ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள ஜுன் 21 சர்வதேச யோகா தினத்தை அனுஷ்டிக்கும் முகமாக எதிர்வரும் ஜுன் 20ம் திகதி மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் காலை 6.30 மணிக்கு யோகா பயிற்சி இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழக செயலாளர் எல். தீபாகரன் தெரிவித்தார்.
இந்த ஏற்பாடு தொடர்பாக செவ்வாய்க்கிழமை (30.05.2017) ஊடகங்களுக்குத் தெரிவித்த அவர் மேலும் கூறியதாவதுளூ தமிழரின் ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான யோகா கலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும் மட்டக்களப்பில் யோகா கலையை பிரபல்யப்படுத்தும் நோக்குடனும் சர்வதேச யோகா தினத்திற்கு முந்திய நாளில் மட்டக்களப்பில் பெரிய அளவில் யோகா பயிற்சி நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கல்வி இராஜாங்க அமைச்சர் எஸ். ராதாகிருஸ்ணன், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர், மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் மற்றும் வலய கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலை மாணவர்கள்; 600 பேர் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானோரின் பங்குபற்றலுடன் இந்நிகழ்வு சிறப்பாக இடம்பெறவுள்ளது.
இதில் ஆர்வமுள்ள அனைவரும் இணைந்து கொள்ளலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.