எஸ்.ஹமீத்-
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிரதமர் அலுவலகத்தின் முன்னால் இன்று விவசாயிகளினால் முழு நிர்வாணப் போராட்டம் நடைபெற்றுள்ளது. போராட்டக்காரர்கள் ஒட்டுத் துணி கூட உடலில் இல்லாமல் பிரதமர் அலுவலகத்தின் முன்னாலுள்ள வீதியில் உருண்டு புரண்டு கொண்டிருந்ததை ஆயிரக் கணக்கானோர் பார்த்து முகம் சுழித்துள்ளனர்.
தங்களது விவசாயக் கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் மற்றும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்பது போன்ற பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் கடந்த 28 நாட்களாக டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுவிடயமாகப் பிரதமர் நரேந்திர மோடியைத் தாங்கள் நேரில் சந்தித்துப் பேச வேண்டுமென்றும் அவர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர். அவர்களின் அந்தக் கோரிக்கைக்குச் சாதகமான பதிலை வழங்கியிருந்த அதிகாரிகள் இன்று அவர்களைப் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்வது போலப் பாசாங்கு செய்தனர்.
இதனையடுத்து, நாடாளுமன்றத்துக்கு அப்பாலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை அருகே உள்ள செளத் பிளாக் கட்டடத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்துக்கு விவசாயிகள் ஏழு பேர் அழைத்துச் செல்லப்பட்டனர். அதன்பின்னர் வரவேற்பறையில் உள்ள அதிகாரிகளிடம், தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுக்குமாறு அவர்களை வற்புறுத்தினர் அதிகாரிகள். ஆனாலும் பிரதமரை நேரில்சந்தித்துதான் மனுக்கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கூறினார். அதற்கு அதிகாரிகள் சம்மதிக்கவில்லை.
அதன்பின்னர், வேறு வழியின்றி அவர்கள் தமது மனுவை அங்குள்ள அதிகாரிகளிடம் கையளித்துவிட்டு பொலிஸ் வாகனத்தில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக போராளிகளில் ஒருவர் வாகனத்திலிருந்து கீழே குதித்து, தனது ஆடைகள் அத்தனையையும் கழற்றிவிட்டு வீதியில் உருண்டு புரளத் தொடங்கினார். இச்சம்பவத்தால் வாகனம் நிறுத்தப்பட, ஏனைய போராளிகளும் வாகனத்திலிருந்து பாய்ந்து வந்து ஆடைகளைக் களைந்துவிட்டுப் பிறந்த மேனியாக வீதியில் படுத்துப் புரளத் தொடங்கினர்.
முதலில் செய்வதறியாது திகைத்த போலீசார் பின்னர் அவர்களை பிடித்து வலுக்கட்டாயமாகத் தமது வாகனத்தில் ஏற்றிக் கொண்டு சென்றனர். இதனால் அந்தப் பகுதி சிறிது நேரம் பெரும் பரபரப்புக்குள்ளானது.
இதற்கிடையில், தமிழக போராட்ட விவசாயிகளை ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்து சென்ற தலைமை காவலர் பகதூர் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளதாக பிந்திய தகவலொன்று தெரிவிக்கிறது.