பொத்துவில் தாஜகான்-
பொத்துவில் கல்வியானது அபிவிருத்தியடைய வேண்டுமென நான் பலமுறை முயற்சித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன். ஆனால் பலர் பொத்துவில் உப வலயத்திற்கு அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அதிகாரங்களை கொடுக்காமல் தடுத்து வைத்துள்ளார் என வசை பாடினார்கள். உபவலயத்திற்குரிய அதிகாரம் பற்றிய எந்தவொரு கடிதமும் இல்லாத சந்தர்பத்தில் நான் எப்படி அதிகாரப்பகிர்வை மேற்கொள்ளலாம். ஆனால் இப்பொழுது உத்தியோக பூர்வமாக அக்கரைப்பற்று வலயம் பொத்துவிலுக்கான அதிகாரத்தை இன்றிலிருந்து வழங்குகின்றது. என்று அக்கரைப்பற்று வலயக்கல்விப்பணிப்பாளர் ஏ.எல். எம். காசிம் தெரிவித்தார்.
(2017.04.06) அன்று பொத்துவிலுக்கான கல்வி நடவடிக்கையில் உபவலயத்திற்கான அதிகாரங்களை கையளிக்கும் நிகழ்வு அல் பஹ்ரியா வித்தியாலயத்தின் கேட்போர்கூடத்தில் இடம் பெற்றது. கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அவர்களின் கடிதத்திற்கு ஏற்ப 2017.04.01 இல் இருந்து பொத்துவில் உபவலயத்திற்கான அதிகாரங்கள் (நிதி, நிர்வாகம்) பகிர்ந்தளிக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம். காசிம் அவர்களினால் பொத்துவில் உபவலயக் கல்விப் பணிப்பாளர் என். அப்துல் வஹாப் அவர்களிடம் கையளிப்பு செய்யப்பட்ட பின்னர் அதிபர்களுக்கு மத்தியில் உரையாற்றும் பொழுது தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 04 வருடமாக உபவலயம் திறக்கப்பட்டு இங்கு இயங்கி வந்தாலும் அதற்குரிய அதிகாரங்கள் எழுத்துருவில் வழங்கப்படவில்லை. அரசியல்வாதிகள் கூட வாயளவில்தான். உபவலயத்திற்கான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்கள். ஆனால் அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளராகிய எனக்கு எவ்வித கடிதமும் வரவில்லை. எனக்குரிய எழுத்துருவில் கட்டளை வராத பொழுது நான் எவ்வாறு அதிகாரத்தை பகிர்ந்தளிப்பது. ஆனால் பலர் புரியாமல் என்னை விமர்ச்சித்தார்கள். ஆனால் இன்று பொத்துவில் உபவலயம் அதிகார பூர்வமாக இயங்குவதற்குரிய கடிதம் செயலாளரினால் வழங்கப்பட்டுள்ளது. இக்கடிதத்தைப் பெறுவதற்காக பொத்துவில் இன்டர்லெக்சுவல் அமைப்பு செயற்பட்டு முழு வேலையினையும் செய்திருக்கின்றது.
தற்பொழுது அதிகார பூர்வமான கடிதம் கிடைத்துள்ளமையினால் கிழக்கு மாகாணத்தில் அதிகாரமளிக்கப்பட்ட உபவலயமாக பொத்துவில் இயங்கும். இங்கு இருக்கின்ற அதிபர்கள் பொத்துவில் உபவலயக்கல்விப் பணிப்பாளரின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பட வேண்டும். கடந்த காலங்களில் பல குளறுபடிகள் நடந்தாலும் எதிர்வரும் காலங்களில் சிறப்பாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பொத்துவில் உபவலயத்திற்கான அதிகாரத்தைப் பெறுவதில் மாகாணக்கல்விப் பணிப்பாளரின் பங்கு அளப்பரியது. அவருடைய எண்ணம் இந்த பொத்துவிலுக்கான அதிகார பூர்வமான வலயம் ஒன்றைப் பெற்றுக் கொடுக்க வேண்டுமென்பதாகும். என்று தெரிவித்தார்.
பொத்துவிலுக்கான உபவலயத்திற்கான அதிகாரங்களை கையளிக்கும் இந்நிகழ்வில் பொத்துவில் பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.