இந்தியாவின் இனவழிப்பு விளையாட்டின் பிரதான களம் காஷ்மீர். பல தசாப்தங்களாகக் காஷ்மீர் முஸ்லிம்கள் சுதந்திரம் கேட்டுப் போராடி வருகின்றனர். ஆனாலும் அந்தப் போராட்டத்துக்கு எவ்வித மதிப்புமளிக்காத இந்தியா காஷ்மீரத்தைத் தனது இராணுவம் கொண்டு அடக்கி வைத்திருக்கிறது. சுதந்திரப் போராளிகளின் மீது தீவிரவாதிகள் என முத்திரை குத்தி அங்கு இந்திய இராணுவம் நடாத்தும் அக்கிரமங்கள் எண்ணிலடங்காதவை. இந்நிலையில் இந்திய இராணுவத்துக்கெதிராகக் காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் கற்களை வீசித் தமது எதிர்ப்பை அவ்வப்போது தெரிவிப்பதுண்டு.
கடந்த சில தினங்களுக்கு முன்னம் காஷ்மீரின் ஸ்ரீநகர் தொகுதியில் மக்களவைக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. கடந்த 9ம் தேதி நடந்த வாக்குப்பதிவின் போது அங்கே வன்முறை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.அப்பிரதேச இளைஞர்கள் சிலர் ராணுவ வாகனத்தின் மீது கல் எறிந்து தாக்கியுள்ளனர். கல் எறிந்து தாக்கியதாக இளைஞர் ஒருவரை ராணுவத்தினர் பிடித்து வாகனத்தின் முகப்பில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் அவரை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தி ஜீப்பை ஓட்டிச் சென்றுள்ளனர். இந்தப் பரபரப்பான சம்பவம் பட்கம் மாவட்டத்தில் சதுரா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது.
இதுபற்றிய வீடியோவொன்று இணையத்தளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. ஆயினும் அந்த இளைஞர் கட்டப்பட்டிருப்பது முதலில் ஒரேயொரு செக்கன் மாத்திரமே வீடியோவில் காண்பிக்கப்படுகிறது. அதன் பின்னர் தெளிவில்லாத காட்சிகளே பதிவாகியுள்ளன. ஒருவேளை விரிவான வீடியோ பின்னர் வெளிவரலாம்.
இச்சம்பவம் தொடர்பாக காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஓமர் அப்துல்லா உடனடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை காஷ்மீரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் எட்டு பேர் பலியானார்கள். இதனால்அங்கு இணைய சேவை முடக்கப்பட்டு, வியாழக்கிழமைதான் மீண்டும் வழங்கப்பட்டது. நேற்று வெள்ளிக்கிழமை இந்த வீடியோ வைரல் ஆகியிருக்கிறது.
எஸ்.ஹமீத்-