பழுலுல்லாஹ் பர்ஹான்-
உலக முட்டாள்கள் தினமான நேற்று 01 சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் மாட்டு வண்டியில் உலக முட்டாள்கள் தினம் 5 வது வருடமாக அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்கள் சிலரினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி உலக முட்டாள்கள் தின நிகழ்வு மட்டக்களப்பு மகாத்மா காந்திப் பூங்காவுக்கு அருகாமையிலிருந்து அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் ஊர்வலமாக மட்டக்களப்பு நகர மணிக்கூட்டு கோபுரம் ஊடாக மட்டக்களப்பு -திருமலை பிரதான வீதி வழியாக அரசடி சந்தி வரை சென்றது.
அலங்கரிக்கப்பட்ட குறித்த மாட்டு வண்டியில் ஏப்ரல் 1 'இன்னும் சிகரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்' எனும் பதாதைகளையும், பிறந்த நாள் கேக் போன்று தயாரிக்கப்பட்ட போலி கேக்கையும் வயது முதிர்ந்த மாட்டு வண்டி ஓட்டுனர் ஒருவர் ஊர்வலமாக எடுத்துச் சென்றார்.
இவ் ஊர்வளம் மாட்டு வண்டியில் சென்ற வேளை இத் தினத்தை ஏற்பாடு செய்த மட்டக்களப்பு மாவட்ட இளைஞர்களினால் வீதியால் சென்ற பொது மக்களுக்கு துண்டுப்பிரசுரம் ஒன்று வழங்கி வைக்கப்பட்டது.
பொது மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்ட அத் துண்டுப் பிரசுரித்தில் இனிய பிறந்த நாள் வாழத்துக்கள் ஏப்ரல் 1, இன்னும் சிகரட் புகைக்கும் உங்களில் சிலருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள், இவ் வாழ்த்து உங்களுக்கு பொருத்தமற்றது எனின் பொருத்தமானவருக்கு கொடுத்து வாழ்த்துங்கள், இவ்வருடம் இவ் வாழ்த்து உமக்கு பொருந்துமாயின் அடுத்த வருடம் பொருந்தாமல் இருக்க வாழத்துகின்றோம் எனவும அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் உலக முட்டாள்கள் தினத்தை முன்னிட்டு இரண்டு வகையான சுவரோட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது அதில் 'அதிகாரிகளே ஏப்ரல் 1 இன்னும் சிகரட் புகைப்பவர்களின் தினமாக பிரகடனப்படுத்த வேண்டாம் -இன்னும் சிகரட் புகைக்கும் நாம்-' ஏப்ரல் 1 'இன்னும் சிகரட் புகைக்கும் உங்கள் சிலருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்' என எழுதப்பட்டிருந்தது.
இலங்கையில் சிகரட் பாவனையை விழிப்புணர்வு ஊடாக கட்டுப்படுத்தும் நோக்கில் இன்னும் ஏமாந்து சிகரட் புகைக்கும் சிலரை அதிலிருந்து விடுபட வைக்கும் முகமாகவே இச் செயற்திட்டம் சிகரட் புகைப்பவர்களுக்கு பிறந்த தினமாக உலக முட்டாள்கள் தினத்தில் கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.