இன்றைய இளைஞர்கள் அரசியலின்பால் ஈர்க்கப்பட வேண்டும்..!

காலையில் கண்விழித்தது தொடக்கம் மாலையில் கண்மூடும் வரைக்கும் அரசியல் எம்மைச் சூழ்ந்திருக்கின்றது. ஆனால், இன்றைய இளைஞனின் நிகழ்கால அரசியல் சம்மந்தப்பட்ட அறிவு, ஆர்வம், தேடல் என்பன கேள்விக்குறியாகப் பார்க்கப்படவேண்டிய நிலை தொடர்கிறது.அரசியலில் இளைஞர்கள் வகிபாகம் என்ன? எட்டி நிற்பதும் சோரம் போவதுமா? அல்லது தொடதேர்ச்சியான கழுத்தறுப்புக்களுமா? சாக்கடைக்குள் நாங்கள் சென்று சல்லெடுப்பதா ? நாறிவிடுவோமே ..! என அஞ்சிக்கொள்ளும் இளைஞர்களே!

கண்மணி நாயகம் செய்ததும் அரசியல் தான் என்பதனை மறந்துவிடாதீர்கள். அதன் பின்னர் வந்த கலீபாக்களின் சாம்ராஜ்யம் ஒட்டுமொத்தமும் அரசியலின் அங்கமே. இவ்வாறு ஒவ்வொருவராக நாங்கள் ஒதுங்குவதனால்தான் என்னவோ பிள்ளையார் சுழி போட்டது போன்று ஒரு சிலர் மாத்திரம் அரசியலை சுற்றிச் சுற்றி வருகிறார்கள். நல்லவர்கள் மங்கி மறைகிறார்கள். வியாபாரிகளின் கேடயமாக முஸ்லிம் அரசியல் இன்று மாறி அதி பாதாழ நிலையில் சென்று நமது இருப்பு கேள்விக்குட்படுத்தப்படும் நிலை தோன்றினாலும் ஐயப்படுவதற்கில்லை. 

அஷ்ரப் எனும் இளைஞனின் அன்றைய சிந்தனையே ஆலமரமாகி இன்று போக்கணம் கெட்டுப் போக்கிடம் அற்றுக்கிடக்கிறது. மூன்று தசாப்தத்துக்குள் ஒரு சிந்தனை முடக்கப்பட்டதனை ஒவ்வொரு இளைஞனும் உற்றுநோக்க வேண்டும். நமதினத்தின் வரலாறு ஒவ்வொரு இளைஞனாலும் ஆராய்ச்சியின் பால் உந்தப்படவேண்டும். சாணக்கியயர்கள் யார்? சரணாகதிகள் யார்? செளக்கியர்கள் யார் எனத் தேடியறிய வேண்டும். எமது வரலாறுகள் வெறும் புஷ்வாணங்களாக மாறாதிருக்க வகை செய்யவேண்டும்.

இளையவர் பக்கம் இருந்து சிந்தனைகள் தோற்றம் பெற வேண்டும். அநீதியையும் நீதியையும் கண்டுகொள்ளும் ஆற்றல் நமக்குள் பொதிய வேண்டும். அராஜகத்தின் பின்னால் அள்ளுண்டு செல்லும் நிலை நீங்க வேண்டும். தொழில்வாய்ப்புக்கள் தேவைகளை இறைவனிடம் தவக்கல் வைக்கவேண்டும். நம்மால் முடியும் என்ற நிலையில் சிந்திக்கத் தலைப்பட வேண்டும். நீரோடைகள் தான் அருவியாகவும் ஆறாகவும் பரிணமித்து கடலாக மாறுகின்றதென்பதனை போலவே எமது சிறிய சிறிய அரசியல் முயற்சிகள் வியாபிக்க வகை செய்ய வேண்டும்.

வெறுமனே முகநூலிலும் வட்ஸாப் இலும் தமது இயலுமைகளை செல்பியோடு நிறுத்திவிடாமல் நிகழ்வனவற்றை நோக்க வேண்டும். அஷ்ரபின் அரசியல் என்ன செய்தது எமது சமூகத்தின் வகிபாகம் அக்காலகட்டத்தில் எவ்வாறு இருந்தது? ஹக்கீமின் அரசியல் இந்தப் பதினேழு வருடங்கள் சாதித்தவை என்ன? இடையில் வந்த பிளவுகள் எதனால் வந்தது? அவை சொல்லும் பாடம் என்ன? கூட்டுத்தலைமை நமக்கு நன்மை பயக்குமா? கூட்டின் பின்னர் தம் பிள்ளைகளைக் கூட்டியும் வருவார்களா? இளைஞர் நமக்கு இனியாவது வழி விடுவார்களா? சமூகம் தொடர்பில் இந்த காலகட்டத்தில் நாம் சிந்தித்து செயற்படவில்லையானால் பாரிய வரலாற்றுத்தவறை செய்தவர்களாவோம். நமது வகிபாகம் என்ன என்பது தொடர்பில் இளைஞர் நாம் ஒவ்வொருவரும் புரட்சியான சிந்தனையை நோக்கி தலையெடுக்க வேண்டும்.
சிபான் பீ.எம்,
மருதமுனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -