தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டத்தை இம்முறை அம்பாறை, அக்கரைப்பற்றுப் பிரதேசத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது எனத் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். 2017ஆம் ஆண்டுக்கான மே தினக் கூட்டம் தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடல் ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்றபோதே, இத்தீர்மானம் எடுக்கப்பட்டது எனவும் அவர் கூறினார்.
மே தின ஊர்வலமானது அக்கரைப்பற்று மருதடி மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்துக்கு முன்பாகவிருந்து ஆரம்பமாகி, மத்திய சந்தைச் சதுக்கத்தின் ஊடாக ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தை சென்றடையும். இதனை அடுத்து, ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் கூட்டம் நடைபெறும். இந்த மே தினக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட்ட கூட்டமைப்பில்; அங்கம் வகிக்கும் பல்வேறு கட்சிகளின் தலைவர்கள்; த.தே.கூ உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் மக்களினதும் தொழிலாளர்களினதும் ஒற்றுமையையும் பலத்தையும் உலகறியச் செய்யும் இக்கூட்டத்தில், அனைவரும் கலந்துகொள்வது காலத்தின் கட்டாயம் ஆகும். இதற்கான சிறந்த சந்தர்ப்பமாக இந்த மே தினக் கூட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.