ஹம்ஸா கலீல்-
"சாந்தி சமாதானத்தை பரவச்செய்து குலவாத பேதத்தை நீக்கச் செய்து சம உபகாரத்தை மேம்படச் செய்து நாம் வளர்வோம் உயர்வோம் ஒன்று பட்டு"
என்ற கோசத்தோடு ஏகாதிபத்திய வாதிகளிடமிருந்து நாட்டை மீட்கும் சுதந்திர போராட்டத்திற்கு முஸ்லிம்கள் பாரிய பங்களிப்பினை வழங்கினர். முஸ்லிம் தலைவரான T.B ஜாயா அவர்கள் இதில் பங்களிப்புச் செய்த முக்கியமான ஒருவர். அன்று நாட்டில் சிங்களம் தமிழ் முஸ்லிம் என்ற பேதம் இருக்கவில்லை.
சுதந்திரத்திற்கு பின் இலங்கை ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் பலமான ஜனாநாயகத்தை உறுதிப்படுத்துவதில் ஏனைய இனங்களைப் போல் முஸ்லிம்களும் தமது பங்களிப்பை நல்கி வருகின்றமை உள்நாட்டு அரசியலில் காணப்படக்கூடிய முக்கிய அம்சமாகும்.
அதனால் தான் மாறி மாறி வருகின்ற அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவமும் அதனையொட்டிய முஸ்லிம் சமூகத்தின் இருப்பு சமய கலாசார பாதுகாப்பு உற்பட பௌதீக அபிவிருத்திகள் இடையூரின்றி இடம் பெற்று வருகின்றன.
இலங்கை வரலாற்றில் முஸ்லிம் சமூகம் அரசியலிலும் சரி சமூக வாழ்விலும் சரி சகோதர சமூகமான தமிழர்களைப் போன்று அல்லாமல் பெரும்பாண்மை சிங்கள சமூகத்துடன் இணைந்து புரிந்துணர்வுடன் தமது அரசியல் சமூகப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். முஸ்லிம் சமூகத்தின் கடந்த கால வரலாற்றில் முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கிய பல பிரச்சனைகளுக்கு இப் புரிந்துணர்வே தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் முக்கிய காரணியாக அமைந்தது.
கடந்த கால வரலாற்றில் சகோதர சமூகமான தமிழர் சமூகத்தின் எதிர்ப்பு அரசியல் கோசங்கள், அவர்களின் இருப்பு பற்றிய தனிநாட்டுக் கோரிக்கைகள், அரசியல் விடுதலைக் கோசங்கள், சிங்கள பெரும்பாண்மை சமூகத்துடன் கருத்து முரண்பாடுகளை உருவாக்கியமையே நம் நாடு 30 ஆண்டுகள் யுத்தம் எனும் அரக்கனிடம் அகப்பட்டமைக்கான முக்கிய காரணி என்பதை எவரும் மறுத்து விட முடியாது.
வடக்கு கிழக்கு தவிர்ந்த பிரதேசங்களில் பெரும்பாண்மை சமூகத்துடன் ஒன்றெனக் கலந்து வாழும் முஸ்லிம் சமூகம் எதிர்ப்பு அரசியலினூடாக தமது பிரச்சனைகளுக்கு தீர்வை பெற முனைவது பாரிய பாதகத்தன்மையினை உருவாக்கி விடும்.
நாட்டின் ஒரு பாகத்தில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான அநீதிகள் தலைதூக்குகின்ற போது வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் அநீதிக்கெதிரான கோசங்கள் முஸ்லிம் அரசியல் வாதிகளின் உணர்ச்சிவசப்பட்ட நடவடிக்கைகள் தெற்கிலே இனங்களுக்கிடையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நான் கூறி நீங்கள் புரியவேண்டியதில்லை.
தற்கால நம் நாட்டின் அரசியல் நிலையில் எதிர்ப்பு அரசியல் எம் சமூகத்துக்கு மென் மேலும் பிரச்சனைகளை அதிகரிக்குமே தவிர எம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கான சுமூகமாக தீர்வை பெற்றுத்தரக் கூடியது அல்ல.
தம்புள்ளை பள்ளிவாயல், அளுத்கமை கலவரம் தொடக்கம் வில்பத்து, மாணிக்கமடு சிலை விவகாரம் வரை தீர்வு காணப்படாத பல பிரச்சினைகளை எம் சமூகம் எதிர்நோக்கி நிற்கிறது. இப் பிரச்சனைகளின் தொடக்கம் முதல் இன்று வரை பிரச்சனைகளுக்கான தீர்வை பெறும் விடையத்தில் பல்வேறு முயற்சிகளை முஸ்லிம் அரசியல் வாதிகள் முன்னெடுத்தே வருகின்றனர். ஆனாலும் பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி அரசு நகர்வதாக இல்லை.
எம் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வை பெற முயலாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாய் மூடி மௌனிகளாக இருக்கின்றார்கள். அவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சி அரசியல் செய்ய வேண்டும் என்று கோசம் எழுப்புபவர்கள்,
நல்லாட்சி அரசின் பங்காளர்களான முஸ்லிம் அரசியல் தலைமைகள் அனைவரும் இவ் ஆட்சியை விட்டு வெளியேறினால் எம் சமூகப் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்க இந்நாட்டின் ஆட்சியாளர்களும் அரசும் தயாரா? இவ்வாறான வெளியேற்றத்தின் ஊடாக எம் சமூகத்துக்கு எதிரான அடக்கு முறைகள் குறைந்து விடும் மீண்டும் இடம்பெறாது என்பதற்கு உத்தரவாதம் என்ன? என்பது பற்றி சிந்திக்க வேண்டும்.
எதிர்கட்சி அரசியல் பற்றியும், முஸ்லிம் அரசியல் நிலை பற்றியும், முஸ்லிம் அரசியல் தலைமைகளைப் பற்றியும் அரசியலுக்கு வெளியில் இருந்து கொண்டு பத்திரிகைகளுக்கும் ஊடகங்களுக்கும் விமர்சன அறிக்கைகளை விடும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் அவர்களும் சிந்திக்க வேண்டும் நீங்கள் எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினராகவோ அல்லது இவ் அரசின் அமைச்சராகவோ இருந்தால் இவ் அரசிடமிருந்து முஸ்லிம் சமூகத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்று விட முடியுமா?
அளுத்கமை கலவரம் நடந்து 33மாதங்கள் கடந்து விட்ட போதிலும் முஸ்லிம் அமைச்சர்கள் முறையான நஸ்டஈட்டை பெற்றுக் கொடுக்க வில்லை அதற்காக முயற்சிக்கவும் இல்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்து இருக்கும் நீங்கள். கடந்த மார்ச் 23அன்று பாராளுமன்ற உரையில் அரசை நோக்கி அளுத்கமை கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக நஸ்ட ஈட்டை வழங்குமாரு இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அரசிடம் விடுத்த வேண்டுகோளையும். அதற்கான அமைச்சரவை பத்திரத்தையும் மீள்குடியேற்ற அமைச்சினூடாக தயார்படுத்தி இருந்ததையும் மறந்து விட்டீர்கள்.
வாய் பேச்சுக்களும் எழுத்து ஆக்கங்களும் வீண் விமர்சனங்களும் எம் சமூக பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக் கொடுக்கப்போவதில்லை. விட்டுக் கொடுப்புகளும் அரசுடன் இணைந்த சமரசப் பேச்சுகளுமே இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை குழப்பாத தீர்வை பெற்றுக் கொடுக்கும்.
இலங்கையின் சனத்தொகையில் முஸ்லிம்கள் 10% ம். அவர்களில் பெருவாரியானோரும் அவர்களின் பொருளாதாரமும் வடக்கு கிழக்குக்கு வெளியிலே உள்ளது என்பதை சகலரும் நினைவில் கொள்ளுவது சிறந்தது.
குரங்கின் கழுத்தில் தொங்கிய பூ மாலையை நரியின் கழுத்தில் மாட்டி இன்று நரியைப் பார்த்து குறைப்பவர்கள் இவ் யதார்த்த நிலையை உணர்தல் சிறந்தது.