பிறவ்ஸ்-
கம்பஹா மாவட்டத்திலுள்ள 20 முஸ்லிம் பாடசாலைகளில் பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயம் நல்லதொரு இடத்தில் காணப்படுகிறது. கல்வி முன்னேற்றத்துக்காக பகுதிநேர வகுப்புகளையும் ஊக்குவிப்புகளையும் இங்குள்ள கல்வி சமூகம் முன்னெடுத்து வருவது பாராட்டுக்குரியது என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
நாம்புளுவ, பசியாலை பாபுஸ்ஸலாம் மகா வித்தியாலயத்தில் நேற்று (06) வியாழக்கிழமை நடைபெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு உரையாற்றுகையில் மேலும் கூறியதாவது,
எனது தந்தை பாடசாலைக்கு அதிபராக இருந்த விவசாயக் கிராமங்களில், பாடசாலைக்கு செல்லாத பிள்ளைகளை அவர் வயலுக்கு சென்று அடித்து விரட்டி பாடசாலையில் சேர்த்துவிட்டதாக அவரிடம் கற்ற மாணவர்கள் இன்றும் பெருமையாக சொல்கின்றனர். இதுபோல, பாடசாலைக்கு செல்லாத மாணவர்கள் விடயத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் கவனம் செலுத்துவது மிக முக்கியம்.
வேலைநிமித்தம் கட்டாரிலுள்ள பல்வேறு முஸ்லிம் கிராமங்களைச் சேர்ந்த அமைப்புகள் பாடசாலைக் கல்வி விடயத்தில் மிகுந்த அக்கறையுடன் செயற்பட்டு வருகின்றன. நான் அண்மையில் கட்டாருக்கு சென்றபோது, குறித்த அமைப்புகள் என்னைச் சந்தித்து, இங்குள்ள கல்வி நடவடிக்கைளை மேம்படுத்த வேண்டுமென என்னிடம் கோரிக்கை விடுத்தன. இதனை ஆரோக்கியமானதொரு செயற்பாடாகவே நான் பார்க்கின்றேன்.
பசியாலை கிராமத்துக்கு குடிநீர் வழங்கவேண்டிய தேவைப்பாடும் இருக்கின்றது. அத்தனகல்ல நீர் வழங்கல் திட்டத்தை நாங்கள் சீன அரசாங்கத்தின் உதவியுடன் ஆரம்பித்திருக்கிறோம். அது முடிவடைந்தவுடன் இங்குள்ள குடிநீர் பிரச்சினைகள் தீர்ந்துவிடும். அதற்கிடையில் தற்காலிகமாகவது பசியாலைக்கு குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடுகளை செய்வதற்கு உத்தேசித்துள்ளோம்.
பாடசாலை அதிபர் நாஸர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மேல் மாகாணசபை உறுப்பினர் ஷாபி றஹீம், வலயக் கல்வி பணிமனை அதிகாரிகள், பாடசாலை ஆசிரியர்கள், நிர்வாகிகள், மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.