பாறுக் ஷிஹான்-
யாழ். வலி வடக்கில் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு தொகுதி காணிகள் நேற்று (07) வெள்ளிக்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகள் மீளவும் மக்களிடம் கையளிக்கப்பட்டுவரும் திட்டத்திற்கமைவாக யாழ் வலி வடக்கு ஊரணி பகுதியில் இராணுவத்தினரின் பாவனையிலிருந்த தையிட்டி வடக்கு ஜெ.249 மயிலிட்டிதுறை ஜெ.249 பகுதிகளின் சுமார் முப்பது ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டடு மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
காலை இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட புதிய கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராட்சி காணி விடுவிப்பிற்கான அனுமதி பத்திரத்தை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகனிடம் கையளித்தார். விடுவிக்கப்பட்ட காணிகளில் மக்கள் வந்து விரைவில் குடியேற வேண்டும் எனவும் அவ்வாறு குடியேறும் மக்களிற்கான வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அமைத்துக்கொடுக்க தாம் நடவடிக்கை எடுப்பதாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் இங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.
சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள், தெல்லிப்பழை பிரதேச செயலர் சிறிமோகன், யாழ்ப்பாண மாவட்ட செயலக காணி மேலதிக அதிகாரி எஸ்.முரளீதரன் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.