சப்னி அஹமட்-
கிழக்கு மாகாணம் அம்பாறை மாவட்டம், இறக்காமம், வாங்காமம் பிரதேசத்தில் அன்மையில் ஏற்பட்ட அனர்த்தம் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இறக்காமம் வைத்தியசாலையில் 20ற்கும் குறைந்த நோயாளர்களே தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல் முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் ஏற்பாட்டில் உயர் அதிகாரிகளுடன் இறக்காமம் பிரதேசத்தில் அன்மையில் இடம்பெற்ற உணவு ஒவ்வாமை காரணமாக கல்முனை மாநாகர சபையில் இன்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;
குறித்த சமபவத்தில் இதுவரை 3பேரே மரணித்துள்ளார்கள் அது போல் 950 பேர் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டு 03 கட்ட வைத்திய சேவையில் அனுமதிக்கப்பட்டனர், அதில் கல்முனை பிராந்தியத்தில் உள்ள ஆதார வைத்தியசாலைகளிலும், பிரதேச வைத்தியசாலைகளிலும் அனுமதிக்கப்பட்டனர். அம்பாறையில் 02 பேர் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விவகாரம் தொடர்பாக நாம் மரண அறிக்கையை எதிர்பார்க்கின்றோம் மிகவிரைவில் முழு விபரமும் கிடைக்கும்.
அது போல் இனி வரும் காலங்களில் கல்முனை பிராந்தியத்தில் நடைபெரும் விசேட நிகழ்விகளில் சமைக்கப்படும் சமையல்களுக்கு சுகாதார அதிகாரிகளிடம் அனுமதி பெற்றே உணவு பகிரப்படவேண்டும். அது போல் மரணித்தவர்களுக்கு நஸ்ட ஈடு வழங்குவது தொடர்பாகவும், வைத்தியசாலைகளில் உள்ள பிரச்சினைகள் பற்றியும், இயந்திரங்கள் மற்றும் மருத்துவப்பொருட்கள் வழங்கப்பட்டது தொடர்பாகவும், உள்ளுராட்சிமன்ற திணைக்களங்களின் ஒத்துழைப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
மேலும், குறித்த பிரச்சினைகள் தொடர்பான முழுமையான அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்குமாறும் கேட்டுக்கொண்டதுடன் எதிர்வரும் சில நாட்களுக்கு தொடர்ந்தும் வைத்தியர்கள் தாதியர்களை கடனையில் ஈடுபடுவதற்கும் 24 மணிநேர வெளிநேயாளர்பிரிவை இயக்க வைப்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் நோயினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிடுவதற்காக இறக்காமம் வைத்தியசாலைக்கும், சம்மாந்துறை வைத்தியசாலைக்கும் விஜயம் மேற்கொண்டு அவர்களின் நிலையினை பார்வையிட்டு அங்குள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடினர்.
இதன் போது கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அதன் அதிகாரிகள் பிராந்திய வைத்திய பணிப்பாளர், உள்ளுராட்சி திணைக்கள செயலாளர்கள் உள்ளிட்டவர்களுடன் பல முக்கியஸ்தர்களும் கலந்துகொணடனர்.