மாகாணங்கள் தோறும் மக்கள் அவையங்கள் அமைத்திடுவோம்-

ரலாற்றுக் காலங்களில் உலக வல்லரசுகள், வல்லரசாக முனையும் நாடுகளுக்கும் நமது நாடு இன்றியமையாத ஒன்றாகவே அமைந்திருந்தது. நம் நாட்டின் அமைவிடமும் வளங்களும் அதற்குக் காரணமாகிப்போயின. போர்த்துக்கேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் என்போர் வெளிப்படையாகவும், தொடர்ந்து இன்றுவரை அவர்களும் அவர்களைப் போன்றோர்களும் சொல்வதைக் கேட்கின்ற கிளிப்பிள்ளைத் தலைவர்களை உருவாக்குவதன் மூலமும், இலங்கையின் இறைமையை தங்கள் கைகளில் வைத்துக் கொள்வதற்கான போட்டிகளும் போராட்டங்களும் தொடர்ச்சியாகவே நடந்து வருகின்றன. உள்நோக்கம் கொண்ட இவ்வெளிநாடுகளின் தீய சக்திகளினால் இலங்கை அரசு, நாடு தொடர்பாகவும், அங்கு வாழ்கின்ற மக்கள் தொடர்பாகவும் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய பல சந்தர்ப்பங்களில் தள்ளாடி தடுமாறியிருக்கிறது.

இந்த வரிசையில்,
இலங்கை அரசின் இன்றைய நகர்வுகளும் அதன் பின்புலத்து நோக்கங்களும், வெளிநாட்டு சக்திகளின் நிகழ்ச்சி நிரல்களுக்கு அது துணைபோயிருப்பதையே காட்டியிருக்கிறது. இத்தீய சக்திகளினால் தோற்றுவிக்கப்படும் இனவாத கோர செயற்பாடுகளின் விளைவால் தமிழ் சமூகம் மாத்திரமன்றி, குறிப்பாக முஸ்லிம்களின் சமூக, அரசியல், பொருளாதார, கலாசார மேம்பாடுகளும் கேள்விக்குறியாகியுள்ளது. அவர்களின் இருக்கை, பாதுகாப்பு தொடர்பில் அரச தரப்பிலிருந்து சிறிய வெளிச்சத்தையேனும் காண முடியாதிருப்பது பாரிய அச்சத்தை தோற்றுவித்திருக்கிறது.

இச்சூழ்நிலையில்
உலகம் முடியும்வரை இந்நாட்டில் சிங்கள மக்களோடும் தமிழர்களோடும் மகிழ்ச்சியாக சகவாழ்வு வாழ்வதற்கு, கடந்த காலங்களில் நம் சமூகத் தலைவர்கள் சிந்தித்து செயற்பட்டதை விடவும், இக்காலத்தில் வாழ்கின்ற நாம், இன்றைய நெருக்கடி நிலைமை தொடர்பாக ஆழமாக சிந்தித்து விரைவாக செயற்படவேண்டியுள்ளதனை ஏற்றுக் கொள்வீர்கள். மேலும் முழுப் பாராளுமன்றமும் அரசியல் யாப்புமாற்றம் தொடர்பான சபையாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கின்ற இச்சூழ்நிலையில் முறையாக முகம் கொடுத்து வரலாற்றில் தடம் பதித்து நம்மவரும், நம் பின்னவரும் சுதந்திரம் பெற வேண்டுமென்பதே எனது பிரார்த்தனையாகும்.

மேலும்
உலகின் எந்த நாட்டில், எந்தப் போர்வையில் எவ்வாறான சக்திகள் ஊடுருவி ஊளையிட்டாலும் ஈற்றில் அது, உலக முஸ்லிம் உம்மாவிற்கு வேட்டு வைக்கும் நோக்கத்தை மாத்திரமே அச்சக்திகள் அடிப்படையாகக் கொண்டிருப்பதனை கண்கூடாகவும், கேட்டும் அறிந்திருக்கிறோம். காஷ்மீர் பிரச்சினையாக இருக்கட்டும், நமது அண்டை நாடான இந்தியாவின் இன்றைய மோடி அரசாங்கத்திலும் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்ற கொடூரங்களும் மேலும் அதனை நிரூபித்திருக்கிறது. அங்குபோன்றே இலங்கை முஸ்லிம்களின் தனியார் சட்டத் திருத்தம், 'முத்தலாக்' போன்ற விடயங்களிலும் மூக்கை நுழைத்திருப்பதனை நாம் நிதர்சனமாகக் காண்கின்றோம். சரித்திரங்களைத் தொடர்ச்சியாக பதிவிடுவோர் இதனை மிக எளிதில் கண்டு கொள்வர்.


வரலாற்றுக் காலங்களில் இந்நெருக்கடியான சூழ்நிலைகளின்போது முஸ்லிம் சமூகத்திற்கு அவ்வக்காலத்து அரசுகளினால் இழைக்கப்பட்ட அநீதிகள் ஏராளம். அவ்வக்காலத்து நம் முஸ்லீம் தலைமைகள், அவ்வாறான அநீதிகளுக்கு முகம் கொடுத்து தீர்த்து வைப்பதற்கு எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதனை, இன்றைய நம் சமூகம் சற்று ஆழமாகவே ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது. அன்றைய நமது மகான்கள், பிரச்சினைகள் தீரவேண்டும் என்று முதலில் இதய சுத்தியோடு இறைவனை வேண்டி செயலிலும் ஈடுபட்டிருந்தார்கள். இதுவே நம் சமூகம் தொடர்பான அவர்களுடைய வெற்றிக்கு அத்திவாரமாயும் அமைந்திருந்தது. அவர்களின் எண்ணமே நம்மவரின் வாழ்வாகியும் போனது. அம் மகான்கள் அன்றைய அரச தலைமைகளிடம் - நாம் இலங்கைச் சோனகர் என்ற உரிமையோடும் அவர்கள் தக்க வைத்துக் கொண்ட கௌரவத்தோடும் பேசி, நாட்டின் தலைமைகளிடம் தீர்வுகளை உச்சமாகப் பெற்றிருக்கிறார்கள். இவைகள் இன்று மறக்கடிக்கப்பட்டிருக்கிறது.

இன்றோ...
நம் அரசியல் தலைமைகள் வௌ;வேறு தீய சக்திகளின் வலைகளுக்குள் சிக்குண்டு வெறும் சுயநலத் தேவைகளுக்காக மாத்திரம் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இத்தலைவர்களை முன்னையத் தலைவர்களோடு ஒப்பிடுகையில், நம் சமூகம் வேதனையடையாமல் இருக்க முடியாது. மேலும் அச்சதிகாரர்களின் மீறமுடியாத பணிப்புகளினால் ஆட்சி மாற்றங்களிலும் முண்டியடித்து முந்திக் கொண்டு செயற்பட்டு அவர்களும், அவர்களால் மக்களும் தோற்கடிக்கப்பட்ட வரலாறுகளும் உண்டு. ஆனால் இவ்வேளையிலும் கூட அவர்கள் பெட்டிப் பாம்பாய் அடங்கி முடங்கிக் கிடப்பதைப் காணுகின்ற பொழுது வெட்கமாக இருந்தாலும், பாவம் மக்களை நினைத்து அழவேண்டியும் உள்ளது. நமது சமூக உரிமைகளுக்கு வேட்டு வைக்கப்படுகின்ற இன்றைய சந்தர்ப்பங்களிளெல்லாம் நம் தலைமைகள் தட்டுத்தடுமாறிக் கொள்வதன் மூலமும், சரி செய்து கொள்வதற்கு முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதுவும் இதனை நிரூபித்திருக்கிறது. இவர்களினுடைய இச்செயற்பாடுகள் முஸ்லிம்களை நன்றி கெட்டவர்களாகவும், இனவாதிகளாகவும் மற்றவர்களால் பார்க்கப்படுவதற்கும் துணைபோயிருக்கின்றது. இன்றோ மொத்த முஸ்லிம் சமூகத்துள்ளும் பயங்கரவாதிகளைத் தேடுகின்ற பேச்சுகள் பரவலாகப் உரத்துப் பேசப்படுவதற்கு காரணமாயும் அமைந்தது. நம் தலைவர்களின் இச் செயற்பாட்டை நமது புத்திஜீவிகளும், ஆய்வாளர்களும், ஏன் இன்று பொதுமக்களும் உணர்ந்து விட்டார்கள்.

இந்நிலமையினை எதிர் கொள்வதற்கு, இன்றைய நமது அரசியல் தலைமைகள் - தலைவருக்காகக் கட்சி, கட்சிக்காக மக்கள் என்ற மறுதலைச் சூத்திரத்தைப் பாவித்து மக்களை ஏமாற்ற முனைகின்றார்கள். இதனால் சமூகத்திற்காக கட்சியும் கட்சிக்காக தலைமையும் என்ற சத்தியம் தவிடுபொடியாகிக் கொண்டிருக்கிறது. மேலும், கட்சி என்பது காலத்தின் தேவை என்று அழுத்திச் சொல்வதை விடவும், அது முஸ்லிம்களின் மார்க்கமாகவும் அல்லாஹ்வுக்குப் பயமின்றி திணிக்க முற்படுவதனை நம் புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் இப்போது அறிந்து கொண்டாலும் நம் பாமரத் தாய் அறியமாட்டாள்.

இதனால் நம் அப்பாவி அன்புத் தாய்மார்களின் முந்தானை ஏந்திய பிரார்த்தனையோடு கலந்த நம் அரசியற் போராட்டத்தை, முன் கொண்டு தொடர்ந்து செல்கின்ற பொறுப்பை இன்றைய அரசியற் தலைவர்களிடம் மாத்திரம் ஒப்படைப்பதென்பது நம் பின் சந்ததியினருக்கு நாம் செய்யும் பெரும் துரோகமாகும் என்பதனை என் அன்புச் சமூகம் ஏற்றுக் கொள்ளும். அன்றியும், இவ்வரலாற்றுக் காலத்தில் நாமும் நம் பின் சந்ததியினரும் தோற்றுப்போக முடியாது என்பதனையும் ஏற்றுக்கொள்ளும்.

மேலும்,
மாகாணங்கள் தோறும் அதிகாரப் பகிர்வு, சமஷ்டிக்குச் சமனான அதிகாரம் என்ற விவாதங்கள், தேர்தல் முறையில் மாற்றம், வடக்கு - கிழக்கு மக்களுக்கான தீர்வு என்பன பற்றி சிறுபான்மைச் சமூகங்களில் ஒன்றான நம் சமூகம் அந்தந்த மாகாணங்களில் வாழ்கின்ற மக்களுக்காக மட்டுமன்றி அம்மாகாணங்களின்; எதிர்கால சந்ததிகள் தொடர்பாகவும் பயபக்தியோடு ஆழமாக ஆராய்ந்து விரைவாகச் செயற்பட வேண்டியுள்ளது. இந்த அடிப்படையின் யதார்த்தத்தை இதயசுத்தியோடு ஏற்று தொழிற்பட நம் சமூகத்திற்கு அறைகூவல் விடுகின்றேன்.

இதற்கிணங்க
முதற்கட்டமாக, 'சுதந்திரக் கிழக்கின் வரலாற்று ஒன்றுகூடல்' என்ற தலைப்பில் மேற்சொன்ன விடயங்கள் தொடர்பில் உரையாடுவதற்கு ஒன்றுகூடல் ஒன்று என்னால் அக்கரைப்பற்றில் 2017.04.02ஆம் திகதி ஆரம்பித்து வைக்கப்பட்டது. இவ்வொன்றுகூடலில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தின் அரசியலாளர்கள், புத்திஜீவிகள், சமூக அமைப்புக்களின் தலைவர்கள், பள்ளிவாசல் சம்மேளனத் தலைவர்கள், கன்னியமிக்க உலமாக்கள், மூத்த அரசியற் போராளிகள் என்று பொறுப்புள்ளோர் பெருமளவில்; கலந்து கொண்டு, கருத்துக்கள் பரிமாறப்பட்டன. இச்சந்தர்ப்பத்தில் நம் சமூகம் சார்பாக கலந்து கொண்டவர்களுக்கு நன்றிகூறுவது பொருத்தமாய் உள்ளதால், வருகை தந்தவர்கள் இந்நன்றியினை ஏற்றுக் கொள்ளுங்கள். அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் விஷேட நன்றிக்குரியவர். இன்னும் சிலர், வந்துகொள்ளக் கிடைக்காமைக்கு வருத்தம் தெரிவித்து, வாழ்த்துக்களையும் அனுப்பி வைத்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ். ஆர்வம் பன்மடங்கானது.

இந்த ஒன்று கூடலின் இறுதியில் வருகை தந்தோர் பேராளர்களாக மாறி, 'கிழக்கு மக்கள் அவையம்' என்ற ஒரு சபையைத் தோற்றுவித்தனர். அதனுடைய ஆரம்ப நிருவாகப் பணிகள் சம்பந்தப்பட்டவர்களால் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறேன். அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த அவையில், கிழக்கு மாகாணத்தின் எல்லா அரசியல் செயற்பாட்டாளர்களும் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி ஒன்று சேர்வதற்கும் புத்திஜீவிகள், நிறுவனத் தலைவர்கள், உலமாக்கள், பள்ளிவாசலின் தலைவர்கள் போன்ற எல்லா தரப்பினரையும் உள்வாங்கி அவர்களுடைய ஒத்துழைப்புக்களையும் கருத்து வேறுபாடுகளுக்கப்பால் ஒன்றிணைப்பது என்று தீர்மானிக்கப்பட்டது.

இவ்வமைப்பானது கட்சிகளின் சுய அபிலாஷைகளுக்கப்பால் சமூகத்திற்கு அறப்பணி செய்வதற்காக அரசியல்வாதிகளை ஒரு நேர்கோட்டில் இட்டுச் செல்வதற்கு மட்டுமன்றி, அரசியல் தலைமைகளை மாத்திரம் பாவித்து தீய சக்திகள் நம்மை வீழ்த்துவதற்கு எத்தணிக்கும் சதிவலைக்கு மொத்த முகக்; கொடுப்பாகவும் அமையும். மேலும், சகோதர சமூகமான தமிழ் சமூகத்தின் அபிப்பிராயங்களை உத்தியோகபூர்வமாக கேட்டுப் பெறவும் அவ்வாறே முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளை அவர்களுக்கு உணர்த்தவும் சிங்கள சமூகத்தோடு தனித்தும், தேவைப்பட்டால் தமிழர்களோடு சேர்ந்தும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் வாழும் முஸ்லிம் மக்களும் இறுதித் தீர்வு பெற காத்திரமாகப் பங்களிக்கவும் வழிசமைக்கும். அன்றியும் யாப்பு மாற்றத்தில் சிறுபான்மை மக்களின் அபிலாஷைகள் தொடர்பாக காலத்திற்கேற்றவாறான கலந்துரையாடல்களுக்கு வலுவூட்டும். இன்ஷா அல்லாஹ் அது வெற்றியுமளிக்கும். பிரார்த்தியுங்கள்.

இதேபோன்றுதான் வடமாகாணத்து முஸ்லிம்கள் இன்று எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதற்கு அம்மாகாணத்தில் அதிகமதிகம் புத்திஜீவிகளும், சமூகத்தலைவர்களும் கன்னியமிக்க உலமாக்களும் ஒன்று சேர்வது அவசியமாகும். அம்மாகாணத்தின் மாற்றுக் கருத்துகளுள்ள வௌ;வேறு கூடாரங்களில் இருக்கும் அரசியல் தலைமைகளையும் இதனோடு ஒன்;றிணைத்து செயற்படுவது இன்றியமையாததொன்றாகும். இதன் மூலம் உள்நோக்கங்களோடு செயற்படுவதாக குற்றஞ்சாட்டப்படும் அரசியல் தலைமைகள் நிருபராதி என்றால் அவர்களுக்கு நிவாரணமும் கிடைக்கும்.

இவ்வாறே, ஏனைய ஏழு மாகாணங்களிலும் இதுபோன்ற சபைகள் அமைக்கப்பட வேண்டும். ஈற்றில் 09 மாகாணங்களிலுமுள்ள அச்சபைகளிலிருந்து பிரதிநிதிகள் ஒன்றுகூடுகின்ற தேசிய ரீதியான சபையினை, தலைமைத்துவ சபை என்றோ அல்லது மசூறா சபை என்ற பெயரிலோ அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒவ்வொரு மாகாணத்தில் வாழும் முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பாக எல்லோரும் ஆழமாக அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும். இதன்போதுதான் கட்சி, பிரதேச, அரசியல் பாகுபாடுகளுக்கப்பால் முஸ்லிம் சமூகத்தின் பொதுவான விடயங்களை பேசி தீர்வு காணுகின்ற உண்மைக் குரலொன்றை உறுதிப்படுத்த முடியும். நம் சமூகம் குழுக்களாக சிதறுண்டு தோற்றுப்போவதனையும் தவிர்க்க முடியும்.

எனவே, இந்நாட்டில் முஸ்லிம்கள் எதிர்நோக்குகின்ற ஒட்டுமொத்தமான அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வினைப் பெற்றெடுக்க ஒத்தகருத்தோடு முகம் கொடுக்க வேண்டியிருக்கிறது. இதற்காக மாகாணங்கள் தோறும் மக்கள் அவையங்களை உருவாக்க அவரவர் சக்திக்கு உட்பட்டவகையில் பாடுபடுங்கள். இதன் மூலம் சுயநல அரசியல்வாதிகளினால் எமக்கு ஏற்படப்போகும் தீங்குகளிலிருந்து நம் மக்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கும் 'இவ்வவையம்' இன்றியமையாதாது என்பதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள். அன்றியும் பிரதேச, மாகாண வாதங்களுக்கப்பால் நாம் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு இது அத்திவாரமாகவும் அமையும்.

நம் சமூக அரசியலும் ஆத்மீக செயற்பாடுகளில் ஒன்றுதான் என்ற உணர்வுகளோடு முடியுமானவரை நம் உலமாக்கள், புத்திஜீவிகள், அரசியற் செயற்பாட்டாளர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து இம்முயற்சிக்காகப் பாடுபடுங்கள். நம் ஊடகவியலாளர்கள், முகநூல் எழுதுநர்கள் இச்சத்திய செயற்பாட்டுக்காய் விரைந்து தொழிற்படுங்கள்.

இதற்காக,
ஒவ்வொரு மாகாணத்திலும் வௌ;வேறு அரசியல் கூடாரங்களிலும் இருக்கின்ற என் உடன்பிறப்புகள் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவை வித்தியாசமான வர்ணக் கண்ணாடி கொண்டு பார்க்கத் தேவையில்லை. #அதாஉல்லாவின் #கருத்தில் #உயிர் #இருப்பதனை #நீங்கள் #ஏற்றுக் #கொண்டால் அதிகமதிகம் புத்திஜீவிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கூடவே எதிர்காலத் தலைமைகளாம் இளைஞர்களும் மாகாணம் தோறும் ஒன்றுகூடுங்கள். இப்பணியினைச் செய்வதற்கு ஒவ்வொரு மாகாணத்திலும் ஒவ்வொரு புத்திஜீவிகள் என்று இதயசுத்தியோடு செயற்பட்டாலே போதுமானது. ஆனாலும் இவ்வாறான சத்திய செயற்பாடுகளுக்கு கைகொடுப்பதற்கு துடித்துக் கொண்டிருக்கின்ற நம் இளைஞர் கூட்டத்தினரின் உணர்வுகளைப் பார்க்கின்ற பொழுது இம்முயற்சி கைகூடும் என்ற திருப்தியோடு மகிழ்ச்சியடைகின்றேன். அல்ஹம்துலில்லாஹ். நம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு முறையான தீர்வுகளைத் தேடும் இச்செயற்பாட்டிற்கு உங்களின் உச்ச பங்களிப்புகளை காணிக்கையாக்குங்கள். ஏனெனில் இன்றைய இளைஞர்களே நாளைய தலைவர். ஆண்டவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.

தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான
#ஏஎல்எம். #அதாஉல்லா அவர்களின் ஊடகப் பிரிவு
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -