சிலாவத்துறை கடற்படைமுகாமினால் காணிகளை இழந்துள்ள மக்களின் பிரச்சினை தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் எனத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தமிழ்,சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் அப்பிரச்சினைக்கான தீர்வுக்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
பாராளுமன்றம் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஒரு மணிக்கு சபாயநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் ஆரம்பமானது.சபாநாயகர் அறிவிப்பு, பொது மனுத் தாக்கல் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பிரதமரிடத்தில் நேரடிக் கேள்விக்கான நேரம் ஆரம்பமானது. அதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் சல்மான் சிலாபத்துறை கடற்படை முகாம் தொடர்பில் கேள்வி எழுப்பினார்.
சல்மான் எம்.பி. தனது கேள்வியில்,
600 ஏக்கர் மொத்த நிலப்பரப்பைக் கொண்ட சிலாவத்துறையில் 450 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளில் வீடுகளும், விவசாய நிலங்களும் உள்ளன. 1990ஆம் ஆண்டு இப்பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதன் பின்னர் மீள்குடியேற்றப்பட்ட போதிலும் அங்கு கடற்படை முகாம் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த முகாம் அமைக்கப்பட்டுள்ளதனால் 60 ஏக்கருக்கு மேற்பட்ட தனியார் காணிகள் அபகரிக்கப்பட்டுள்ளது. இதனால், கடைத் தொகுதிகள், வீடுகள், பாடசாலை, வைத்தியசாலை, நூலகம் என பலவும் அதற்குள் உள்ளடங்குகின்றன.
ஆகவே கடற்படையிடம் உள்ள தனியார் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? எனக் கேள்வி எழுப்பினார்.
இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போதைப் பொருள் கடத்தலை தடுப்பதற்கு சிலாவத்துறை கடற்படை முகாம் எமக்கு அத்தியவசியமாகின்றது. எனக்கு வழங்கப்பட்டுள்ள தகவல்களுக்கு அமைய கடற்படை முகாமுக்காக 34 ஏக்கர்கள் மாத்திரமே பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் 6 ஏக்கர்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.
விடுவிக்கப்பட்ட காணி உரிமையாளர்களில் 38 பேர் உயிருடன் இல்லை. தற்போது 28 ஏக்கர்கள் மாத்திரமே சிலாவத்தறை கடற்படை முகாமிற்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றதுடன் பாதுகாப்பு சமநிலை கருதி இதனை தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
இதன்போது குறுக்கீடு செய்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள தகவல் தவறானது என நினைக்கின்றேன். சிலாவத்துறை நகரத்தில் உள்ள கடைத்தொகுதிகள் வீடுகள் என்பனவும் கடற்படை முகாமுக்குள்ளே உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நகரின் மையப்பகுதி பயன்படுத்தப்படுகின்றது. எனவே, மக்கள் நகரத்தை விடுவிக்குமாறே அப்பகுதி மக்கள் கோருகின்றனர்.
அதனைத்தொடர்ந்து பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, போதைப் பொருள் கடத்தலை கட்டுப்படுத்துவதற்கே இந்த முகாம் அத்தியவசியமாகின்றது என கடற்படை தெரிவிக்கின்றது. நீங்கள் குறிப்பிடும் பிரச்சினைகள் சம்பந்தமாக சிங்கள, தமிழ் புத்தாண்டுக்கு பின்னர் விரிவாக ஆராந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வினைப் பெற்றுக்கொடுப்போம். அது குறித்து முஸ்லிம் காங்கிரஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்றார்.
விடிவெள்ளி-