இறக்காமத்து மாயக்கல் விவகாரம் இன்று பூதாகரமாக உருவெடுத்திருக்கின்றது. கண்கட்டி வித்தைகளினால் நம் மக்களின் பூர்வீகக் காணிகளைத் திட்டமிட்டு அபகரிப்பதற்கு தீய சக்திகள் வலிந்து கட்டிக்கொண்டு களம் இறங்கியிருக்கின்றார்கள்.
அவர்களுடைய தீய எண்ணங்களை நடைமுறைப்படுத்தவதற்கு முதற்கதவாகவே மாயக்கல்லின் கதவினை உடைக்க முற்பட்டிருக்கின்றனர். இதனை நம்மவர்கள் விட்டுக் கொடுப்போமாயின் அம்பாரை மாவட்டத்தின் தமிழர் முஸ்லிம்களுக்குச் சொந்தமான பெரும்பகுதிக் காணிப்பரப்பை, தீகவாபி என்ற பெயரில் அடாத்தாகப் பறித்துக்கொள்ள வழி சமைத்ததாகவே அமைந்துவிடும்.
மாயக்கல்லின் இப்பிரச்சினையை இறக்காமத்தோடு மட்டும் மட்டுப்படுத்தியவர்களாக நம்மவரின் சிந்தனை அமைந்துவிடக்கூடாது. குறிப்பாக, அம்பாரை மாவட்டத்து முஸ்லிம்களும் விஷேடமாக கிழக்கு மாகாணத்து என் உடன் பிறப்புகளும் இந்த விடயத்தில் இருக்கின்ற ஆபத்தினை உணர்ந்து, இச்சதிவலையிலிருந்து எம்மக்களையும் எமது பூர்வீகங்களையும் காப்பதற்கு ஒன்றுபடவேண்டும்.
இவ்வாறான இக்கட்டுகளுக்கு முகங்கொடுப்பதற்காகவே கட்சிகளையும் மக்கள் பிரதிநிதிகளையும் அம்மக்கள் தோற்றுவிக்கின்றார்கள். ஏமாற்றப்பட்டதனால் தோற்றுப்போன நமது மக்கள் அரசியலுக்கப்பாலும் ஒன்றுபடவேண்டிய இன்றைய காலத்தின் அவசியம் பற்றி சிந்தித்துச் செயற்பட வேண்டும்.
நான் ஏலவே சுட்டிக்காட்டியிருந்தவைகளைப்போல் வெளிநாட்டின் தீய சக்திகள், இந்நாட்டை சின்னாபின்னப் படுத்துவதற்கு இனமுறுகல்களையும், கலவரங்களையும் ஏற்படுத்துவதற்கான முஸ்தீபுகளில் ஒன்றாகவும் நான் இதனைப் பார்க்கின்றேன்.
பொதுபலசேனா போன்ற இனவாதிகளின் ஆலோசனைக்கே இன்றைய அரசு தொழிற்படுவதனை நம் மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அல்ஹம்துலில்லாஹ். அது நம் மக்களுக்கான முதல் வெற்றியாகட்டும் ஒன்றுபடுங்கள்.
மாயக்கல்லினைப் போன்று இன்னும் பல மலைகளும், எதிர்காலத்தில் நாம் சந்திக்கவிருக்கின்ற இதுபோன்ற இன்னோரன்ன பிரச்சினைகளுக்கும் முகங்கொடுப்பதற்கு எல்லாத் தரப்பினரை விடவும் உடனடியாக "கிழக்கு மக்கள் அவையம்" தொழிற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்களும் புரிந்திருப்பார்கள். அவர்கள், இவ்விவகாரத்தையும் தங்கள் கடமையாக்கிக் கொள்ள வேண்டும். நமது புத்திஜீவிகளாம் - மூத்த சட்டத்தரணிகள், இன்றைய இளம் சட்டத்தரணிகள் என்ற வேறுபாடுகளுக்கப்பால் எல்லா சட்டத்தரணிகளையும் ஒன்றுகூட்டி ஆலோசனை நடாத்த தளம் அமைக்க வேண்டும். இச்செயற்பாடானது உலகின் பல நாடுகளின் கவனத்தை நம்மீது திருப்புவதற்கும் ஏதுவான ஒன்றாக அமையப்பெறும்.
முன்னாள் அமைச்சரும்
தேசிய காங்கிரஸின் தலைவருமான
#ஏஎல்எம். #அதாஉல்லா அவர்களின் ஊடகப்பிரிவு.