ஐ.ஏ. காதிர் கான்-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, மக்கள் மயமான கட்சி என்பதால், கட்சியின் மக்களின் ஆசிர்வாதத்துடன் பலமான நிலையில் பயணிக்கிறது. இதனைக் குழப்புவதற்காக இன்று பல்வேறு சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுக்கொண்டிருக்கின்றன. எனவே, கண்டியில் இன்று இடம்பெறும் மே தினக் கூட்டத்திற்கு வருகை தரும் கட்சி ஆதரவாளர்கள் அனைவரும், இவ்வாறானவர்களுக்கு எதிராக ஒன்றுபட்டு பதிலடி கொடுக்க வேண்டும் என்று, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா, சகல கட்சி ஆதரவாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலம் மிக்க பயணத்தை மேற்கொண்டு செல்லும் நிலையில், இலங்கையில் இம்முறை இடம்பெறும் அதி சிறந்த மே தினத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கண்டியில் நடத்துகிறது என்பதை பெருமையுடன் கூறிக் கொள்ள விரும்புகின்றேன்.
கட்சி என்ற வகையில், பாரிய சிக்கல்களுக்கு மத்தியில் எமக்கு எதிராக விடப்படுகின்ற சவால்களுக்கு பதிலளிக்கும் வகையிலேயே, மே தினக் கூட்டத்தை அரசாங்கம் கண்டியில் நடத்தத் தீர்மானித்ததாகவும் அமைச்சர் சுட்டிக் காட்டியுள்ளார்.
எமது கட்சியைப் பிளவு படுத்த இன்று பல சக்திகள் திட்டமிட்டு வருகின்றன. என்றாலும், அந்த சக்திகள் அனைத்தும் தற்போது பலமிழந்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. ஆகவே, இச் சந்தர்ப்பத்தில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தொழிற் சங்க அமைப்புக்கள் அனைத்தும் எங்களுடன் கை கோர்த்து இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு, நாட்டு நலனுக்காகவும் நாட்டின் எதிர்கால வெற்றிக்காகவும் சகல தொழிலாளர்களும் இத்தகு பொண்ணான சந்தர்ப்பத்தில் ஐக்கியத்துடன் ஒன்றிணையுமாறும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.