க.கிஷாந்தன்-
பஸ்ஸின் முன் சில்லில் சிக்குண்டு 68 வயதுடைய பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று சாமிமலை கவரவில பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்து மஸ்கெலியா சாமிமலை பிரதான வீதியில் கவரவில சிங்கள வித்தியாலயத்திற்கு அருகில் 20.04.2017 அன்று மதியம் 1 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
மஸ்கெலியாவிலிருந்து சாமிமலை நோக்கிப் சென்ற தனியார் பஸ்ஸில் பயணித்த குறித்த வயோதியப் பெண்ணே, பஸ்ஸிலிருந்து இறங்கி, வீட்டுக்குச் செல்வதற்காக சென்றபோது, தான் பயணித்த அதே பஸ்ஸின் முன் சில்லில் சிக்கி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் சாமிமலை ஸ்டர்ஸ்பி தோட்டத்தைச் சேர்ந்த முத்தையா அமரஜோதி (வயது – 68) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதனையடுத்து ஆத்திரமுற்ற பிரதேச மக்கள் கற்களை எரிந்து பஸ்ஸை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றநிலை உருவாகியிருந்தது. எனினும் பொலிஸார் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டிருந்தனர்.
இவ்விபத்து குறித்து பஸ்ஸின் சாரதியை கைது செய்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.