதிக்கும் வித்திடும்.
மாறாக கண்துடைப்பாக அவை மேற்கொள்ளப்படாமல் இருக்க அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுவனம் அழைப்பு விடுக்கின்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது