கபீர் ஹாசிமை செயலாளர் பதவியிலிருந்து அகற்றுவது UNPன் ஒரு பாரம்பரிய சேஷ்டை



எம்.எஸ்.எம். ஸாகிர்-
க்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்து அமைச்சர் கபீர் ஹாசிமை அகற்ற முற்படுவது ஐ.தே.க.வின் ஒரு பாரம்பரிய சேஷ்டை என முஸ்லிம் முற்போக்கு முன்னணியின் செயலாளர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

பொரளை என்.எம். பெரேரா மத்திய நிலையத்தில் கூட்டு எதிர்க்கட்சி சார்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் கூறியதாவது,

அரசாங்கத் தரப்பில் இன்று நடைபெறுவதெல்லாம் தெருக்கூத்துக்கு ஒப்பானதாக இருக்கின்றது. இந்த அரசாங்கத்தைப் பதவிக்கு கொண்டுவந்தவர்களே பத்திரிகை மூலமாக அரசாங்கத்தை சாடி வருகின்றனர். இந்த நாட்டிய நடனம் முடிவடையக் கூடிய காலம் வந்துவிட்டது. பொதுமக்களை எந்த நாளும் ஏமாற்ற முடியாது. ஐ.தே.கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் இன்று ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டுப் போராட்டம் மேலிடத்தையும் இப்போது தொட்டுவிட்டது. தொல்பொருள் காட்சி மன்றத்தை வெளியாருக்கு வழங்கக் கூடாது என ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதனை மீறும் வண்ணம் அது பொது மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் அறிக்கை விடுத்திருக்கிறார். ஆகவே இந்த நாட்டை ஆட்சி செய்வது யார் என்ற கேள்வி பொது மக்களிடத்தில் எழுகின்றது. இப்படியாக இந்தத் திருவிளையாடலை எந்த நாளும் நடத்த முடியாது.

எனவே ஜனாதிபதியும் பிரதம அமைச்சரும் சேர்ந்து, தொடர்கின்ற ஜல்லிக்கட்டை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டும். அதற்காகத்தான் இந்த நாட்டு மக்கள் ஒரு தேர்தலை வேண்டி நிற்கின்றனர். அதிலும் உள்ளூராட்சி அமைச்சரும் தேர்தல் ஆணையாளரும் ஒருவருக்கொருவர் முரணான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். இந்த நாட்டு முஸ்லிம்கள் ஐ.தே.கட்சியிலும் ஒரு கேள்வியை எழுப்புகின்றனர். அதாவது கபீர் ஹாசிம் ஐ.தே.க. யின் செயலாளர் ஆசனத்தை வழங்கிவிட்டு அந்த ஆசனத்தின் கால்களைப் பறிப்பதற்கு முயற்சிக்கின்றனர். இது ஐ.தே. கட்சியில் பாரம்பரியமாக இருந்து வருகின்ற ஒரு சேஷ்டை. இதனை முஸ்லிம்கள் நன்கு அறிய வேண்டும். அன்று இந்த நாட்டின் தேசிய தலைவர்களில் ஒருவராகிய அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவர் டாக்டர் எம். சீ. எம். கலீலுக்கு ஐ.தே.க. தவிசாளர் பதவி வழங்கியது. அதன் பின் அவர் ஆசனத்தில் அமர்ந்து பணியாற்றுவதற்குரிய எந்தவிதமான உதவிகளையும் கட்சிக்காரியாலயம் செய்யவில்லை. அவர் தவிசாளர் பதவியை உதறித்தள்ளிவிட்டு தன்னுடைய நூராணியா இல்லத்திற்குச் சென்று விட்டார். அதன் பிறகு இந்த நாட்டுக்கு அரும்பெரும் பணியாற்றிய முதல் வெளியுறவு அமைச்சர் ஏ.சீ.எஸ். ஹமீதுக்கும் ஐ.தே. க. தவிசாளர் பதவி வழங்கப்பட்டு அவரும் அந்த ஆசனத்தில் அமர்ந்து நொந்து போனார். எத்தனை முறை வேண்டியும் அப்படியான ஒரு தலைவருக்குக் கூட கட்சிக்காரியாலயம் எந்த விதமான உதவி ஒத்தாசையும் வழங்கவில்லை. மனம் நொந்த ஹமீத், இதன் காரணமாக முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் உடன் தொடர்பு கொண்டு எதிர்கால முஸ்லிம்கள் பற்றி பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் போது அஸ்ரப் கூறினார்.

சேர் நீங்கள் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பதவியைப் ஏற்றுக் கொள்ளுங்கள். நான் தேசிய அமைப்பாளராகப் பணியாற்றுகின்றேன் என்று வாய்விட்டுச் சொன்னார். அவ்வளவு தூரத்திற்கு ஐ.தே.க. முஸ்லிம் தலைமைத்துவத்திற்கு குந்தகம் விளைவித்துள்ளதை வரலாற்றில் ஒவ்வொரு பாடமாக நாங்கள் சுட்டிக்காட்டலாம். எம். ஏ. பாக்கீர் மாகார் ஒரு சிறந்த தலைவர். அவர் சபாநாயகர் பதவியை வகித்த போது, அந்த ஆசனத்தில் இருந்து இறக்குவதற்கு சில பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டு அவர் மீது வசை பாடவும் அவர் போகும் வரும் போதெல்லாம் அவச்சொல் பாவிப்பதற்கும் சூழ்ச்சி செய்யப்பட்டது. அவரது பதவியும் பறிக்கப்பட்டது.

அந்த நேரத்தில் அவருடைய அந்தரங்கச் செயலாளராக பணி புரிந்த எனக்கு இந்தப் பின்னணி நன்றாகத் தெரியும். எனினும் இதனை நான் இன்று முஸ்லிம் சமுதாயத்தின் முன் ஒரு புத்தகமாக திறந்து வைக்கின்றேன். ஐ.தே.க. முஸ்லிம்களை வாட்டி, வதைத்துப், பிழிந்து வாக்குளைப் பெற்றதே தவிர, உண்மையிலே இந்த நாட்டு முஸ்லிம்கள் மீது எந்தவிதமான பரிவு பாசம் வைக்கவில்லை. அதுமாத்திரமல்ல, ஐ.தே.க. தலைமைத்துவம் எந்நேரமும் சர்வதேச ரீதியில் முஸ்லிம்களுக்கு விரோதமாகத்தான் செயற்பட்டு வருகின்றன. அண்மைக் காலத்தில் அல் - மஸ்ஜித் அக்ஸா, ஏனைய விடயங்கள் சம்பந்தமாகவும் அரசாங்கம் காலை வாரிப்போட்டதை முஸ்லிம்கள் நன்கு அறிவார்கள். இப்போதைய பிரதமருக்கு மிகவும் துணையாக இப்பணியை ஆற்றுகின்ற சியோனிசவாதியாக வெளிநாட்டு விவகார அமைச்சர் மங்கள சமரவீர இருக்கின்றார். ஆகவே இவர்கள் மீது முஸ்லிம்கள் இன்னும் நம்பிக்கை வைப்பது தம்மை தாமே ஏமாற்றிக் கொள்ளும் விடயமாகும்.

சடுதியாக ரஷ்யா சென்று முசலிப் பிரதேசம் சம்பந்தமாக மறிச்சுக்கட்டி முஸ்லிம்களுக்கு வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பமிட்டதன் மர்மம் என்ன? இலங்கை வரலாற்றிலே ஓர் அமைச்சரோ ஜனாதிபதியோ வெளிநாடு சென்று அந்த நாட்டில் வர்த்தமானியில் கையொப்பமிட்ட வரலாற்றை முதலில் தோற்றுவித்தது இந்த ஜனாதிபதிதான் இதன் பின்னணி என்ன என்பதை அரசாங்கம் மக்களுக்கு குறிப்பாக முஸ்லிம்களுக்கு அறிவிக்க வேண்டும்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -