புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை- வட கிழக்கு மக்களின் அரசியல் உரிமை-றகீப் ஜௌபர்

(இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் ஊடக அறிக்கை)

எம்.வை.அமீர்-
20.04.17 அன்று பெல்ஜியத்தில் நடந்த GSP+ பரிசீலனைக் கூட்டத்தில் இலங்கையில் தொழிலாளர்கள் உரிமைகள் சர்வதேச அளவில் கேள்விட்குட்படுத்தப்படுவது இதுவே முதல் தடவை. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைப் பிரச்சினையை சர்வதேச மயப்படுத்த எம்மோடு இணைந்து பணியாற்றிய சர்வதேச தொண்டு நிறுவனங்களுக்கும், ஐரோப்பிய மனித உரிமை அமைப்புகளுக்கும் இக்கணம் நன்றி கூறக்கடமைப்பட்டுள்ளோம்.

என இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் கூட்டணியின் பிரதம அமைப்பாளர் றகீப் ஜௌபர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது அரசியல் தலைமைகள் செல்லாக்காசாகி சோரம் போய் மெளனிகளாகி விடுகின்ற போது இ எமது பிரச்சினைகளை சுயாதீனமாக சர்வதேசமயப்படுத்தி, அரசிற்கு எவ்வாறு அழுத்தம் கொடுக்கலாம் என்பதை இந்த அநுகுமுறை நன்கு உணர்த்தி நிற்கின்றது. எமது நாட்டில் தொழிலாளர் உரிமைகள் மேன்படுத்தப் பட்டு, வகுப்புப் பிரிவினைகள் இல்லாத ஒரு சமத்துவமான நாட்டைக்கட்டியெழுப்புவதே எமது நோக்கமாகும். இதற்காக இந்நாட்டின் அரசியல் தலைமைகள் மானசீகமாக உழைப்பதற்கு முன்வரவேண்டும்.

மாறாக, அதிகாரப் போட்டியை மையமாகக் கொண்ட அருவருப்பான அரசியல், சர்வதேச போர்ச்சூழலையும் இலங்கையின் பூகோள கேந்திர நிலையையும் தமக்கு சாதகமாகப் பயன் படுத்தி தீர்வுகளை தள்ளிப் போடும் யுக்தி, நாட்டில் இன்னும் பயங்கரவாதம் இருப்பது போல் செயற்கையாக உருவாக்கப்படும் தோற்றப்பாடு. இவ்வாறான அநுகுமுறைகள் நாட்டை மேலும் பாதாளத்திற்கே இட்டுச் செல்லும்.

புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக நாம் பல வருடங்களாக மிக அர்ப்பணிப்புடன் செயற்பட்டுகொண்டிருகின்றோம். தற்போது சில உண்மைகளை வெளிப்படுத்துவதில் எமக்கு கடமை இருக்கின்றது.

புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை என்பது 1990 ஐ.நா பிரேரணையில் குறிப்பிடப் பட்ட விடயமாகும். இந்த பிரேரணையில் இலங்கை அரசு 1996 ஆம் ஆண்டு கைச்சாத்திட்டது. இருந்தும் இவ்வாக்குரிமை 20வருடங்களாக இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது. இந்த இழுத்தடிப்பின் உள்நோக்கம், விளைவுகள் பற்றி மக்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை.

கடந்த செப்டம்பர்,2016 இல் இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் உரிமை பற்றி பரீசீலிக்கும் கூட்டம் ஜெனீவாவில் நடைபெற்றது. அதனை சமாளிப்பதற்காக, புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை பற்றி பரீசீலிக்க பாரளுமன்றக் குழு ஒன்றை தற்போதுள்ள எமது அரசு அமைத்தது. அக்குழு 6 மாதங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அந்தக்குழு எங்கே ?. சிபார்சு அறிக்கை எங்கே ?. கடந்த 2016ஜனவரியில் அமைக்கப்பட்ட குழுவுக்கு என்ன ஆனது ?. 2011ம்ஆண்டு அமைச்சரவை அங்கீகாகரம் பெற்ற 5ஆண்டு மனித உரிமை மேன்பாட்டுத் திட்டத்திற்கு என்ன நடந்தது ?. அதன் பிரகாரம் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை 2016 ஆம் ஆண்டு அமுல் படுத்தப்பட்டிருக்க வேண்டுமே!.

புலம் பெயர்ந்தவர்களை காரணம் காட்டி வடக்கில் பாராளுமன்ற ஆசன எண்ணிக்கை குறைக்கப்பட்டு தெற்கிலுள்ள மாகாணங்களுக்கு கொடுக்கப்பட்டது, புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை சட்டரீதியானதாக இருந்தும், இவர்களை வாக்களர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளாமல் ஒரு வாக்காளர் சனத்தொகை பதிவு செய்யப்பட்டு , மாவட்ட ரீதியான ஆசன எண்ணிக்கையை குறைப்பது சட்டரீதியானதா என்பதை கேள்விக்குத் படுத்தி இருக்கலாம் அல்லது நீதி மன்றத்தை நாடியிருக்கலாம்.

புலம் பெயர்ந்தவர்களில் அனேகமானவர் இன்னும் இலங்கை பிரஜா உரிமையுடன் வெளிநாடுகளில் இருப்பதை இந்த அரசு அறியும். புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை வழங்கப் படும் சந்தர்ப்பத்தில் , ஆசனங்கள் குறைக்கப்பட்ட மாவட்டங்களின் ஆசனங்கள் மீண்டும் அதிகரிக்கப் படவேண்டும்.

புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை மேலும் தாமதமாகும் சந்தர்ப்பத்தில், வட கிழக்கில் உள்ள மேலும் சில மாவட்டங்கள், பாராளுமன்ற ஆசானங்களையும், சிறுபான்மை பிரதிநிதித்துவத்தையும் இழக்கும் அபாயம் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றது.

வெற்றிடமாக்கப்படும் புலம் பெயர் வாக்குகளை சாதகமாக பயன்படுத்தி , திட்டமிட்டு அதிகரிக்கப்படும் பெரும்பான்மை இன குடியேற்ற வாக்குகளை கொண்டு, சிறுபான்மை பிரதிநிதித்துவங்கள் விகிதாசார தேர்தல் முறைமூலம் சூறையாடப் படுகின்றன. இதற்கு அம்பாறை மாவட்டம் ஒரு பாரிய உதாரணமாகும்.

கிழக்கு மாகாணத்தை பொறுத்தவரையில், முக்கியமாக அம்பாறை , மட்டக்களப்பு மாவட்டங்களில் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குகள் மொத்த வாக்காளர் சனத்தொகையில் சுமார் 20% இற்கும் மேலாகும். இந்த வாக்குகள் அளிக்கப் படாமையினால், விகிதாசார தேர்தல் அடிப்படையில் சிறுபான்மை பிரதிநிதித்துவம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே செல்கின்றது, இதனை கடந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இரு கட்சிகளுக்கிடையிலுள்ள வாக்கு வித்தியாசமம் அல்லது வேட்பாளர்களுக்கிடையிலுள்ள விருப்பு வாக்கு வித்தியாசம் மிக குறுகியதாகவே இருக்கின்றது. ஆக, புலம் பெயர் தொழிலாளர்களின் வெற்றிடத்தால், நீதியான ஜனநாயகமான மக்களின் தெரிவு இங்கே கிடைப்பதில்லை. கிழக்கு மாகாண சபை ஆட்சி கூட சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே தீர்மானிக்கப் படுகின்றது. இச் சந்தர்ப்பத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குகளே உண்மையான பெரும்பான்மையை நிர்ணயிக்கும் என்பது வெளிப்படை உண்மை .

மொத்தத்தில் புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை இழுத்தடிப்பால் பாதிக்கப் படுவது வட கிழக்கிலுள்ள சிறுபான்மை பிரதிநிதித்துவம் தான் என்பதை இவர்கள் அனைவரும் அறிவார்கள். இந்த ஒரு காரணத்திற்காகவே, புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமை திட்டமிட்டு இழுத்தளிக்கப்படுகின்றது. ஆகவே, இந்த நிலைமையைப் புரிந்து கொண்டு வட கிழக்கு அரசியல் பிரதிநிதிகள், புலம் பெயர் தொழிலாளர்களின் வாக்குரிமைக்காக குரல் கொடுக்க முன் வரவேண்டும்.

தற்போது ஆட்சியிலுள்ளவர்கள், முன்னால் ஆட்சியாளர்களை குறை குறைவது ஏற்புடையதல்ல. கடந்த 20வருடங்களில் இரு பெரும்பான்மை கட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தது, ஜே.வி.பி கூட 30 ஆசனங்களுடன் சுதந்திர கட்சியின் பங்காளியாக ஆளுங்கட்சியில் இருந்தது. இவர்கள் அப்போது உரிமைகளையும் ஊழல்கள் பற்றியும் பேசினார்களா. இவை அனைத்தும் வெறும் அதிகாரத்திற்கான நாடகங்கள் தான்.

ஆகவேஇ நாட்டில் நீதியையும் ஜனநாயகத்தையும் சமத்துவத்தையும் ஒவ்வொரு பிரஜையும் சுவாசிக்க மானசீகமாக உழைக்க நாம் அனைவரும் ஒன்று படவேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -