மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காகவும் , ஏற்படும் பிரச்சனைகளை சுமூகமாக தீர்ப்பதற்குமாக மாவட்ட அபிவிருத்திக்குழு போடப்பட்டும் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தை கூட்ட முடியவில்லை என்பதில் நான் வெட்கப்படுகிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் தெரிவித்தார்.
மன்னார் சிலாவத்துறையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற மீள் குடியேற்ற செயலணியின் அபிவிருத்தி தொடர்பான மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் உரையாற்றுகையில்,
மன்னார் மாவட்டத்தினுடைய அபிவிருத்தியையும் இங்கு ஏற்படும் பிரச்சினைகளையும் பேசுவதற்கு மாவட்ட அபிவிருத்திக்குழு போடப்பட்டும் இக்கூட்டத்தை கூட்டுவதற்கு சில இணைத்தலைவர்களுக்கு நேரமில்லை என்பதால் நான் அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் என்றுசொல்ல வெட்கப்படுகிறேன்.
மக்களால் தெரிவுசெய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களுடைய பிரச்சனைகளை பேசுவதற்கு நேரமில்லை என்றால் அந்த இடத்திற்கு பொருத்தமான ஒருவருக்கு அப்பொறுப்பை வழங்கிவிட்டு ஒதுங்கிக்கொள்ளவதே சாலச்சிறந்ததாகும்.
வெறுமனே தங்கள் பெயருடன் இணைத்து பதவிகளை போட்டுக்கொள்வதற்காக இருந்தால் அதற்கவர்கள் வீட்டிலே இருந்திருக்கலாம் இதற்கு மேலும் நான் யார் என்பதை பெயர்குறிப்பிடத்தேவையில்லை என்றாலும் இனியாவது அபிவிருத்திக்குழு கூட்டம் கூட்டப்பட்டு மன்னார் மாவட்ட மக்களுடைய பிரச்சினைகளுக்காக ஒரு நாளையாவது செலவழிக்க வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பாகும்.
மேலும் மக்களுக்கு நிர்வாகம் சார்ந்த தெளிவுகள் போதாமையால் அவர்களை சிலர் ஏமாற்ற நினைக்கலாம் ஆனாலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட நான் அவர்களுக்கு கிடைக்கப்பெறவேண்டியதை அவ்வாறே கிடைக்க செய்வதுதான் என்னுடைய வேலையாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.