கடந்த காலங்களில் தீ விபத்து மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பூண்டுலோயா பிரதேசத்தில் சீன் பழைய தோட்டத்தை சேர்ந்த மக்களுக்காக மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கௌரவ பழனி திகாம்பரம் அவர்களின் நிதியொதுக்கீட்டினால்; நிர்மாணிக்கப்பட்ட தனி வீடுகள் 09-04-2017 அன்று கௌரவ அமைச்சரின் தலைமையில் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.
இவ் தனிவீடுகளானது கௌரவ அமைச்சர் அவர்களின் 2016ம் ஆண்டிற்கான நிதியொதுக்கீட்டில் 3 கோடி 44 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா (3,44,50,000) செலவில் நிர்மாணிக்கப்பட்டதோடு பூண்டுலோயா பிரதேசம் சீன் பழைய தோட்டம் கீழ் பிரிவில் 18 தனி வீடுகளும்; சீன் பழைய தோட்டம் மேல் பிரிவில் 12 தனி வீடுகளும் மற்றும் மடக்கும்பர தோட்டம் கீழ் பிரிவில் 23 தனி வீடுகளுமாக மொத்தம் 53 தனி வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படவுள்ளன.
மேலும் அன்றைய தினம் (09-04-2017) கௌரவ அமைச்சரின் 2017ம் ஆண்டிற்கான நிதியொதுக்கீட்டில் 2 கோடி ரூபா செலவில் கைப்புகலை தோட்டம் கீழ் பிரிவில் 20 தனி வீடுகளை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும் கௌரவ அமைச்சரின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் தொண்டு நிறுவனம் ஓன்றின் நன்கொடையின் மூலம் குறித்த 53 வீட்டு உரிமையாளர்களுக்கு தொலைகாட்சி, குளிரூட்டி, கட்டில், அலுமாரி, நாற்காலி போன்ற உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படவுள்ளன.