முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் சம்பந்தமாக நீண்டகாலமாக பேசப்பட்டு, அண்மைக்காலமாக அது சூடு பிடித்திருக்கின்றது. இத்திருத்தம் சம்பந்தமாக ஆறு வகையானோர் அக்கறை காட்டுகின்றனர்.
1) சில மேற்கத்திய சக்திகள்
2) சில அரச சார்பற்ற நிறுவனங்கள் ( NGOS)
3) இந்த NGO க்களில் பிரசயோசனம் பெறுகின்ற பெண்ணியவாதிகள் அல்லது மனித உரிமை ஆர்வலர்கள்/ புத்திஜீவிகள். ( அவ்வாறு தங்களை அழைத்துக் கொள்பவர்கள்)
4) மேற்கூறிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்பாக இருக்க, இவற்றுடன் தொடர்பில்லாத, மார்க்கம் தொடர்பாக தெளிவான நிலைப்பாடில்லாத, தங்களையும் புத்திஜீவிகளாக/ சிந்தனாவாதிகளாக கருதிக்கொள்கின்ற ஒரு கூட்டம்
5) அப்பாவித்தனமாக இவர்களின் கருத்துக்களால் கவரப்படுகின்ற ஒரு கூட்டம்
6) முஸ்லிம் தனியார் சட்டம் செயற்படுத்தப்படும்போது ஏற்படுகின்ற சில நடைமுறைப் பிரச்சினை காரணமாக இஸ்லாமிய வரையறைக்குள் நியாயமான சாத்தியமான சில திருத்தங்கள் மேற்கொள்வது நல்லதே, என்று நேர்மையாக சிந்திக்கின்ற ஒரு கூட்டம்,
இதில் முதல் மூன்று பிரிவினரையும் பொறுத்தவரை அவர்கள் முஸ்லிம் சட்டத்தின் வலுத்தன்மையை அளவிட பயன்படுத்துகின்ற அளவுகோல் ' சர்வதேச மனித உரிமைகள்' சட்டமே தவிர இஸ்லாம் அல்ல. முஸ்லிம் சட்டம் இந்த மனித உரிமைச் சட்டத்திற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும்; என்பது அவர்களது நிலைப்பாடாகும். மாறாக அது இஸ்லாத்திற்கு ஏற்புடையதாக இருக்கவேண்டுமா? என்பதைப்பற்றி அவர்களுக்கு கவலையில்லை.
சர்வதேச மனித உரிமைகள் சட்டம் என்றால் என்ன? அவை உண்மையில் சர்வதேச மனித உரிமைகள்தானா? அல்லது குறித்த சில பிரிவினர் தாங்கள் ' மனித உரிமைகள்' என்று நம்புபவற்றை முழு உலகத்தின் மீதும் திணிக்க முற்படுகின்றார்களா? இவர்கள் இன்று அடையாளப்படுத்துகின்ற மனித உரிமைகளின் தோற்றுவாய் மற்றும் அதன் வளர்ச்சிப்பாதை என்ன? அது இன்று ' சர்வதேச மனித உரிமைகள்' என்ற அடையாளத்தை எவ்வாறு பெற்றுக்கொண்டது, இதனை முழு உலகமும் ஏற்றுக் கொண்டிருக்கின்றதா? இதற்கெதிரான விமர்சனங்கள் என்ன? குறிப்பாக இஸ்லாமிய உலகு இந்த ' சர்வதேச மனித உரிமைகள் ' என்பதனை எவ்வாறு பார்க்கின்றது? இன்று மனித உரிமைகளைப் போதிக்கின்ற மேற்கத்திய வல்லரசுகள் ' மனித உரிமைகளை மதிக்கின்றனவா? போன்ற கேள்விகளுக்கான விடைகள் இன்றைய இந்தக் குழப்பத்திற்கு தெளிவைத் தரும். இனஷா அல்லாஹ், இத்தொடரின் அடுத்தடுத்த பாகங்கள் அதனை ஆராயும்.
மனித உரிமை மற்றும் பெண்ணியம் பேசுகின்ற முஸ்லிம்கள்
---------------------------------------------
இந்த NGO க்களின் பின்னணியில் மனித உரிமை பற்றியும் பெண்ணியம் பற்றியும் பேசுகின்ற சிலர் 'முஸ்லிம் திருமண, விவாகரத்து சட்டத்தை' திருத்தவேண்டுமென்பதில் மிகவும் ஆக்ரோஷமாக இருக்கின்றார்கள். முஸ்லிம் சட்டம் திருத்தப்படக்கூடாதென்பதெல்ல, ஆனால் அந்த திருத்தத்தின் வரையறை என்ன? என்பதில்தான் இன்று பிரச்சினைகள் இருக்கின்றன. முஸ்லிம் சட்டமென்பது இஸ்லாமிய வரையறைக்கப்பால் திருத்தப்பட முடியுமா? அவ்வாறு திருத்தினால் அது முஸ்லிம் சட்டமாகுமா? ஆனால் இன்று முஸ்லிம் சட்டம் திருத்தப்படவேண்டுமென்று கோஷமெழுப்புகின்ற பலர், இஸ்லாம் என்பதற்கும் இந்த முஸ்லிம் சட்டத்திற்கும் சம்பந்தமே இல்லை, என்பதுபோல் மனித உரிமைகளப் பற்றியே பேசுகின்றார்கள் அல்லது அவர்களது எஜமானர்கள் பேச வைக்கின்றார்கள்.
முஸ்லிம் சட்டம் முஸ்லிம்களுக்குரியது. அது இஸ்லாத்தின் அடிப்படையில் அமைய வேண்டியது. இஸ்லாத்தைப்பற்றிக் கவலைப்படாமல் மனித உரிமை என்று அவர்கள் அழைப்பவற்றைப் பற்றிக் கவலைப்படுபவர்களுக்கு பொதுச்சட்டம் இருக்கின்றது. முஸ்லிம் சட்டத்தை மனித உரிமைகள் என்ற பெயரில் பொதுச்சட்டத்திற்கு சமாந்திரமாக மாற்றவேண்டிய அவசியமில்லை.
இன்று நிலைமை எந்த அளவுக்கு முற்றி இருக்கின்றதென்றால், இவர்கள் விரும்புகின்ற விதத்தில் முஸ்லிம் சட்டத்தை மாற்ற உலமா சபை சம்மதிக்கவில்லை; என்பதற்காக, உலமா சபை கண்மூடித்தனமாக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகின்றது. 'உலமா சபை அறிவீனர்களைக் கொண்டது'; என்று விமர்சிக்கப் படுகின்றது. மேற்கத்திய மனித உரிமைகளைப் பற்றிப் படித்தவர்கள் அறிவாளிகள்!, இஸ்லாத்தைக் கற்றுத்தேர்ந்த உலமாக்கள், அறிவீனர்கள்! இந்த விமர்சனங்களும் இவர்களது ஆவேச நிலைப்பாடுகளும் மேற்கத்திய இஸ்லாத்திற்கெதிரான சிந்தனாவாதம் இலங்கை முஸ்லிம்களுக்கு மத்தியில் கணிசமான அளவு முன்னேறியிருப்பதையே காட்டுகின்னது.
இறுதிக்காலத்தில் இஸ்லாம் பரதேசியாக இறைவனிடம் மீளும்; என்பதற்கான அறிகுறிகள் இவைகளோ தெரியவில்லை. உலமா சபை பிழை விடமுடியாதது; என்பதல்ல. ஆனால், அவ்வாறு ஷரீஆ விடயத்தில் பிழைவிட்டால், அதனைச் சுட்டிக்காட்டுகின்ற தகுதி ஏனைய ஷரீஆவைக் கற்ற உலமாக்களுக்கே இருக்க முடியும். மாறாக மேற்கத்திய மனித உரிமைகளைப் பற்றிப் படித்தவர்களுக்கல்ல.
ஒரு மருத்துவர் பிழையான சிகிச்சை செய்தால் அதனை இன்னொரு மருத்துவம் படித்த ஒருவர்தான் சுட்டிக்காட்ட முடியும். ஆகக்குறைந்தது குர்ஆன், சுன்னாவை ஆதாரம் காட்டியாவது இந்த மேதாவிகள் உலமாசபையின் நிலைப்பாட்டை பிழையென்றால், இஸ்லாத்தின் வரையறைக்குள் இவர்கள் இருக்க விரும்புகின்றார்கள்; இவர்களின் வாதம் ஏற்புடையதா? இல்லையா? என்பது ஒரு புறமிருக்க.
என்று எடுக்கலாம். ஆனால் அதுவும் இல்லை.
எனவே, இஸ்லாத்தைப் புறந்தள்ளி நீங்கள் கூறுகின்ற மனித உரிமைகளுக்கு இயைவாக ஒரு ' திருமண விவாகரத்து ' சட்டம் உங்களுக்குத் தேவைப்பட்டால் அரசாங்கத்திடம் கூறி உங்களைப்போன்றவர்களுக்கென்று ஒரு சட்டத்தை உருவாக்கிக் கொள்ளுங்கள். அல்லது பொதுச்சட்டத்தை பாவித்துக் கொள்ளுங்கள். முஸ்லிம் சட்டம் என்பதே இஸ்லாத்தின் வரையறைக்குள் அது இருக்கும்வரைதான்; என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இஸ்லாத்தின் வரையறையைத் தாண்டினால் அதற்கு வேறு பெயர் வைக்க வேண்டும். என்பதையும் சிந்தியுங்கள்.
வை எல் எஸ் ஹமீட்.
(தொடரும்.....)