எம்.ரீ.ஹைதர் அலி-
இலங்கையிலுள்ள 64 முதியோர் பராமரிப்பு நிலையங்களுள் காத்தான்குடியிலுள்ள இவ்முதியோர் பராமரிப்பு நிலையம் மாத்திரமே ஒரேயொரு முஸ்லிம் முதியோர் பராமரிப்பு நிலையமாகும். சில வேளைகளில் மாற்று மதத்தவர்களினால் நடாத்தப்படுகின்ற முதியோர் பராமரிப்பு இல்லங்களில் தமது கடைசி காலத்தை கழிப்பவர்கள் தமது மரண நேரத்தில் முஸ்லிம் அல்லாத நிலையில் மரணிக்கக்கூடிய ஒரு துர்பாக்கிய நிலைகூட ஏற்படுகின்றது. என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்கின் 2016 ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டிலிருந்து காத்தான்குடி முஸ்லிம் முதியோர் இல்லத்திற்கு சலவை இயந்திரம் மற்றும் அலுமாரி என்பன வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.04.09ஆந்திகதி-ஞாயிற்றுக்கிழமை முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதோ கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
வறுமை மற்றும் இயலாமை காரணமாக தமது வாழ்வின் இறுதிக் கட்டத்தில் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாக மாறி விடாமல் மிகவும் சிறந்ததொரு சூழலில் மிகவும் நேர்த்தியான முறையில் கடந்த 25 ஆண்டுகளாக இப்பராமரிப்பு நிலையம் இயங்கி வருகின்றமையானது இந்த முதியோர் பராமரிப்பு நிலைய நிருவாகத்தின் அர்பணிப்பு மிகுந்த சேவையினை எடுத்துக்காட்டுகின்றது.
எனவே இத்தகைய நிறுவனங்களை மேலும் வளப்படுத்துவதன் மூலம் சிறந்த விதத்தில் இயங்குவதற்கு உதவ வேண்டிய தேவையும் பொறுப்பும் எங்களுக்கு உள்ளது. அந்தவகையில் எதிர்காலத்திலும் எங்களால் முடியுமான அனைத்து விதமான உதவிகளையும் இந்நிறுவனத்திற்கு பெற்றுக்கொடுக்கவுள்ளோம் எனவும் என தனது உரையில் தெரிவித்தார்.