மீதொட்டமுல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட பாரிய அனர்த்தம் தொடர்பில் நடைபெறவிருந்த நாடாளுமன்ற விவாதம், உத்தேசிக்கப்பட்டவாறு நடத்துவதற்கான சாத்தியமில்லை என சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
பிரதமரின் இந்திய விஜயம் காரணமாக நாடாளுமன்ற விவாதம் காலம் தாழ்த்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், பெரும்பாலும் எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி குறித்த விவாதம் நடத்தப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.தொட்டமுல்ல அனர்த்தம் தொடர்பில் எதிர்வரும் 24ஆம் திகதி திங்கட்கிழமை நாடாளுமன்ற விவாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கடந்த வாரம் புத்தாண்டு தினத்தன்று ஏற்பட்ட மீதொட்டமுல்ல அனர்த்தத்தில் 30இற்கும் அதிகமானோரது உயிர்கள் காவு கொள்ளப்பட்டன.குறித்த சம்பவத்தை தொடர்ந்து நாட்டில் குப்பை பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்து, பல்வேறு போராட்டங்களுக்கும் வழிவகுத்துள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.