ஐக்கிய இராச்சியத்தின் வெஸ்ட் சஸ்ஸெக்ஸ் (West Sussex) பகுதியின் ஈஸ்ட் கிறின்ஸ்டேட்டுக்கு (East Grinstead) அருகே 11 வயது தொடக்கம் 16 வயது வரையிலான 60 பாடசாலை மாணவர்களை ஏற்றிக் கொண்டு இன்று காலை அந்தத் தனியார் பாடசாலை பஸ் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு மாணவன் புகை வாசத்தை உணர்ந்தான். அது நிச்சயமாகப் புகைதான் என்று உறுதி செய்து கொண்ட பின்னர் பஸ்ஸின் சாரதியிடம் சென்று பஸ்சுக்குள் புகை வாசம் வருவதாகத் தெரிவித்தான். உடனே பஸ்ஸை ஓரமாக நிறுத்தி, உள்ளிருந்த அனைத்து மாணவர்களையும் அவசர அவசரமாக இறக்கி, அப்பால் ஒரு பாதுகாப்பான இடத்தில் நிற்க வைத்தார் சாரதி. அவ்வாறு அவர் செய்து முடித்த சில நிமிடங்களுக்குள் பஸ் தீப்பிடித்து எரிய ஆரம்பித்து, உட்பகுதிக்குள் முற்று முழுதாகவே எரிந்து விட்டது. இந்தச் சம்பவம் அந்தப் பிரதேசம் முழுவதும் மிக்க பரபரப்புடன் பேசப்படுகிறது.
''அந்த மாணவன் தன்னை எச்சரித்திருக்காவிட்டால் ஒருவேளை தான் தொடர்ச்சியாகப் பஸ்ஸைச் செலுத்தியபடிப் போயிருக்கக் கூடும். அவ்வாறு போயிருந்தால்...?'' என்று உடல் நடுங்கியபடிக் கூறி, அந்த மாணவனை மிகவும் பாராட்டியுள்ளார் சாரதி. அதுமட்டுமல்ல, இன்னமும் பெயர் மற்றும் விபரங்கள் வெளியிடப்படாத அந்த இளம் மாணவனுக்குப் பிரித்தானியாவின் பல பாகங்களிலுருந்தும் நெகிழ்ச்சியுடன் மக்கள் தம் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர்.