ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஏன் விமர்சிக்கப்படவேண்டும்..?

டந்த காலங்களில் பேரினவாத கட்சிகளுக்கு வாக்களித்து பழக்கப்பட்ட மக்களை இந்த கட்சியின் பக்கம் கவர்ந்து இழுத்தது எப்படியென்று தெளிவாக புரிந்து கொண்டால், இதற்கு விடைகாண்பது என்பது இலேசாக இருக்குமென்று நம்புகின்றேன். இந்த கட்சி ஆரம்பிக்கும் போது மக்கள் மத்தியில் மேடை மேடையாக கூறிய விடயம் என்னவென்றால், இந்த கட்சி குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில்தான் இயங்கும்.

இந்ந கட்சியில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள் எல்லாம் மசூறா அடிப்படையில்தான் எடுக்கப்படும். இந்த கட்சியில் இருப்பவர்கள் ஒழுக்கசீலர்களாக இருக்கவேண்டும். இந்த கட்சியின் கூட்டங்களின் போதும், வேறு தீர்மானங்களை மக்கள் ஆமோதிக்கும் போதும், கைகளை தட்டுவதை விட்டுவிட்டு மாறாக அல்லாஹு அக்பர் நாரே தக்பீர் என்ற அல்லாஹுவின் நாமத்தைத்தான் கூறவேண்டும் என்றும்.  எந்த பதவி பட்டங்களுக்கும் சோரம் போகாமல் தனித்துவமாக இயங்குவதாகவும்.

உரிமையென்ற விடயத்தில், விட்டுக்கொடுப்புக்கு இந்த கட்சியில் இடமே இல்லையென்று கூறியது மட்டுமல்ல, இன்னும் பல மேல்சிலிர்க்கும் இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுவோம் என்றும் கூறித்தான் இந்த கட்சி முஸ்லிம்களின் வாக்குகளை அறுவடை செய்தது. அதே நேரம், இந்த கட்சி நோக்கத்தை மறந்து வேறுதிசையில் பயணிக்குமாக இருந்தால் இந்த கட்சியையும், தலைமைத்துவத்தையும் அழித்துவிடு யாஅல்லாஹ் என்றுதான் இதன் தலைவர் மர்ஹும் அஸ்ரப் அவர்கள் பகிரங்கமாக துவாச்செய்திருந்தார்.

இப்போது விடயத்துக்கு வருவோம்....

இப்படியெல்லாம் கூறிக்கொண்டு வந்த கட்சி இப்போது என்ன நிலையில் பயணிக்கின்றது என்பதை நாம் கூறித்தான் நீங்கள் அறியவேண்டிய நிலையில் இல்லை. முஸ்லிம் மக்கள் அல்லாஹ் ரசூல் என்றால் உயிரையும் விட அதனை அளவு கடந்து நேசிப்பார்கள் என்பது எல்லோரும் அறிந்தவிடயம். அந்த விடயத்தை இந்த கட்சி கையில் எடுத்து வந்ததினால் இன்றும் சில மக்கள் அந்த கட்சியை நம்பி ஆதரித்து நிற்பதையும் நாம் காணலாம். அந்த கட்சி வந்ததினால் லாபம் என்ன? நஸ்டம் என்ன? என்ற கேள்விக்கு அப்பால், முஸ்லிம் கட்சி என்ற ஒரே காரணத்துக்காக அவர்கள் ஆதரித்துவருவதையும் நாம் காணுகின்றோம்.

அஸ்ரப் அவர்கள் திடீர் மரணம் அடைவதற்கு முன் இனவாத ரீதியில் பெயரை வைத்துக்கொண்டு இனி இந்த பஸ்சை (கட்சியை) ஓட்டமுடியாது என்ற காரணத்தை உணர்ந்து கொண்டது மட்டுமல்ல, முஸ்லிம்களை ஒன்று சேர்ப்பதற்காக இந்த இனவாத கட்சி கோசம் உதவியிருந்தாலும், இனிமேல் இது முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் பேராபத்தை கொண்டுவரும் என்றும் உணர்ந்து கொண்டார்.

அதனால் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் "நுஆ" என்ற கட்சியை ஆரம்பித்தது மட்டுமல்ல, இனிமேல் தேர்தல் என்று வந்தால் இந்த நுஆ கட்சிதான் இனிமேல் போட்டியில் இறங்குமென்று தெளிவாகவே குறிப்பிட்டிருந்தார். இந்த கட்சியிலே முஸ்லிம்கள் மட்டுமல்ல, மாற்று மத சகோதரர்களும் தேர்தல் கேட்கலாம் என்றும் கூறியிருந்தார். இதன் மூலம்தான் எதிர்காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை மட்டுமல்ல, அபிவிருத்திகளையும் செய்து முடிக்கலாம் என்றும் என்னியிருந்தார்.

இனவாத கட்சிமூலம் அழிவுதான் மிஞ்சுமே தவிர, ஆக்கமான எந்த விடயத்தையும் சாதிக்கமுடியாது என்று உணர்ந்துதான் இந்த நுஆ கட்சியை அவர் ஆரம்பித்திருந்தார். இந்த நேரத்தில்தான் அவர் மரணமடைகின்றார், அதன் பின் இணைத் தலைமைத்துவமென்று வந்தவர்கள் அவர்களுக்குள் முட்டிமோதிக்கொண்டு பேரியல் அஸ்ரப் அவர்கள் "நுஆ"என்ற கட்சியையும், ஹக்கீம் தரப்பினர், மரணித்த தலைவரினால் ஒதிக்கிவைக்கப்பட்ட மு.காங் என்ற கட்சிக்கும் தலைவர் ஆனார்கள்.

நாளடைவில் பேரியல் பெண் என்ற அடிப்படையில் அவரினால் அந்த கட்சியை வழிநடத்த முடியாமல் கைவிட்டு ஒதுங்கிக்கொண்டார். மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களினால், முஸ்லிம்களுக்கு எதிர்காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று உணர்ந்து ஒதிக்கி வைக்கப்பட்ட இந்த "மு.காங்கிரஸ்" என்ற கட்சியை தனது தேவைக்கு பயன்படுத்திக் கொள்ள கையில் எடுத்துக்கொண்டது மட்டுமல்லாமல், அதனை முஸ்லிம்களை உசிப்பேத்தி வாக்கு சேகரிக்கும் ஒரு ஆயுதமாகவும் பயன் படுத்திவருகின்றார்கள் தற்போதைய காங்கிரஸ் காரர்கள்.

இந்த கட்சியின் மூலம் ஏற்படும் இனவாத எதிர்ப்புக்களை சமாளிப்பதற்காக ஹக்கீம் அவர்கள், எந்த இடத்திலும் யாரையும் எதிர்ப்பதில்லை, மாறாக எல்லோரிடமும் நான் சாதுவான ஒரு தலைவர் என்று தன்னை எல்லோரிடத்திலும் இனம்காட்டி கொண்டுவருகின்றார். அந்த சாதுவான செயல் பாட்டுக்கு அவர் சூட்டிக்கொண்ட பட்டம்தான் "சாணக்கியம்" என்ற பட்டமாகும்.

மறைந்த தலைவரிடம் இருந்த ஆக்ரோசங்களும், பேசவேண்டிய இடத்தில் தட்டிப்பேசிய விடயங்களில் நூறில் ஒருபங்குகூட இந்த தலைவரிடம் காணமுடியவில்லை, அதற்கு சாணக்கியம் என்ற போர்வையை போத்திக்கொண்டு அவர் நாடகமாடிக்கொண்டு இருக்கின்றார் என்பதில் உண்மையில்லாமலும் இல்லை. அதே நேரம் சந்தர்ப்பங்களை பயன் படுத்தி முஸ்லிம்களின் உரிமையை பெறுகின்றாரோ தெறியாது, பல கோடிகளை பேரம் பேசி பெறுகின்றார் என்பது அவர்களின் கட்சிக்குள் இருந்து வரும் ஊர்ஜித படுத்தப்பட்ட செய்திகளாகவும் இருக்கின்றது.

இப்படிப்பட்ட கட்சியை கையில் வைத்திருக்கும் தலைவர் ஹக்கீம் அவர்களிடம் முன்பு நாங்கள் கூறிய யாப்பும், கட்சிக் கொள்கையும் இப்போது அவர்களிடம் உள்ளதா? என்ற கேள்வி கேட்கப்படவேண்டியுள்ளது அல்லவா?

சரி, இந்த சாணக்கியத்தின் ஊடாக உரிமையையும் பெற்றுத்தரவில்லை, அதேநேரம் அபிவிருத்தியாவது சொல்லும்படி செய்துள்ளாரா? என்றால், அதுவும் இல்லையென்றே கூறவேண்டியுள்ளது. அப்படியென்றால் இந்த கட்சியும், தலைவரும் என்னத்துக்கு என்று யாராவது கேள்வி கேட்டால், கட்சியின் போராளிகள் என்று கூறிக்கொண்டு பதிலலிக்க பாய்ந்து வருகின்றார்கள்.

அவர்களை சொல்லி குற்றமில்லை, முஸ்லிம்களுக்கு இருக்கும் ஒரே கட்சி இதனை அழிப்பதா? என்ற நோக்கத்திலும், மற்றும் சிலபேர் உண்மை தெறிந்திருந்தாலும், அவர்கள் அந்த கட்சியூடாக பெற்ற உதவிகளின் காரணமாகவும் அந்த நன்றிக்கடனுக்காகவும் வக்காலத்து வாங்கி பேசி வருவதையும் காண்கின்றோம். இவர்களின் இந்த செயல்பாடுகளினால் முஸ்லிம் சமூகம், நோக்கத்தை மறந்து இலக்கை அடைந்து கொள்ளமுடியாமல் திணரிவருவதை யாரும் கண்டுகொண்டதாக தெறியவில்லை.

ஆக, அபிவிருத்தியும் கிடையாது, உரிமையும் கிடையாது என்ற நிலையில் அதனை தட்டிக்கேட்பதற்கு யாருமற்ற நிலையில், தங்களது குற்றங்களையும், இயலாமையையும் மறைப்பதற்கு மற்ற கட்சிகளையும், அவர்களின் கட்சியிலிரந்து விலகிச் சென்றவர்களை விமர்சிப்பதிலும் காலத்தை கடத்திக்கொண்டுவருகின்றார்கள். இதனை யாராவது தட்டிக்கேட்டால், முட்டிமோதிக்கொண்டு ஓடிவந்து பதிலலிக்கின்றார்கள் போளிப் போராளிகள்.

இது ஆரோக்கியமான செயல்பாடு அல்ல என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவேண்டும், அதே நேரம் தலைவர் அஸ்ரப் அவர்களினால் காலமறிந்து ஒதுக்கிவைக்கப்பட்ட கட்சியை வைத்துக்கொண்டு, தங்கள் சுயதேவையை பூர்த்தி செய்து வரும் இவர்களை அல்லாஹ் அழிக்கும் காலம் வெகுதூரத்தில் இல்லை எனலாம்.

தலைவர் அஸ்ரப் அவர்கள் கேட்ட துவா நிச்சயமாக பழிக்கும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது...

எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -