மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள குப்பை கூழங்களை கொடுவாமடு நோக்கி கொண்டும் செல்லும் நடவடிக்கையினை உடனடியாக எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் ஆரம்பிக்க வேண்டுமென கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் பணிப்புரை விடுத்துள்ளார்,
கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்துக்கு குப்பைகளை கொண்டு செல்லும் பணியில் கால தாமதங்கள் ஏற்பட்டிருந்த நிலையில் முதலமைச்சரின் தலைமையில் நேற்று ஏறாவூர் நகர சபையில் நடத்தப்பட்ட அவசரக் கூட்டத்தின் போது இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது,
இந்தக் கூட்டத்தில் கிழக்கு முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ அசீஸ்.உள்ளூராட்சி மன்ற உதவி ஆணையாளர் சித்திரவேல், மட்டக்களப்பு நகர சபை மற்றும் பிரதேச சபைகளின் செயலாளர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத் திட்ட அதிகாரிகளும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி ,காத்தான்குடி,மட்டக்களப்பு ஏறாவூர் மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச மற்றும் நகர சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குப்பைகளை விரைவில் தரம்பிரித்து அவற்றை கொடுவாமடு திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையத்திற்கு எதிர்வரும் 17 ஆம் திகதிக்குள் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் கட்டாயப் பணிப்புரை விடுத்தார்.
அத்துடன் தமது நகர மற்றும் பிரதேச சபைகளுக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கழிவகற்றும் செயற்பாடுகள் குறித்து அதிகாரிகள் துரிதமாக செயற்பட வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டார், கொடுவமடு திண்மக்கழிவகற்றும் முகாமைத்துவ நிலையம் ஐக்கிய நாடுகள் சபையின் சேவைத்திட்டத்தின் நிதியுதவியின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.