முஸ்லிம் திருமண சட்டத்திருத்தம் சம்பந்தமாக ஜம் இய்யத்துல் உலமாவின் தடுமாற்றம் கவலை தருகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
இது பற்றி அவர் தெரிவித்ததாவது,
மார்க்கத்துக்கு முரண்படும் வகையிலான எந்தவொரு திருத்தத்துக்கும் உலமா சபை உடன்படாது என அண்மையில் அச்சபை தெரிவித்திருந்தது. இது மிகச்சரியான நிலைப்பாடாகும். ஆனால் உலமா சபைத்தலைவர் ரிஸ்வி முஃப்தியின் இந்நிலைப்பாட்டை ஐரோப்பிய கலாசாரத்துக்கு அடிமையான சில முஸ்லிம் பெண் அமைப்புக்கள் ஊடகங்களில் கண்டித்திருந்ததுடன் ரிஸ்வி முஃப்தி பெண் உரிமைக்கு எதிரானவர் போன்றும் அறிக்கைகளை வெளியிட்டனர். இதன் பின் உலமா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்படி பெண்களின் கோரிக்கைகளை ஏற்பது போலவும் இஸ்லாம் பெண்களின் உரிமைகளை பாதுகாத்துள்ளது என்பதால் ஜமிய்யாவும் அதனை செய்யும் என்றும் முஸ்லிம் திருமண சட்டத்தில் திருத்தம் கொண்டு வர தயார் என்றும் அறிக்கை விட்டிருப்பதானது ஜம்மிய்யா சுயமாக விடுத்த அறிக்கையா அல்லது யாருக்காவது பயந்து விடுத்த அறிக்கையா என்பது தெரியவில்லை.
உண்மையில் முஸ்லிம் திருமண சட்டத்தில் மாற்றம் கொண்டுவர அனுமதிக்க முடியாது என்பதே உலமா கட்சியின் உறுதியான நிலைப்பாடாகும். மாற்றம் என்பதற்கும் புதிதாக சிலதை சேர்ப்பது என்பதற்கும் இடையில் வேறுபாடு உண்டு.
மாற்றம், திருத்தம் என்பது இஸ்லாத்தை கொச்சைப்படுத்துவதாகும். இஸ்லாம் முஸ்லிம் பெண்களுக்கு சரிக்கு சமன் என்பதற்கப்பாலும் உரிமை வழங்கியுள்ளது என்பதை உலகம் அறியும். ஆனால் மேற்படி திருத்தத்தை வேண்டி நிற்போர் பெண்களின் வயது கட்டுப்பாடு, பெண் காதி போன்ற குர் ஆனுக்கு முரணான திருத்தங்களையே கோருகின்றனர். இதற்கு உலமா சபை அடிபணியத்தேவையில்லை. எக்காரணம் கொண்டும் இந்த திருத்ததுக்கு உடன்பட மாட்டோம் என பகிரங்கமாக முன்னர் சொன்ன உலமா சபை இப்போது ஏன் தடுமாற வேண்டும்?
காதியாருக்கு பெண் ஆலோசகர் நியமிக்கலாம், காதியாராக நியமிக்கப்படுபவர் கட்டாயம் அறபு மொழியில் குறைந்தது டிப்ளோமா பட்டம் பெற்றிருக்க வேண்டும் போன்ற சில புதிய நிபந்தனைகள் உள்வாங்கப்பட வேண்டும் என்பதையே உலமா கட்சியினராகிய நாம் சொல்கிறோம். மற்றப்படி நடைமுறையில் உள்ள முஸ்லிம் திருமண சட்டத்தில் எவரும் கை வைக்க முஸ்லிம் சமூகம் அனுமதிக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
கண்ட கண்டவனெல்லாம் திருத்தம் கொண்டு வர இடமளித்தால் நாளை இந்த நாட்டில் உள்ள முஸ்லிம்களின் பல உரிமைகளில் இனவாதிகள் கைவைக்க இடமளித்ததாக முடியும். ஆகவே முஸ்லிம் திருமண சட்டத்தில் மார்க்கத்துக்கு முரண் இல்லாத வகையில் திருத்தத்துக்கு தயார் என உலமா சபை கூறுவதன் மூலம் அதில் மார்க்கத்துக்கு முரணான சட்டம் உண்டு என்பதை ஜம்மிய்யத்துல் உலமா ஏற்பதாக அர்த்தம் ஏற்பட இடமுண்டு.
எனவே நாட்டு முஸ்லிம்கள் பலநூறு விடயங்களுக்கு முகம் கொடுக்கும் போது ஐரோப்பிய யூனியனின் உத்தரவுக்கமைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தம் என்ற பெயரில் அதனை கொச்சைப்படுத்த முனையும் கபடத்தனத்துக்கு ஜம்மிய்யத்துல் உலமா பலியாகக் கூடாது என நாம் கேட்கும் அதேவேளை இதற்கு முகம் கொடுக்க உலமா சபை அச்சப்படுமானால் அதனை உலமா கட்சியின் பால் திருப்பி விட முடியும்.
அதாவது உலமாக்கள் தலைமையிலான உலமா கட்சி இதனை எதிர்ப்பதால் நாமும் எதிர்க்கிறோம் என உலமா சபை கூறியாவது தம்மை காப்பாற்றிக்கொள்ளலாம். நாம் இது விடயத்தில் எவருடனும் ஜனநாயக ரீதியில் மோதுவதற்கு தயாராகவே இருக்கிறோம் என மௌலவி கலாநிதி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.