பிரவ்ஸ்-
முஸ்லிம் பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பாதுகாப்பு முகாம்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கொள்கையளவில் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இன்று (05) பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமுடனான கலந்துரையாடலியே இந்த இணக்கம் காணப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள கருமலையூற்று பள்ளிவாசலை அண்மித்துள்ள இராணுவ முகாம், தோப்பூர் 10 வீட்டுத்திட்டத்தை ஆக்கிரமித்துள்ள பாதுகாப்பு முகாம், மூதூர் பிரதேசத்திலுள்ள தக்வாநகர் கடற்படை முகாம் மற்றும் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலமுனை கடற்கரையோரம் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு முகாம் என்பவற்றை அகற்றி அந்தக் காணிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் மன்சூர் ஏ. காதிர், முப்படை அதிகாரிகள், பாதுகாப்பு அமைச்சின் உயரதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
கருமலையூற்று பள்ளிவாசல் காணிகள் இராணுவத்தினால் சுவீகரிக்கப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்துமாறும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கடந்த மாதம் பாராளுமன்றத்தில் காரசாரமான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். இந்நிலையிலேயே குறித்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இராணுவ முகாமை அங்கிருந்து அகற்றுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
காணி சுவீகரிப்பு சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் கருமலையூற்று பள்ளிவாசல் மற்றும் அதனை அண்டியுள்ள காணி என்பவற்றைச் சேர்த்து 4.65 ஹெக்டேயர் பரப்பளவுடைய காணியை இராணுவத்தினர் தேவைக்காக சுவீகரிப்பதற்கான அறிவித்தலொன்றை பட்டிணமும் சூழலும் பிரதேச செயலாளர் விடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.