மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்கிய பெருமை எங்களுக்குரியதே. இன்று ஸ்ரீ.ல.சு.கட்சியினர் மைத்திரியை தங்களது ஜனாதிபதி என்று சொல்லிக்கொண்டு ஐ.தே.கட்சியையும் அதன் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அவர்களையும் விமர்சிக்கின்றனர். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவை தோற்கடிக்க சதி செய்து திரிந்தவர்களே இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் இருந்து கொண்டு மைத்திரியைப் போற்றிக் கொண்டு ஐ.தே. கட்சியை விமர்சித்து வருகின்றனர் என்று பாராளுமனற் உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் கூறியுள்ளார்.
மத்திய கொழும்பு மாணவர்கள் ஐயாயிரம் பேருக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) கொழும்பு, மாளிகாவத்தை பீ.டீ. சிறிசேன விளையாட்டரங்கில் இடம் பெற்றது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட இந்நிகழ்வில் உரையாற்றிய முஜீபுர் றஹ்மான் தனதுரையில், மத்திய கொழும்பு மக்கள் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழ்பவர்கள். இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளில் கல்விப் பிரச்சினை மிகப்பிரதானமானதாகும். கடந்த இருபது வருட காலமாக மத்திய கொழும்பு மக்கள் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளார்கள். பலவித பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழும் மத்திய கொழும்பு மக்களை மீட்டெடுப்பதற்கான வழிமுறைகளை அவசரமாக முன்னெடுக்க வேண்டிய நிலையில் நாம் உள்ளோம். இன்றைய தினம் செல்வங்களில் மிகப்பெரிய செல்வமான கல்விச் செல்வத்தை பெறும் மாணவர்களுக்கு உதவிகளை வழங்குவதை ஒரு பாக்கியமாக நான் கருதுகிறேன். மத்திய கொழும்பு மக்களின் கல்வி முன்னேற்றத்தை அடிப்படையாக வைத்து பல வேலைத்திட்டங்களை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்றும் குறிப்பிட்டார்.
மேலும் அவர் தனதுரையில்;
இன்று நல்லாட்சியின் அமைச்சு பதவிகளில் இருந்துகொண்டே சிலர் ஆட்சியை விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக ஐ.தே. கட்சியையும் அதன் தலைவர்களையும் விமர்சித்து வருகின்றனர். குறித்த அமைச்சர்களின் செயற்பாடுகள் நகைப்புக்குரியதாகும். மைத்திரிபால சிறிசேன அவர்கள் மஹிந்த ஆட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியோடு இணைந்தே ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார். ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவிற்கு குழி பறித்தவர்கள், அவரை தோல்வியடையச் செய்ய அயராது பாடுபட்டவர்கள்; அமைச்சர்களாகி இன்று நல்லாட்சியையே விமர்சித்து வருகின்றனர்.
இன்று நல்லாட்சியின் முக்கிய அங்கமாக இருக்கும் ஐ.தே.கட்சியை வீழ்த்துவதற்கு இவர்கள் சதிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு ஒன்றை நாம் ஆணித்தரமாக சொல்லி வைக்க விரும்புகிறோம். மைத்திரியை ஜனாதிபதியாக்கிய எங்களுக்கு நல்லாட்சியை உருவாக்கிய எங்களுக்கு அதனை பாதுகாக்கும் திறனும் சக்தியும் இருக்கிறது. எந்த சதிகளையும் சவால்களையும் முகம் கொடுக்கக் கூடிய சக்திவாய்ந்த கட்சியாக ஐ.தே.கட்சியிருக்கிறது என்றும் முஜீபுர் றஹ்மான் கூறினார்.
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தனதுரையில் ஐக்கிய தேசியக் கட்சியை கடந்த காலங்களில் பாதுகாத்த பெருமை மத்திய கொழும்பு மற்றும் வட கொழும்பு மக்களுக்கிருக்கிறது. கட்சிக்கு சோதனை மிகுந்த காலங்களில் இம்மக்கள் கட்சியை கட்டிக்காத்துள்ளார்கள். நல்லாட்சியை அமைப்பதில் இவர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும் என்றும் குறிப்பிட்டதோடு இம்மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நல்லாட்சி அரசாங்கம் அயராது செயற்படும் என்றும் கூறினார்.
இந்நிகழ்வில் மாகாண சபை மற்றும் முன்னாள் நகரசபை அங்கத்தவர்கள் பலரும் உரையாற்றினர்.