எஸ். ஹமீத்-
உத்தரப்பிரதேசத்தில் அண்மையில் முதல்வர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவரான யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ.க அரசின் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆர்.எஸ்.எஸ். காவிகளின் மிக முக்கிய தலைவர்களில் ஒருவரானவரும் முஸ்லிம்களின் மீதான வன்மங்களைத் தனது உயிர்மூச்சாகக் கொண்டியங்குபவருமான யோகி ஆதித்யநாத் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறார். அவரின் உத்தரவுகள் கடும் போக்குவாத இந்துக்களிடையே பாராட்டுகளையும், நடுநிலையாளர்களிடமும் முஸ்லிம் மக்களிடமும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இது இவ்வாறிருக்க, நேற்று உத்தரப் பிரதேச மாநிலத்தில் மாடுகளுக்கு பிரத்யேக ஆம்புலன்ஸ் சேவை இவரால் தொடங்கப்பட்டுள்ளது. இதனைப் பற்றி இந்தியாவின் ஓய்வுபெற்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ தனது பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறு பதிவு செய்துள்ளார்.
“நான் உண்மையிலேயே உ.பி அரசுக்கு பைத்தியம் பிடித்துள்ளது என நினைக்கிறேன். தக்க மருத்துவ வசதியில்லாமல் மக்கள் கஷ்டப்பட்டு வருகின்ற நிலையில் மாடுகளுக்காக ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியிருக்கிறது உ.பி அரசு. இனி, மாடுகளுக்கென்று மூன்று படுக்கை அறை கொண்ட சொகுசு குடியிருப்பு வீடுகள், பிரசவ லீவு, குளிரூட்டப்பட்ட பேருந்து வசதி, மலைப் பகுதிகளுக்கான சுற்றுலா வசதி போன்றவற்றையும் உ.பி அரசு செய்து கொடுக்கும் என நினைக்கிறேன்” என்று கிண்டலடித்துள்ளார்.