மு.கா முஸ்லிம்களை காட்டிக்கொடுக்கின்றதா..? "நுஆ" ஏன் ஆரம்பிக்கப்பட்டது..?

ஸ்ரீ.ல.மு.காங்கிரஸின் தற்போதைய போராளிகளே..! நீங்கள் ஆதரிக்கின்ற தற்போதைய ஸ்ரீ.ல.மு. காங்கிரஸின் கொள்கைகளும், கோட்பாடுகளும் இதுவரை உரிய இலக்கை அடைந்துளளதா..? அல்லது அடைவதற்கு முயற்சிக்கின்றதா..? அதன் மூலம் உங்களுக்கும், எங்களுக்கும் விமோசனம் கிடைத்துள்ளதா..? அல்லது இனிமேலாவது அந்த இலக்கை அடையக்கூடிய வாய்ப்புகள் உள்ளதா..? என்ற கேள்விகளுக்கு உங்களிடம் பதில் இருக்கின்றதா என்று உங்களை நீங்களே சுயபரிசோதனை செய்து கொள்ளவேண்டும். 

(மற்ற கட்சிகளை விட ஏன் உங்களிடம் இந்த கேள்வி கேட்கின்றோம் என்றால், உங்கள் கட்சியின் தலைவர்தான் முஸ்லிம் சமூகத்தின் ரைவரும் நாங்களே நடத்துனரும் நாங்களே என்று கூறிக்கொண்டிருப்பதனாலாகும்.) 

விடயத்துக்கு வருவோம், 

இலங்கையில் நாம் சிறுபாண்மையிலும் சிறுபாண்மையாக வாழுகின்றோம். முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் நாடுகளில் கிடைக்கும் உரிமைகளைப்போன்று இங்கேயும் நமக்கு கிடைக்கவேண்டும் என்று கூறிக்கொண்டு, எம் சமூகத்தை உசுப்பேத்தி பாராளுமன்ற சுகபோகங்களை அனுபவிப்பதற்கும், வங்கி நிலுவைகளை கோடிகளாக மாற்றுவதற்கும், தனது ஆதரவாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கும், இனரீதியாக முஸ்லிம்களை உணர்ச்சியூட்டி, தனிக்கட்சிதான் ஒரேவழி என்று கூறிக்கொண்டும், எம் சமூகத்தை தொடர்ந்தும் ஏமாற்றுவதை நாம் யாரும் அனுமதிக்க முடியாது. 

இனரீதியாக நாம் சிந்தித்து நடந்தோமேயானால் பெரும்பாண்மை சமூகமும் எம்மை இனரீதியாக ஒதுக்கி பார்ப்பதற்கு நாமே இடம் எடுத்துக் கொடுத்தமாதிரியாகி விடும் என்ற காரணத்தினால்தான், தமிழர்களைப்போல் எங்களால் இனரீதியாக செயல்பட முடியாது என்று டி.பி ஜாயா போன்ற அன்றய முஸ்லிம் தலைவர்கள் தமிழ் தலைவர்களைப் பார்த்து கூறியிருந்தார்கள்.

அதற்காககத்தான் இலங்கை சுதந்திரம் அடைந்ததற்கு பிறகு நமது முன்னோர்கள் பிரிந்து நின்று அரசியல் செய்வதைவிட இனங்கிய அரசியல் மூலம்தான் நமது இருப்பை ஒரு அளவேனும் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அன்று யோசித்து நடந்தார்கள்.

அவர்கள் பின்பற்றிய அந்த வழி பல நண்மைகளையும், சில தீமைகளையும் நமக்கு பெற்றுத்தந்தாலும், பெரும்பாண்மை சமூகத்துக்குள் சிறுபாண்மையாக வாழும் நமது முஸ்லிம் மக்களுக்கு அந்த வழிமுறை ஓரளவேனும் பாதுகாப்பை தந்துவந்தது. 

சிங்களவர்கள் தேசிய கட்சிகள் என்று கூறிக்கொண்டு பல இன மக்களையும் அதில் இணைத்திருந்தார்கள். அதே நேரம் தமிழர்கள் இனரீதியான கட்சிகளை ஆரம்பித்து, எங்கள் வழி தனிவழி என்று சென்று கொண்டிருந்தார்கள். அதனால் இன்றுவரை என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்பதை நாம் எல்லோரும் அறிவோம்.

அந்த நேரத்தில் முஸ்லிம்களும் தனிக்கட்சி என்று ஆரம்பித்தால் சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் அரசியல் ரீதியாக பிரித்துவிடும், அப்படி பிரிவிணை ஏற்பட்டால் எதிர்காலத்தில் எமது சமூகத்துக்குத்தான் ஆபத்தாக வந்துமுடியும் என்றே நமது முன்னோர்கள் நினைத்தார்கள். 

இனரீதியாக பிரிந்து நிற்பதை விட, இனங்கிய அரசியலினூடாக பெற்றுக் கொள்ளும் நண்மைகளே சிறந்தது என்று அவர்கள் நினைத்ததில் தப்பில்லை என்றே கூறலாம்.

காலவோட்டத்தில், நமது முஸ்லிம் தலைவர்கள் பாராளுமன்றம் செல்வதற்காக இந்த இனரீதியான கட்சிக் கோசத்தை முன் வைத்து செயல்பட்டார்களா? அல்லது முஸ்லிம் மக்களின் விடிவுக்காய்த்தான் இந்த இனரீதியான கோசத்தை முன்வைத்தார்களா? என்பது, அவர்களுக்கும் அவர்களைப்படைத்த இறைவனுக்கும்தான் வெளிச்சமாகும்.

எது எப்படியோ நாமும் தமிழர்களைப்போல் தனிக்கட்சி ஆரம்பித்து முஸ்லிம்களை முஸ்லிம் கட்சிக்கு வாக்களிக்க வைத்து விட்டோம், இதனால் இதுவரை நாம் அடைந்த நண்மைகள் என்னவென்று, இதுவரை யாரும் தெளிவு பெற முயற்சித்ததாக தெறியவில்லை.

இருந்தாலும் முஸ்லிம்களின் உரிமையை வெல்லுவதற்கு தனிக்கட்சிதான் ஒரேவழியென்றும், இந்த கட்சி மற்றக்கட்சிகளை விட இஸ்லாமிய சட்டதிட்டங்களை பின்பற்றி நடக்கும்மென்றும், அதற்கு மாற்றமாக இந்த கட்சி இயங்குமாக இருந்தால் இந்த கட்சியை அழித்துவிடு "யா அல்லாஹ்" என்று கூறிக்கொண்டும் முஸ்லிம் மக்களை அரசியலில் இனரீதியாக ஒன்றுபடுத்தி வந்த கட்சிதான் இந்த ஸ்ரீ.ல.மு. காங்கிரஸ் என்ற கட்சியாகும்.

இப்படி குர்ஆன் ஹதீஸ்படி இயங்கி உரிமைகளை பெற்றுத்தருவோம் என்று வந்த கட்சி இதுவரை பெற்றுத்தந்த உரிமைகளும், அபிவிருத்திகளும் என்னவென்று யாராலும் இதுவரை பட்டியலிட முடியவில்லை.

வேலைவாய்ப்புகள் என்றாலும் சரி, அபிவிருத்தி என்றாலும் சரி, இழந்த உரிமையை பெறுவதென்றாலும் சரி, இனவாதிகளின் கொட்டத்தை அடக்குவதென்றாலும் சரி, பயங்கரவாதத்தினால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதிலும் சரி, இழந்த காணிகளை மீட்டுக்கொடுப்பதிலும் சரி, எந்த விடயத்தில் இந்த முஸ்லிம் கட்சி மூலம் நமக்கு உதவி கிடைத்துள்ளது என்று யாராவது பட்டியலிட முடியுமா? என்றால் அதற்கு யாரும் தயாரில்லாத நிலைதான் காணப்படுகிறது.

அதே நேரம் நமக்கு ஏற்பட்டு்ள்ள தீமைகள் என்னவென்று பார்த்தால், தமிழர்களைப்போல் நாமும் இனரீதியாக கட்சியை ஆரம்பித்தனால், சிங்கள மக்களிடமிருந்து நாம் உள்ளத்தளவில் பிரிந்து நிற்கின்றோம், இன்று சிங்கள இனவாதிகளின் இலக்குகளுக்கு இலேசாக பழியாக்கப்படுகின்றோம், சிங்கள மக்களும் இந்த இனவாதிகளின் பொய்க்கூற்றுக்கு இலேசாக இலக்காவதையும் காண்கின்றோம், எந்தளவுக்கு என்றால் முஸ்லிம் கடைகளில் சிங்கள சமூகம் எந்த சாமானும் வாங்ககூடாது என்று கூறுமளவுக்கு நிலமை வந்துவிட்டது, (அண்மையில் இதன் தாக்கம் சித்திரை பெருநாள் வியாபாரத்தில் காட்டப்பட்டுள்ளது).

எதிர்வரும் காலங்களில் பல துறைகளிலும் இனரீதியான ஒதுக்கு முறைகள் வரலாம், இதனை சிங்கள அரசுகள் முன்னெடுப்பதைவிட, சிங்கள இனவாதிகளே இதனை எழுதப்படாத சட்டங்கள் போன்று நடைமுறைப்படுத்தலாம், தமிழர்களும், முஸ்லிம்களும் சகல விடயங்களிலும் இனரீதியாக சிந்திக்கலாம் என்றால், ஏன்? நாங்கள் சிந்திக்ககூடாது என்று சிங்கள இனவாதிகள் சிந்திப்பதற்கு, நாமும் ஒருவகையில் காரணமாக இருக்கின்றோம் என்பதை சுயமாக சிந்திக்கும் யாரும் மறுக்கமுடியாது.

ஆகவே இனரீதியான அரசியல் சமூகங்களை பிரித்துவிட்டது என்பதை இந்த கட்சியை ஆரம்பித்த மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் உணர்ந்ததன் காரணமாகவே, "நுஆ" என்ற கட்சியை ஆரம்பித்திருந்தார் என்ற உண்மையை அந்த கட்சியை உயிரைக் கொடுத்து காப்பாற்றுவோம் என்று கூக்குரலிடும் போராளிகள் உணர மறுப்பதென்பது மிகவும் கவலைக்குறிய விடயமாகும்.

எதிர்வரும் காலங்களில் இந்த இனவாத கட்சிகளை வைத்துக்கொண்டு முஸ்லிம் சமூகத்துக்கு படுகுழிதான் தோண்டலாமேயொழிய, நிச்சயமாக விடிவைப் பெறமுடியாது என்பதனை எல்லோரும் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள தவறிவிடுகின்றார்கள் என்பதே உண்மையாகும்.


மறைந்த தலைவர் உயிரோடு இருந்திருந்தால் முஸ்லிம் காங்கிரசை ஒதிக்கிவைத்துவிட்டு, அதில் உள்ள மரச்சின்னத்தை மட்டும் நுஆ என்ற கட்சிக்கு மாற்றிவிட்டு, இனவாதமில்லாத தேசிய கட்சியாக அதனை வழிநடத்தி, முஸ்லிம்களுக்கு நீண்டநாள் பாதுகாப்பை உறுதிசெய்திருப்பார் என்பதை இன்றைய காங்கிரஸ் போராளிகள் புரிந்து கொள்ளாதவரை, முஸ்லிம் சமூகத்துக்கு பேரழிவுதான் ஏற்படும் என்பதில் சந்தேகமே கொளளத் தேவையில்லை, என்னதான் இருந்தாலும் அவர்களுக்கு இறைவன்தான் நேர்வழி காட்டவேண்டும்.
எம்.எச்.எம்.இப்றாஹிம்,
கல்முனை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -