எஸ்.ஹமீத்-
போபியோ ( Phobio) என்பது ஒரு மனநோய். துக்கம் கலந்த பயத்தின் விளைவாக ஏற்படும் அந்த மனநோய் தற்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் பெரும் தலைவர்களைப் பிடித்தாட்டத் தொடங்கியுள்ளது போற் தெரிகிறது.
சில தினங்களுக்கு முன்னம் கல்முனையில் நடந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் அதன் முன்னணிப் பிரமுகர்கள் ஆற்றிய உரைகளைச் செவி மடுக்கும் போது, ''றிஸாத்போபியோ'' என்ற மனநோய்க்குள் அவர்கள் ஆட்பட்டிருப்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.
முன்னெப்போதையும் விடத் தற்போது இவர்கள் அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான றிசாத்தைப் பற்றி நிறையவே சிந்திக்கிறார்கள்; நிறையவே பேசுகிறார்கள்; அவருக்கெதிராக மறைவாகவும் வெளிப்படையாகவும் மிகத் தீவிரமாக இயங்குகிறார்கள்.
இந்த நிலைமைக்குப் பல காரணங்களைக் கூறலாம். ஒன்று றிஸாத்தின் குறுகிய காலத்துப் பெரும் வளர்ச்சி. இரண்டு, மக்களுக்கான சேவைகளிலும் இரவு பகல் பாராது துடிப்புடன் இயங்குவதிலும் ரிசாதுடன் போட்டி போட முடியாமை. மூன்று, இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் விரோதமான இவர்களது செயற்பாடுகள் றிசாத் மூலமாக வெளிவந்து விடுமென்ற உள்ளார்ந்த அச்சமும் இவர்களை ஆட்டிப்படைக்கும் அதீத சந்தேகங்களும். நான்காவது றிசாத் மூலம்தான் தமது மக்கள் செல்வாக்குச் சரிந்து கொண்டு வருவதாக நம்பியதினால் உருவான பதட்டமும் அதைத் தடுப்பதற்கான முயற்சிகளும். இவ்வாறு, இன்னும் பல காரணங்களை அடுக்கிக் கொண்டு போகலாம்.
சாதாரணமாக ஒருவனைப் பற்றிப் புறம் பேசுவதோ அல்லது அவதூறு சொல்வதோ இஸ்லாத்தின் பார்வையில் மிகக் கொடிய ஹராமாகும். ஆனால், குர்ஆனையும் ஹதீதையும் யாப்பாகக் கொண்ட ஒரு கட்சியின் முக்கியஸ்தர்களே பகிரங்கமாக மேடை போட்டு றிசாத் என்னும் ஒருவரைப் பற்றிப் புறம் பேசுகிறார்கள்; அவதூறுகளை அள்ளி இறைக்கிறார்கள். இத்தகு கொடுமையான ஹறாத்திலிருந்து அல்லாஹ்தான் இவர்களையும் இவர்களது பேச்சுக்களை வரவேற்பவர்களையும் பாதுகாக்க வேண்டும்.
ரிசாதோ, ஹக்கீமோ-அமீர் அலியோ, ஹாபிஸ் நசீர் அஹமதுவோ- ஹரீஸோ, ஹசன் அலியோ- பஸீரோ, அலிஸாகிர் மௌலானாவோ, அல்லது சமூக வலைத் தளங்களில் பதிவிடுகின்ற-பின்னூட்டங்கள் இடுகின்ற றிஸாத்தின் ஆதரவாளர்களோ அல்லது ஹக்கீமின் ஆதரவாளர்களோ- யாராக இருந்தாலும் தமது பேச்சுக்களையும் எழுத்துக்களையும் இஸ்லாத்தின் வரம்புகளுக்குள் அமைத்துக் கொள்ள வேண்டும். ''வரம்பு மீறியவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்க மாட்டான்!'' என்று குர் ஆன் மிகத் தெளிவாக நமக்குச் சொல்லித் தந்திருந்தும் நாம் வரம்பு மீறினால் நமது சமூகத்திற்கு நிச்சயம் அழிவுதான். மேலும் ''ஒரு சமூகம் தன்னைத் திருத்திக் கொள்ள முயற்சி செய்யாதவரை அல்லாஹ் அந்த சமூகத்தைத் திருத்த மாட்டான்!'' என்பதான அல்லாஹ்வின் கட்டளைகளையும் நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
றிசாத் மூலம் நமது முஸ்லீம் சமூகத்திற்கு நன்மைகள் கிடைப்பதாக இருந்தால் யாரும் அதனைத் தடுக்காதீர்கள்; அவ்வாறே, ஹக்கீம் மூலமாக நமது சமூகம் பயன் பெறுகிறதென்றால் யாரும் அதனைக் குறை கூறாதீர்கள்.
நமது ஒட்டு மொத்த சமூகத்தை இனவாதிகள் வேரறுக்கக் காத்திருக்கும் இந்தப் பயங்கரமான காலகட்டத்தில் நாம் ஓரணிக்குள் ஒன்றுபட முடியாவிட்டாலும் கூட, பிரிந்து நிற்கும் இந்த நிலைமையிலும் சமூகத்துக்கான உச்சபட்ச உரிமைகளும் சலுகைகளும் கிடைக்கப் பாடுபடுவோம். நமது எழுத்துக்களையும் பேச்சுக்களையும் இங்கிதமான முறையில், நாகரீகமான வழியில் பயன்படுத்துவோம்!
அல்லாஹ் நமது சமூகத்தை அவனது அன்பினாலும் அருளினாலும் என்றும் பாதுகாப்பானாக!