இலங்கையின் வரலாற்றில் இந்த காலப்பகுதியானது மிகவும் முக்கியமானதாகும்..!

மிழர்களுடைய போராட்டம் அகிம்சை வழிப்போராட்டமாக இருந்து பிற்பாடு அது ஆயுத போராட்ட வடிவமாக மாறியிருந்தது, அந்த ஆயுத போராட்ட வடிவம் ஏதோஒரு வகையில் முடிவுக்கு வந்த நிலையில், இன்று அது சர்வதேசத்தின் கைகளுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் சர்வதேசத்தின் அழுத்தம் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியதிலிருந்து இலங்கையின் சகல விடயங்களிலும் அவர்களின் கை ஓங்கி வருகின்றதையும் நாம் அவதானிக்கின்றோம்.

இந்த நிலையில் இலங்கை அரசாங்கமும் சிறுபாண்மை மக்களின் அரசியல் அபிலாசைகளை கணக்கிலெடுத்து ஏதோ ஒருவகையில் அந்த பிரச்சினையை தீர்த்து வைக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். இந்த நிலையில்தான் பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக மாற்றப்பட்டு, ஒரு புதிய அரசியலமைப்பு ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்ச்சியில் இறங்கியிருக்கின்றது.

இந்த நேரத்தில் இந்த விடயத்தில் முஸ்லிம் தரப்புக்களின் பங்களிப்புக்கள் அவ்வளவு திருப்திகரமானதாக அமையவில்லை என்பது கவலையளிக்கக் கூடியதாக உள்ளது.

இன்று முஸ்லிம் மக்களின் வாக்குகளை பெற்று பாராளுமன்றம் சென்றுள்ள முஸ்லிம் கட்சிகளில் இரண்டு கட்சிகள் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றன, அது ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்கின்ற கட்சிகளாகும். இந்த கட்சிகள் ஆளும் அரசாங்கத்தோடு இணைந்து கொண்டும், அமைச்சர் பதவிகளையும் இதர சலுகைகளையும் பெற்றுக்கொண்டும், அந்த வேலைகளைப் பார்ப்பதற்கே அவர்களுக்கு நேரம் போதாமல் உள்ள அதே நேரம், அவர்களின் கட்சிகளுக்குள்ளும் ஆயிரம் பிரச்சினைகளை அவர்கள் சந்தித்தும் வருகின்றார்கள்.

இந்த நிலையில் மிக முக்கியமான அரசியல் சீர்திருத்த நடவடிக்கையில் பரிபூரண கவணத்தை இவர்கள் செலுத்து கின்றார்களா என்றால், அது இல்லை என்றே கூறவேண்டியுள்ளது. இப்படியான சந்தர்ப்பத்தில் வடகிழக்கு இணைப்பை தமிழ் தரப்பினர் முன்னிலைப்படுத்தி, அது இணைக்கப்பட்டால்தான் மற்ற விடயங்களை முன்னெடுப்பது சாத்தியமாகும் என்று அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதை நாம் காணலாம்.

அப்படி வடக்கும் கிழக்கும் இணைக்கப்பட்டால் கிழக்கிலே வாழும் முஸ்லிம்களின் அரசியல் பலம் குறைக்கப்படும், அதனால் இந்த விடயத்தில் முஸ்லிம்களின் நிலைப்பாடு என்ன என்ற விடயத்தில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கருத்தை முன்வைத்து வருகின்றார்கள். அதிலே வடகிழக்கு பிரிப்புக்கு முக்கிய பங்காற்றிய முன்னால் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா அவர்கள், அதேபோன்று இன்றய ராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்கள், அதே போன்று அ.இ.ம. காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்கள் போன்றோர் கொள்கையளவில் சில முடிவுகளை பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

ஆனால் ஸ்ரீ.ல.மு.காங். தலைவர் அமைச்சர் ரஃப் ஹக்கீம் அவர்கள் இந்த வடகிழக்கு விடயத்தில் தெளிவான முடிவை இதுவரை முன்வைக்கவில்லை, இதன் காரணமாக அவர் இந்த விடயத்தில் என்ன முடிவில் இருக்கின்றார் என்பதில் தெளிவுத் தண்மை இல்லாமல் இருக்கின்றது.

இந்த நிலையில்தான் கட்சி வேறுபாடுகளை ஒருபக்கம் வைத்து விட்டு கிழக்கிலே உள்ள புத்திஜீவிகள்,சகல துறைகளையும் சேர்ந்த அரசியலில் ஆர்வமுள்ளவர்களையும் ஒன்று சேர்த்து, இந்த அரசியல் தீர்வு விடயத்தில், குறிப்பாக வடகிழக்கு இணைப்பு விடயத்தில் கிழக்கு மக்களின் அபிலாசைகள் என்ன என்று அறிந்து, அதனை ஒரு தீர்வாக முன்வைப்பதற்கு முன்னால் அமைச்சர் அதாவுல்லா அவர்களினால் ஒரு முயற்சியொன்று முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த முயற்சி காலத்துக்கேற்ற சிறந்த முயற்சியாகும். அதே நேரம் இதனை அரசியல் சாயம் பூசி இந்த செயல்பாட்டை தடுப்பதற்கும் சில பேர் முயற்சிப்பதையும் நாம் அவதானிக்கின்றோம். இருந்தாலும் இந்த முயற்ச்சி அதாவுல்லா அவர்களினால் முன்னெடுக்கப்பட்டாலும், அவரின் கருத்தை இங்கே திணிப்பதற்கோ, அவரின் அரசியல் நகர்வை இதனூடாக கொண்டு செல்வதற்கோ இந்த அமைப்பு அனுமதிக்காது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த அடிப்படையில் கடந்த 02/04/2017 அன்று அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் "வரலாற்றுத் தேவைக்காய் ஒன்று கூடுவோம்" என்ற தொனிப் பொருளில் பல ஊர்களிலும் இருந்தும் வந்த ஆயிரம் பேரளவில் அந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துக்களை தெறிவித்திருந்தனர். 

அந்த ஒன்று கூடலில் அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களும் இன்னும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டு இந்த அமைப்புக்கு "கிழக்கு மக்கள் அவையம்" என்று பெயரையும் சூட்டி எதிர்காலத்தில் எல்லா ஊர் மக்களின் பங்களிப்போடும் இந்த விடயத்தை ஆராய்ந்து ஒரு தீர்மானத்துக்கு வந்து அதனை கிழக்கு முஸ்லிம்களின் தீர்வாக முன்வைப்பதற்கு தீர்மாணிக்கப்பட்டது.

இந்த விடயம் அரசியலுக்கு அப்பால் முன்னெடுக்கப்படும் ஒரு செயல்பாடுதான் என்பதை அங்கே கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் உறுதிபட கூறினார்கள். இந்த அமைப்புக்கு கட்சி பேதமற்ற முறையில் எல்லாத்தரப்பும் பங்களிப்பு செய்யவேண்டும் என்ற நோக்கில் கிழக்கிலே உள்ள எல்லாக் கட்சிக்காரர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பாக மு.காங்கிரஸ் உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆகவே இன்றய அவசியமான நிலை கருதி இப்படியான முன்னெடுப்புக்களை முன்னெடுப்பவர்களுக்கு எங்களால் இயன்ற உதவிகளை செய்து அவர்களின் இந்த நடவடிக்கைக்கு ஊக்கமளிக்க வேண்டும் என்பதில் அங்கே வந்த அனைவரும் ஆதரித்து பேசியவிடயங்களை பார்க்கும் போது இன்ஸா அல்லாஹ் நமக்கு ஒரு நம்பிக்கை பிறந்திருக்கின்றது என்பதில் ஐயம் இல்லை எனலாம்.

இந்த நடவடிக்கை ஊடாக கிழக்கு மக்களின் அபிலாசைகளை பூரணமாக அறிந்து கொள்ள முயற்ச்சிக்கின்ற அதேவேளை இந்த அமைப்புக்கு அரசியலிலே ஆர்வமுள்ள எல்லா மக்களும் தங்களுது கருத்துக்களையும், அபிப்பிராயங்களையும் முன்வைப்பதற்கு உதவி புரியவேண்டும்.

நமது கருத்துக்களை முன்வைப்பதில் எதுவும் நமக்கு குறைந்து விடப்போவதில்லை, மாறாக எல்லா மக்களும் வைக்கும் கருத்துக்கள் எதிர் காலத்தில் பெரும் மாற்றத்தை கொண்டுவரலாம் என்பதில் எவ்வித சந்தேகமும் கொள்ளத் தேவையில்லை. ஆகவே, அரசியலை பற்றி அறியாத மக்களின் வாக்குகளை பெற்று எங்கள் கொள்கையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று தம்பட்டம் அடிப்பதை நிறுத்திவிட்டு, அந்த மக்களுக்கு இதனைப்பற்றி தெளிவு படுத்திவிட்டு வாக்குகளை அறுவடை செய்வதே பொருத்தமான செயல்பாடாகும்.

அந்த வகையில் மக்களிடம் இதனை கொண்டு சென்று அவர்களின் பங்களிப்போடு இதனை செயல் படுத்துவதை யாரும் மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கின்றேன். ஆகவே "கிழக்கு மக்கள் அவையம்" என்ற அமைப்பை நாம் முழுவதுமாக பயன்படுத்தி அதன் மூலம் மக்களின் கருத்தை அறிந்து அதனூடாக எதிர்வரும் தீர்வு திட்டங்களின் தெளிவான மக்களின் கருத்தை முன்வைப்பதற்கு இந்த அவையம் பயன்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் அவாவாகும்...
"நல்லதையே சிந்திப்போம், நல்லதையே செய்வோம்"
எம்.எச்.எம்.இப்றாஹிம்.
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -