அளுத்கம மக்களுக்கு நஷ்டஈட்டை வழங்க அமைச்சரவைப் பத்திரம்!

ந.தே.முவின் குற்றச்சாட்டுக்கான விளக்கம்

அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நல்லாட்சி அரசு உடனடியாக நஷ்டஈட்டினை வழங்கவேண்டும் என அண்மையில் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தியதை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய நஷ்டஈடு வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பில் பொய்யான பரப்புரைகள் செய்யப்பட்டுவருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையொன்றில், அளுத்கம மக்களுக்கு நஷ்டஈடு வழங்குவது சம்பந்தமான ஆதாரமற்ற குற்றச்சாட்டொன்றை முன்வைத்திருந்தார். 

அவர் தனது ஊடக அறிக்கையில், அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 33 வாரங்களைக் கடந்து விட்டபோதிலும் முறையான நஷ்டஈட்டைப் பெற்றுக் கொடுப்பதற்கு முஸ்லிம் எம்பிக்களால் முடியாது போயுள்ளதாகவும், அதற்கான முயற்சிகளை அவர்கள் செய்வதில்லை எனவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

அளுத்கம கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்ட ஈட்டைப் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற நல்ல நோக்குடன் காத்திரமான நடவடிக்கைகளை செய்து வரும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தற்சமயம் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு வெளிநாடு சென்றுள்ளதால், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு இராஜாங்க அமைச்சரின் ஊடகப்பிரிவு விளக்கமளித்துள்ளது. 

அது இது தொடர்பில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:- 

அளுத்கம கலவரம் ஏற்பட்டு 33 வாரங்களைக் கடந்துள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டஈட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கு முஸ்லிம் எம்.பிக்கள் எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லை என நல்லாட்சிக்கான தேசிய முன்னணி குற்றம்சாட்டியுள்ளமை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றல்ல.
நாடாளுமன்றத்திலும், அமைச்சரவையிலும், அதற்கு வெளியேயும் அளுத்கம மக்களுக்காகவும், அவர்களுக்கு இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்காகவும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பிதியூதீன், இராஜாங்க அமைச்சர்களான ஏ.எச்.எம்.பௌசி, ஹிஸ்புல்லாஹ் உள்ளிட்ட பலரும் பல்வேறு முயற்சிகளை செய்துள்ளனர் - செய்து வருகின்றனர். 

அளுத்கம மக்களுக்கு 1000 நாட்களை கடந்தும் நஷ்ட ஈடு வழங்கப்படவில்லை என கடுமையாக சாடி கடந்த மார்ச் மாதம் 22ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், ஆர்.ஆர்.டி. அமைப்பின் அறிக்கையொன்றை கோடிட்டுக்காட்டி கலவரத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படாமைக்கும் தனது கண்டனத்தை வெளியிட்டிருந்தார்.

அளுத்கம மக்களுக்கு நஷ்ட ஈட்டினைப் பெற்றுக்கொடுக்கவும், அவர்களுக்கு நியாயமான தீர்வைப் பெற்றுக்கொடுக்கவும் நாட்டின் உயரிய சபையில் காராசாரமாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உரையாற்றியதை அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவருடன் பேச்சு நடத்தியிருந்ததுடன், இழப்பீடு சம்பந்தமான அறிக்கையொன்றை தயார் செய்து அதற்கான நஷ்டஈட்டை வழங்குவதற்கு அமைச்சரவை பத்திரமொன்றை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்குமாறும் ஆலோசனை வழங்கியிருந்தார். 

அதன் பின்னர், REPPIA பணிப்பாளர் ஊடாக தகவல்கள் திரட்டப்பட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசினால் அமைச்சரவைப் பத்திரம் தயார் செய்யப்பட்டு, அமைச்சர் சுவாமிநாதன் ஊடாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அளுத்கம மக்களுக்கு நஷ்ட ஈட்டைப்பெற்றுக் கொடுக்க பாரிய வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இம்முயற்சிகளை சீர்குழைத்து, வலுவிழக்கச் செய்யும் வகையில் ஊடக அறிக்கைகள் வெளியிடப்படுவது மிகவும் மோசமான செயற்பாடாகும் - என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி. சாந்தி நாவுக்கரசு, அளுத்கம கலவரத்தில் காயமடைந்த, உயிரிழந்த மற்றும் சொத்துக்களை இழந்தவர்கள் தொடர்பில் வெவ்வேறு அறிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

அத்துடன், REPPIA ஊடாக பெறப்பட்ட தகவல்களுக்கு மேலதிகமான அளுத்கம பிரதேச செயலகம் ஊடாகவும் தகவல்கள் திரட்டப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் மொஹமட் றுஸ்வின் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -