கடந்த காலத்தில் தனக்கு இருந்த அதிகாரங்களுக்கு அமைய ஒரே இரவில் கொழும்பை சுற்றிவளைத்து ஆட்சியை கைப்பற்றும் வல்லமை இருந்தாகவும் எனினும் ஒழுக்கத்தை மீறி செயற்படும் பழக்கம் தனக்கில்லை எனவும் அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இதனிடையே பொன்சேகாவுக்கு பாதுகாப்பு துறையில் உயர் பதவியை வழங்குவதாக ஜனாதிபதி அண்மையில் கூறியமையானது கேலியாக கூறியது என அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டிருந்தார்.
இது குறித்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அமைச்சர் சரத் பொன்சேகா, எஸ்.பி.திஸாநாயக்க அமைச்சர் என்பதால் அவரை மதிப்பதாகவும் அவர் அனைத்தையும் கேலியாக மாற்றிக்கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மனித வாழ்க்கையில் ஒரு முறையாவது ஆழமாக சிந்தித்து செயற்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன தனது பதவி தொடர்பில் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார் எனவும் அவர் கோத்தபாய ராஜபக்சவிற்கு நெருக்கமானர் எனவும் புதிய பதவியால் அவருக்கு பாதிப்பு ஏற்படும் என அச்சத்தில் இருப்பதாகவும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இப்படியானவர்கள் கூறும் கதைகளை பெரிதாக பொருட்படுத்த தேவையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.