பாறுக் ஷிஹான்-
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். பிராந்திய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஹஸ்ரன் கனிஸ்ரஸ் தெரிவித்துள்ளார். இதனடிப்படையில் ஆலயங்கள், பொது மக்கள் ஒன்று கூடும் இடங்களில் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் இன்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் பல்வேறு நிகழ்வுகளும், சமய வழிபாடுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், குறித்த நிகழ்வுகளின் போது குழப்பங்கள் ஏற்படாதவாறு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
யாரேனும், குழப்பங்களை ஏற்படுத்துவறாக இருந்தால், அவர்கள் குறித்து உடனடியாக பொலிஸாருக்கு அறியத்தருமாறும், முறைப்பாடுகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், குழப்பங்களை விளைவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்த விசேட பொலிஸ் பாதுகாப்பிற்காக வெளி மாவட்டங்களில் இருந்து பொலிஸார் வரவழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விசேட ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் அதேவேளை, சிவில் உடையணிந்தும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார்கள்.
இதேவேளை, மோட்டார் சைக்கிளில் தேவையற்ற விதத்தில் சுற்றி திரிபவர்கள், மது போதையில் அலைந்து திரிபவர்கள் தொடர்பில் இதன் போது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.