யாழில் கடந்த காலங்களில் அதிகரித்து காணப்பட்ட வாள்வெட்டு, வன்முறைகள் மற்றும் குற்றச்செயல்கள் பொலிசாரின் தீவிர நடவடிக்கைகளால் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இவ்வருடத்திற்கான யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக்குழு கூட்டம் இன்று யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் யாழ். மாவட்டத்தில் தற்போது அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனை கஞ்சா உள்ளிட்ட பாரிய போதைப் பொருட்கடத்தல்களை பொது மக்களின் ஒத்துழைப்புடன் கட்டுப்படுத்துவது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இதன்போது பொதுமக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் மக்கள் பிரதிநிதிகளால் பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் பாரிய குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை கட்டுப்படுத்த பொது மக்களின் ஒத்துழைப்பை தாம் பெரிதும் எதிர்பார்ப்பதாக யாழ். மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து கடந்த காலங்களில் பொதுமக்களை பெரிதும் அச்சுறுத்தி வந்த வாள்வெட்டு வன்முறைகள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என சுட்டிக்காட்டினார்.
இந்த கலந்துரையாடலில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சஞ்சீவ தர்மரட்ன, யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஸ்டனிஸ்லஸ், காங்கேசன்துறை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன், வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் தவராசா, யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள், பல்கலை விரிவுரையாளர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.