படங்கள்: அகமட் எஸ். முகைடீன், சப்னி அஹமட்-
இறக்காமம் மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் சிங்கள இனவாதிகளினால் வைக்கப்பட்ட சிலையை அகற்றுவது சம்பந்தமாக ஜனாதிபதியுடன் தலைவர் ஹக்கீம், இரா சம்பந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியபோது ஜனாதிபதியினால் சில உத்தரவாதங்கள் வழங்கப்பட்டன.
ஜனாதிபதியின் அவ்வுத்தரவாதங்களுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக ஆராயும் முகமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான றவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம். மாஹிர் ஆகியோர் விஷேட உலங்கு வானூர்தி (ஹெலிகொப்டர்) மூலம் இன்று (30) ஞாயிற்றுக்கிழமை இறக்காமம் வருகைதந்து பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடினார்.
இறக்காமம் ஜாமியுத் தையார் ஜும்ஆ பள்ளிவாசலில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட், கட்சியின் தவிசாளர் ஏ.எல். அப்துல் மஜீட், சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், அலிசாஹிர் மௌலானா, கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர், கிழக்கு மகாண சபை உறுப்பினர்களான கே.எம். அப்துல் றசாக், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ஏ.எல். தவம், சிப்லி பாறுக், கட்சியின் செயலாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.