சாணக்கியர் என தன்னைத்தானே புனைப்பெயர் சூடிக்கொண்ட தலைமை கடந்து வந்த ஜனாதிபதித் தேர்தல்கள், பாராளுமன்றத்தேர்தல், மாகாண சபைத் தேர்தல் போன்றவற்றில் எடுத்த சாணக்கிய முடிவுகள் தொடர்பில் நாம் ஆராய்ந்து ஆக வேண்டும். அதிலும் குறிப்பாக எமது சமூகத்தினை அடகு வைத்து களமாடிய ஜனாதிபதி தேர்தல்கள் எமது மக்களுக்கு, அதிலும் குறிப்பாக கிழக்கு மாகாண மக்களுக்கு ஒரு பாடம் என்பதனை எவரும் மறுக்கமுடியாது.
மறைந்த தலைவர் ரணிலோடு கூட்டு வைக்கக்கூடாது எனக் கூறியிருந்தும் 2005 ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ரணிலுடன் கூட்டு வைத்து இலங்கை முஸ்லிம்களின் ஏக பிரதிநிதி நாங்கள் என்று தம்பட்டம் அடித்து எமது கிழக்கு மக்களை காட்டிக் கொடுத்தார். சுமார் 186000 வாக்குகளால் ரணில் தோல்வியுறவே பின்கதவால் வந்து மகிந்தவுடன் ஒட்டிக்கொண்டார். மகிந்தவும் தபால் தொலைத்தொடர்பு அமைச்சைக் கொடுத்து இவரை அழகு பார்த்தார்.
பின்னர் வந்த 2010 ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில், பாசிச புலிகள் கொன்றொழித்த வடுக்கள் எம் முஸ்லிம் மக்களை விட்டு அகலமுன்னதாக, ஹஜ் கடமைக்கு சென்று திரும்பும் வழியில் கொலை செய்யப்பட்ட ஹாஜிகளின் குடும்பங்களின் வலி ஆறு முன்பதாக, கற்பிணித்தாயின் வயிற்றில் இருந்து உருவிவிடப்பட்ட சிசுவின் சாபம் நீங்குமுன்பதாக, பள்ளியில் சுடப்பட்ட ஆன்மாக்களின் ஆசைகள் அடங்குமுன்பதாக, அந்த புலிப்பயங்கரவாதத்துக்கு முள்ளிவாய்க்காலிலே வைத்து கொள்ளிவைத்து யுத்த வெற்றியை சுவீகரித்துக் கொண்ட ஜனாதிபதியை முழு இலங்கை பெரும்பான்மை மக்களும் ஆதரக்க முன் வந்த போதும் எம்மை சாணக்கியர் மகிந்தவுக்கு எதிராகவே வழி நடத்தினார். நன்றியுணர்வு கிஞ்சித்தும் இல்லாத சோணகிரிகளானோம். மகிந்த 1800000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். ஹக்கீம் மீண்டும் பின்கதவால் நுழைந்தார். தேர்தலில் நீதமாக நடக்காமையால் நீதியமைச்சராக கெளரவிக்கப்பட்டார்.
பெரும்பான்மை மக்களும் இனவாதிகளும் நமது முகத்திரையக் கிழித்து முத்திரை குத்துமளவுக்கு எமது தேர்தல் எதிர்ப்பு செயற்பாடுகள் இருந்ததன் விளைவே அவர்கள் பள்ளிகளிலும், ஹலால் விடையத்திலும், பர்தாவிலும் கை வைக்கக் காரணமன்றி வேறெதுவும் இல்லை.இதற்கு முழுக்க முழுக்க வகை கூற வேண்டியவர் ஹக்கீம் அன்றி வேறெவரும் இல்லை.
அது போன்றே 2012 மாகாண சபைத் தேர்தலில் அரசில் அமைச்சராக அங்கம் வகித்துக் கொண்டே மாகாணசபையில் மகிந்தவை எதிர்த்து நின்றார். "உடைக்கப்பட்ட பள்ளிகளுக்கா உங்களுடைய வாக்குகள்" என்று கூக்குரல் இட்டு மக்களை உருவேற்றி வெற்றி பெற்றார். ஆனால் மகிந்தவுடனேயே கைகோர்து கிழக்கு முஸ்லிம்களை மீண்டும் ஏமாற்றினார்.
2015 தேர்தல் நெருங்குமுன்பதாகவே சிறுபான்மையை நசுக்கும் சட்டமூலத்துக்கெல்லாம் ஆதரவளித்துவிட்டு, மூன்றாவது முறை மகிந்த ஜனாதிபதியாக வருவதற்கான சட்டமூலத்தையும் வகுக்க வாக்களித்துவிட்டு, மகிந்தவுக்கு ஆதரவளிப்பதற்கு வாங்கிய கோடிகளையும் திருப்பிக்கொடுத்துவிட்டு, மைத்திரியை தபால் வாக்கெடுப்பும் முடிந்ததன் பிற்பாடு ஆதரிக்க தூண்டினார்.
மைத்திரியை அல்ல மாட்டைக் கொண்டு வந்து மகிந்தவுக்கு எதிராக கட்டி வாக்களிக்கும் படி கேட்டிருந்தாலும் கிழக்கு முஸ்லிம் மக்கள் கொட்டித்தீர்த்திருப்பார்கள். காரணம் சர்வதேசத்தின் சதிகளையும், ஞானசாரரையும், சம்பிக்க ரணவக்க வையையும் இயக்கிய நோர்வேயை, இஸ்ரேலை ,அமெரிக்காவை அவர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. தேர்தலில் மைத்திரி வென்றார். முஸ்லிம்களாகிய எமக்கு இன்று மிஞ்சியது ஆப்புத்தானே தவிர விமோசனம் இல்லை.
1990களில் புலிகள் விரட்டியடித்த வடபுல முஸ்லிம்களுக்கு அன்றிருந்த பிரேமதாஸவால் எந்தத்தீர்மானமும் நிறை வேற்றிக் கொடுக்க முடியாதிருந்த போது, மூதூர், சம்பூர் மக்களை விரட்டியடித்த புலிகளை திருப்பியடித்து எமது மக்களை குடியமர்த்திய மகிந்தவுக்காக சாணக்கியர் தலைமையில் மக்கள் வழிப்படுத்தப்பட்ட விதம் இரக்கமே சுரக்காத மிருகங்கள் நாங்கள் என்பதனைக் காட்டி நின்றது.
சாணக்கியம் எனும் பெயரை வைத்துக் கொண்டு எமது மக்களை நல்வழி நடாத்தத் தவறிய ஒரு தலைவனாகவே நாங்கள் இவரை நோக்கலாம். அல்லது இனங்களுக்கிடையே முறுகலைத்தூண்டி தனது சுய அரசியலுக்காக குளிர்காயும் ஒருவராகவே நோக்கலாமேயன்றி, வரலாற்றில் தியாக உணர்வோடு செயற்பட்ட ஒருவராக இவரை நாங்கள் பார்க்க முடியாது. மீண்டும் ஒரு தேர்தல் வரும். என்ன சமன்பாட்டுடன் சாணக்கியர் வருவார் எனப்பொறுத்திருப்போம்.
Shifaan Bm
மருதமுனை.