பாறுக் ஷிஹான்-
அரசியல் என்னும் சாக்கடையில் காலம் தன்னையும் வீழ்த்தியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் யாழ் மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் அண்மையில் யாழ். ஒஸ்மானியா கல்லூரியில் இடம்பெற்ற அஹதியா மாணவர்களுக்கான பரிசளிப்பு மற்றும் கொடை வள்ளல் மர்ஹூம் ஐதுரூஸ் அவர்களின் 50வது நினைவு தின நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் உரையாற்றுகையில்,
நான் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்று எப்பொழுதும் நினைத்ததில்லை என்றாலும் காலம் என்னையும் அரசியல் சாக்கடையில் வீழ்த்தி விட்டது. எமது தந்தையின் வழிகாட்டலின் கீழ் எம்மாலான அனைத்து உதவிகளையும் மக்களுக்கு செய்து வந்தோம் நாம் இறைவன் ஒருவனிடம் இருந்தே அதற்கான பிரதிபலனை எதிர்பார்த்தோம் என்றாலும் நானும் அரசியலுக்குள் பிரவேசிக்க வேண்டும் என்ற நிலையினை சிலர் உருவாக்கினார்கள்.
மக்கள் சேவை என்பது தங்களது ஆதரவாளர்களுக்கு மட்டும் என்ற நிலை வந்தபோது பாதிக்கப்பட்ட மக்கள் சார்பாக ஒருவன் தேவைப்பட்டதால் மதம்,இனம்,மொழி கடந்து என்னை மக்கள் ஆதரித்தார்கள். நான் பதவி வகிக்கும் காலத்தில் என்னால் முடியுமான வரை கட்சி பேதம் கடந்து பாகுபாடின்றி தேவையுடையவர்களுக்கான சேவையை நேர்மையாக செய்ய விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.
கொடை வள்ளல் மர்ஹூம் ஐதுரூஸ் அவர்களின் புதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் மற்றும் அவரது தந்தை காதர் ஹாஜியார் ஆகியோருக்கு நினைவுச்சின்னங்கள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வில் வட மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் அதிகாரிகள், அகதியா மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.