மஹிந்தவுக்கு விசேட அதிரடிப்படையினர் உட்பட 177 பேர் பாதுகாப்பு - உரிய அமைச்சர் விளக்கம்

ரசியல் ரீதியாக இலக்குவைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு குறைக்கப்படவில்லை என சட்டம் ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பிரபுக்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு தொடர்பில் அடிக்கடி மேற்கொள்ளப்படும் பாதுகாப்பு மதிப்பீட்டுக்கு அமையவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் விளக்கமளித்தார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் பாதுகாப்பு மே தினத்துக்குப் பின்னர் குறைக்கப்பட்டிருப்பதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.

இது பற்றி விமல் வீரவன்ச எம்பி நேற்று சபையில் கேள்வியெழுப்பினார். இதற்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் சாகல ரத்நாயக்க இதனைக் கூறினார். முன்னாள் ஜனாதிபதிக்கு தற்பொழுது விசேட அதிரடிப்படையினர் உட்பட 177 பேர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், பிரபுக்களுக்கான பாதுகாப்பை வழங்கும்போது அவர்களுக்கு காணப்படும் பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும். யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் அமைச்சர்கள் மற்றும் பிரபுக்களுக்கு வழங்கப்பட்டிருந்த விசேட பாதுகாப்புத் தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்தி தேவையானவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த காலத்தில் ஓய்வுபெற்ற மற்றும் தேர்தலில் தோல்வியடைந்த மத்திய அமைச்சர்களின் பாதுகாப்பு மீளாய்வு செய்யப்பட்டு அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பாதுகாப்பு அதிகாரிகள் குறைக்கப்பட்டது மாத்திரமன்றி அச்சுறுத்தல் உள்ள நபர்களின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் ஜயம்பதி விக்ரமரட்ன மற்றும் சுமந்திரன் எம்பி ஆகியோருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த அறிக்கையின் அடிப்படையில் அவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.

2015ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ ஒய்வுபெறும்போது அவருடைய கோரிக்கைக்கு அமைய 102 இராணுவத்தினரும், 103 பொலிஸாரும் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்தனர். எனினும், எமது அரசாங்கம் பிரபுக்களின் பாதுகாப்புக்கு பொலிஸாரின் சேவையை மாத்திரம் பெற்றுக் கொடுப்பது என தீர்மானித்தது. இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்பட்டு அதற்குப் பதிலாக 100 பொலிஸார் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டனர். அது மாத்திரமன்றி விசேட பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த 26 பேருடைய சேவையும் அவருக்கு வழங்கப்பட்டது.

ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ உள்ளிட்ட முக்கிய நபர்களின் பாதுகாப்புக் குறித்த ஆய்வுகளை நாம் ஆறு மாதத்துக்கு ஒருமுறை ஆய்வுசெய்து, அவர்களின் பாதுகாப்பில் மாற்றங்களைச் செய்வோம். முன்னாள் ஜனாதிபதிக்கு 229 பேர் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்தனர். புதிய பாதுகாப்பு ஆய்வு அறிக்கைக்கு அமைய அவருடைய பாதுகாப்பை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய அவரின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த 42 பொலிஸ் அதிகாரிகள் குறைக்கப்பட்டனர். இது அவ்வப்போது இடம்பெறும் நடவடிக்கை என்பதுடன், பொலிஸ் மா அதிபரிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவுக்கு மே தினம் போன்ற விசேட நிகழ்வுகளுக்குத் தேவையான மேலதிக பாதுகாப்பை வழங்க முடியும். அரசியல் ரீதியாக இலக்குவைத்து அவருடைய பாதுகாப்பை குறைக்கவில்லை என்றார்.

தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -