இந்திய - இலங்கை முஸ்லிம்களின் நல்லுறவு வரலாற்று ரீதியானது. மருதமுனையில் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ்


ஏ.எல்.எம்.ஷினாஸ்- மருதமுனை-

லங்கை, இந்திய கலை, கலாசார, கல்வி, பண்பாட்டு அம்சங்களில் வரலாற்றுக் காலத்தில் இருந்து இரு நாட்டு முஸ்லிம்களும் இறுக்கமான உறவுகளையும், தொடர்புகளையும் பேணி வருவதாக தமிழ்நாடு மனித நேயக் கட்சியின் தலைவரும், முனைவருமான பேராசிரியர் எம்.எச்..ஜவாஹிருல்லாஹ் தெரிவித்தார்.

மருதமுனை அந்-நஹ்லா அரபுக் கல்லூரியின் போதனாசிரியர்கள், உலமாக்களுக்கிடையிலான சந்திப்பு அந்-நஹ்லா அரபுக் கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்றது. இங்கு உரையாற்றும் போதே பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் இவ்வாறு தெரிவித்தாா். தொடர்ந்து உரையாற்றுகையில்,

இலங்கையில் சிறுபான்மையான முஸ்லிம்கள் இந்திய முஸ்லிம்களோடு ஒப்பிடும் போது இலங்கையில் நிறைய உரிமைகளையும், சலுகைகளையும் அனுபவித்து வருகின்றனர். அதேவேளை,20 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் இந்தியாவில் மதச் சார்பற்ற அரசு முஸ்லிம்களை எல்லாத் துறைகளிலும் வேறுபடுத்திப் பார்க்கின்ற போக்கை அவதானிக்கும் போது இலங்கை முஸ்லிம்கள் அதிர்ஷ்டசாலிகள் என்றே கூற வேண்டும்.

விடுதலைப் போராட்ட காலங்களில் முஸ்லிம் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவித்த போதும்2004 சுனாமியால் பாதிக்கப்பட்ட போதும் தொப்புள்கொடி உறவைத் தமிழக முஸ்லிம்கள் வெளிப்படுத்தியதோடு இலங்கையில் ஏற்படும் ஒடுக்கு முறைகள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளாகப் பிரதிபலிக்கு போது எனது தலைமையிலுள்ள மனித நேயக் கட்சி குரலெழுப்பியும், வெகுஜனப் போராட்டங்களையும் முன்னின்று நடாத்தியமை எமது இஸ்லாமிய சகோதரத்துவத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

2015 டிசம்பரில் பெரும் வெள்ளம் சென்னையை மூழ்கடித்த போது பாதிக்கப்பட்ட அதிக தமிழ் மக்கள் எமது பள்ளிவாசல்களிலும், மத்ரசாக்களிலும் பல நாட்கள் தங்க வைக்கப்பட்டு முஸ்லிம் அமைப்புக்களால் ஆதரிக்கப்பட்டமையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உட்பட பல்வேறு தமிழக அரசியல் தலைமைகள் வெகுவாகப் பாராட்டியமை எமது மனித நேயக் கட்சிக்கு கிடைத்த முழு மொத்த தமிழகத்தின் அங்கீகாரமாகக் கருதுகிறோம். எனக் கூறினார்.

மேற்படி நிகழ்வில் அந்- நஹ்லா அரபுக் கல்லூரியின் செயலாளர், ஜம்மியத்துல் உலமாவின் பிரதித் தலைவர் அஷ்ஷெய்க் எப்.எம்.ஏ அன்ஸார் மௌலானா (நளீமி) உரையாற்றுகையில்,

இலங்கைக்கு இஸ்லாம் வந்த வரலாற்றைப் பொறுத்த வரை அன்றைய தென்னிந்திய இஸ்லாமியப் பெரியார்கள், மகான்கள், கீர்த்திமிக்க உலமாக்கள் மேற்கொண்ட பங்களிப்பை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம். வெலிகமையில் ஆரம்ப மத்ரசாவை மத்ரசத்துல் பாரி என்ற பேரில் கி.பி.1884 ல் காயல் பட்டினத்திலிருந்து வருகை தந்த மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ஆரம்பித்து வைத்தமை, 1954ல் அதிராம் பட்டினத்தைச் சேர்ந்த பெரிய ஹஸ்ரத் மர்ஹூம் அபூபக்ர் அத்ரமி அட்டாளைச்சேனையில் ஷர்கியா அரபுக் கல்லூரியை நிறுவியமை, அவரது மகன் அப்துல்லாஹ் ஹஸ்ரத்1956 ல் காத்தான்குடியில் ஜாமியதுல் பலாஹ் அரபுக் கல்லூரியை நிறுவியமை, ஆரம்ப காலங்களில் வேலூர் பாக்கியதுஸ் சாலிஹாத், ஜமாலியா, தேவ்பந்த் போன்ற பிரபல்யமான தமிழக அரபுக் கல்லூரிகளிலேயே எமது மூத்த ஆலிம்கள் உருவாக்கப்பட்டு இலங்கையில் சன்மார்க்கப் பணி புரிந்தமை என்பன இந்திய - இலங்கை சமய, கலாசார உறவு நீண்ட வரலாற்றைக் கொண்டது என்பதற்கான ஆதாரமாகும் என்றார். நிகழ்வில் கல்லூரியின் அதிபர் ஏ.அபூஉபைதா(மதனி) முன்னாள் அதிபர் ஏ.எல்.மீராமுகையதீன், கலாநிதி எம்.எல்.முபாறக் (மதனி) உட்பட உலமாக்கள், புத்திஜீவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -