2 வது தொடர்.......
எந்தவொரு அரசியல் கட்சியும் தேர்தல் ஒன்றினை எதிர்கொள்வது என்றால், அந்த தேர்தல் செலவுக்காக பணத்தினை எவ்வாறு பெற்றுக்கொள்வது என்பது பற்றிய உபாயங்களையே முதலில் மேற்கொண்டு நிதி திரட்டிக்கொள்வார்கள். இது எமது நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் மட்டுமல்ல. உலகின் அனைத்து நாடுகளிலுமுள்ள சிறிய, பெரிய கட்சிகளினது வழக்கமாகும்.
அமெரிக்க நாட்டில் நடைபெறுகின்ற ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் தனது சொந்தப்பனத்தின் மூலமாக செலவு செய்வதில்லை. எவ்வளவு பெரிய கோடீஸ்வரனாக இருந்தாலும் அந்த பெரிய நாட்டில் அவ்வாறு பெருமளவில் பணம் செலவு செய்யவும் முடியாது. இவ்வாறு கட்சி சார்பாக திரட்டப்படும் நிதியை கொண்டே தேர்தலுக்கான செலவுகள் மேற்கொள்ளப்படும்.
அதுபோலவே நாடு தழுவிய ரீதியில் நடைபெற்ற கடந்த ஜனாதிபதி தேர்தலில் மைத்ரிபால சிரிசேனாவினால் பாரியளவில் சொந்த பணம் செலவு செய்திருக்க வாய்ப்பில்லை. அதுக்குரிய சக்தியும் அவரிடமில்லை. அது கட்சி சார்பாக திரட்டப்பட்ட நிதி மூலமாகவே அனைத்து செலவுகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த நிதி உள்நாட்டிளிருந்தோ, அல்லது வெளிநாட்டிலிருந்தோ திரட்டப்பட்டிருக்கலாம்.
உலகின் பலம் பொருந்திய நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ நலனுக்காக அருகிலுள்ள சிறிய நாடுகளை தங்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக்கொள்ள முற்படுவது வழமையாகும். அவ்வாறு கட்டுப்பட மறுக்கும் ஆட்சியாளரை அகற்றிவிட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்களை புதிய ஆட்சிபீடமேற்ற பல தந்திரோபாயங்களை மேற்கொள்ளுவது உலக நடைமுறையாகும். இதற்காக தங்கள் முகவர்கள் மூலமாக பணங்களை வாரி வழங்கும். இது உலக அரசியலில் அன்றாடம் நிகழ்கின்ற சாதாரண விடயமாகும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் ஆட்சியாளருக்கு எதிராக இருக்கின்ற வெளிநாட்டு சக்திகளின் எதிர்ப்பினை தங்களுக்கு சாதகமாக எதிர்க்கட்சியினர் பயன்படுத்த முற்படுவார்கள். அந்தவகையில் சீனாவின் ஆதிக்கம் இலங்கையில் அதிகரித்து சென்றதனால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மகிந்தவை ஆட்சியிலிருந்து அகற்ற வேண்டிய தேவை இந்தியாவுக்கு இருந்தது. அதற்காக மைத்ரிபால சிரிசேனாவை ஆட்சியில் அமர்த்துவதற்காக இந்தியா பணம் வழங்கியிருக்கலாம்.
1988 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணசபை தேர்தல் நடாத்துவதற்கு இந்தியா முயற்சித்தபோது விடுதலை புலிகளின் அச்சுறுத்தல் காரணமாக ஈ.பி.ஆர்.எல்.எப் இயக்கத்தினரை தவிர, வேறு எந்த அரசியல் கட்சிகளும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை.
முஸ்லிம் மக்கள் சார்பாக முஸ்லிம் காங்கிரசை அத்தேர்தலில் போட்டியிடச் செய்ய இந்தியா கடுமையாக முயற்சித்தபோது, தாங்கள் தேர்தலில் போட்டியிடுவதென்றால் தங்களிடம் பணம் இல்லை என்று தலைவர் அஷ்ரப் இந்தியாவிடம் கூறியதாகவும், பின்பு இந்தியா பணம் வழங்கியதால்தான் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் போட்டியிட்டதாகவும் கதைகள் கூறுகின்றன.
இதனால்தானோ அல்லது வேறு என்ன காரணமோ தெரியவில்லை. முஸ்லிம் காங்கிரசின் வளர்ச்சிக்கு இந்தியாவன் பங்களிப்பு மிகப்பெரியது என்ற கதைகள் கானப்படுகின்றது. அதாவது இந்தியா இல்லாவிட்டால் ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வளர்ச்சி அடைந்திருக்க முடியாது என்பது அதன் பொருளாகும்.
அதேபோல் 1989 ஆம் ஆண்டு நாடுதழுவிய ரீதியில் நடைபெற்ற பொது தேர்தல் செலவுக்காக முஸ்லிம் காங்கிரசுக்கு கோடீஸ்வரரான புகாரிதீன் ஹாஜியார் பணம் வழங்கியதாகவும், அதற்காக அவருக்கு அத்தேர்தலின் பின்பு தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் 1994 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல் செலவுகளுக்காக இன்றைய தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்களின் மாமனாரான குத்தூஸ் ஹாஜியார் முஸ்லிம் காங்கிரசுக்கு பணம் வழங்கியிருந்ததாகவும் வரலாறுகள் கூறுகின்றன.
இப்படியாக ஒவ்வொரு காலகட்டத்திலும் தேர்தல் செலவுகளுக்காக ஒவ்வொரு வழிமுறைகள் மூலமாக அரசியல் கட்சி என்ற வகையில் நிதி பெற்றுக்கொள்வது சாதாரண விடயமாகும்.
இப்படியாக மறைந்த தலைவரினால் முன்னெடுக்கப்பட்ட வரலாறுகள் இருக்கும்போது, யாரும் செய்திடாத சமூகவிரோத செயல் ஒன்றினை தலைவர் ஹக்கீம் செய்துவிட்டார் என்ற கோணத்தில் பிரச்சாரங்களை முன்னெடுத்து மக்களை குழப்ப முற்படுகின்றார்கள்.
இவ்வாறு மக்களை குழப்புகின்றவர்கள் அல்லது உத்தமர்கள் என்று தங்களை காட்டிக் கொள்கின்றவர்கள் யாராவது தலைவர் ஹக்கீமின் சொந்த பணத்தினையோ அல்லது தேர்தல் செலவுகளுக்காக வழங்கப்பட்ட கட்சி பணத்தினையோ அனுபவிக்கவில்லை என்று கூற முடியுமா?
தொடரும்............