ஐக்கிய தேசிய முன்னணியின் சார்பாக அரசு தரப்பில் இடம்பெற்றுள்ள தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய ஒரு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் தமிழ் முற்போக்கு கூட்டணி, ஐக்கிய தேசிய கட்சி அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அடங்குகின்றனர்.
இன்று பாராளுமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், எம். திலகராஜ் ஆகியோர் கொண்ட குழுவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, லக்ஸ்மன் கிரியல்ல ஆகியோருக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையையடுத்து இக்குழு அமைக்கப்பட்டது என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சரும், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவருமான மனோ கணேசனிடம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் மேலும் கூறியதாவது,
எமது பேச்சுவார்தையையடுத்து இன்று அமைக்கப்பட்ட பதின்மூன்று பேர் கொண்ட இக்குழுவில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க (தலைவர்), அமைச்சர்கள் லக்ஸ்மன் கிரியல்ல, கூட்டணி தலைவர் மனோ கணேசன், பிரதி தலைவர்கள் பழனி திகாம்பரம், வி. இராதாகிருஷ்ணன், நவீன் திசாநாயக்க, மலிக் சமரவிக்கிரம, ஹரின் பெர்னாண்டோ, எம்பீக்கள் எம். திலக்ராஜ்,அரவிந்தகுமார், வேலு குமார், வடிவேல் சுரேஷ் மற்றும் மலைநாட்டு புதிய கிராமங்கள்,உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு செயலாளர் ரஞ்சனி நடராஜபிள்ளை ஆகியோர் இடம்பெறுகின்றனர். குழுவின் செயலாளராக பிரதமர் அலுவலக மேலதிக செயலாளர் ஜி.எச்.எம்.ஏ. பிரேமசிங்க பணியாற்றுவார்.