அரசியல் தலைவன் மர்ஷும் அஷ்ரப்பிற்கு பின்னரான முஸ்லிம் அரசியல் தசாப்தத்தின் அரசியல் முதிர்ச்சியாய் மிளிரும் தேசிய காங்ரசின் தலைவரும்,முன்னாள் அமைச்சருமான அதாஉல்லாவின் மீண்டெழும் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகவும், மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. ஒரு விடயம் நம் அருகில் இருக்கின்ற போது அதன் முக்கியத்துவமும், மகிமையும் விளங்குவதில்லை. இது மனிதவாழ்வின் யாதார்த்தமாகும்.
இலங்கையில் சிறுபான்மை சமூகமாக பேரின அரசியலுக்குள் மத்தியில் வலம் வரும் முஸ்லிம்களின் தனித்துவங்களை பேணுவது சில நேரம் கடினமானதாகி விடுகிறது. இதற்கான பிரதான காரணம் சமூகத்தை சிந்திக்கும்,துணிச்சலான முஸ்லிம் பிரதிநிதிகளை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்வதில் முஸ்லிம் சமூகம் விடும் பிழையாகும்.அம்பாறை மாவட்ட முஸ்லிம்கள் அவ்வாறான ஒரு வரலாற்று தவறை கடந்த பொதுத் தேர்தலில் இழைத்து விட்டோம்.கண் கெட்ட பின் சூரிய உதயம் எதற்கு என்பதை போல முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவை அற்ப,சொற்ப காரணங்களுக்காக தோற்கடித்து விட்டு மனம் வருந்தி நிற்கிறது எமது சமூகம்.
அபிவிருத்திகளால் விழாக் கோலம் பூண்ட அரசியல் பூமி இன்று வெறுமையாக காட்சியளிக்கிறது. வீதிகள் தோறும் அலங்கார தோரணைகள் அமைக்கப்பட்டு வருக! வருக! என பாடசாலை மாணவர்களின் வேண்ட் வாத்தியங்களுடன் அபிவிருத்தி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட அம்பாறை மாவட்ட பிரதேசங்கள் இன்று அமைதி மயானமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையை ஏற்படுத்தியது யார்? என்ற கேள்வியை எமக்குள்ளே கேட்கின்ற போது மனச்சாட்சி சொல்லும் பதில் நீ தான். மனச்சாட்சியின் விடைகளை நாம் யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் மனச்சாட்சிக்கு பொய் சொல்ல தெரியாது.
முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேர்தல் தோல்வி சிலருக்கு இன்று வரை ஆனந்த வெள்ளமாக இருந்தாலும் உண்மையாக சமூகத்தையும், எதிர்கால சந்ததியின் அரசியல் பயணத்தையும் நினைக்கும் ஒரு உள்ளத்திற்கு துயரக் கடலாகவே இருக்கும். அம்பாறை மாவட்டத்தில் உள்ள முஸ்லிம் பிரதேசங்கள் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் வெறுமையை உணர்ந்ததை விட அவர் பிறந்த ஊர் நன்றாகவே உணர்ந்து விட்டது.முற்றத்து மல்லிகை மணப்பதில்லை என்பதை செயலில் நிறுபித்து காட்டிவிட்டார்கள் அக்கறையூர் மக்கள்.
அம்பாறை மாவட்ட மக்களின் மனங்களில் மீண்டெழுவாரா அதாஉல்லா?என எழுந்திருக்கும் பாரிய அளவிலான எதிர்பார்ப்பு கேள்விக்கு அவரின் பதில் சாதகமாக அமைய வேண்டும் என முஸ்லிம் சமூகம் எதிர்பார்த்திருக்கிறது. அம்பாறை மாவட்டத்தின் அரசியல் சாம்ராஜ்யத்தை முன்னாள் அமைச்சர் விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கையாகும்.
அரசியல் அநாதைகள் என அம்பாறை மாவட்டத்தில் உள்ள பல இடங்களுக்கு தேர்தல்கால வாக்கு வேட்டை அரசியல்வாதிகள் வைத்திருக்கும் புனைப் பெயரை வெட்டி சாய்க்க கூடிய ஆற்றல் முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவிடம் மட்டுமே இருக்கிறது. இந்த பிரதேசங்களின் துயர் துடைக்க கூடியவரும் அதாஉல்லா மாத்திரமே. வாய்களினால் மலைகளை தகர்த் தெறியும் அரசியல்வாதிகளுக்குள் செயல் மூலம் நிருபித்துக் காட்டியவர் எனின் மறைந்த தலைவர் அஷ்ரபிற்கு பிறகு முன்னாள் அமைச்சர் அதாஉல்லா மாத்திரமாகத்தான் இருக்க முடியும்.
முஸ்லிம் சமூகம் உணர்ந்து விட்டது. அனுபவப் பாடம் நிச்சயம் மீண்டுமொரு முறை தவறிழைக்க இடம் அளிக்கமாட்டாது.அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்கள் மீண்டும் விழாக் கோலங்கள் காண வேண்டும்.குட்டி இடும் அடிக்கல் நடப்படும் அபிவிருத்தி மாயைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்து நிறைவு செய்யப்படும் அடிக்கல்கள் நாட்டப்பட வேண்டும்.எனவே அம்பாறை மாவட்டத்தின் அரசியல் வரலாறு முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவினால் மீண்டுமொரு முறை புதுபிக்கப்படும் என்ற அவா மக்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்கும்.
ஜெம்சித் (ஏ) றகுமான்,
மருதமுனை.