கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தலைமையில் அமைக்கப்பட்ட இறக்காமம் மாணிக்கமடு பிரச்சினை தொடர்பாக ஆராய நியமிக்கப்பட்ட குழுவினர் இன்று முதலமைச்சர் தலைமையில் கூடினர்,
கிழக்கு மாகாண சபை கட்டடத்தில் இன்று இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி,காணியமைச்சர் ஆரியவத்தி கலப்பத்தி,எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள்,உயர் அதிகாரிகள் ,பொலிஸார் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்,
இதன் போது இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பான தற்போதைய நிலைமைகள் தொடர்பில் விரிவான முறையில் கலந்துரையாடியதுடன் பிரச்சினைகளுக்குரிய பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டன,
இந்த விவகாரத்தில் அரசியல்வாதிகளின் அங்கத்துவம் இன்றி குழுவொன்றை அமைக்க இதன் போது தீர்மானிக்கப்பட்டு அனைவராலும் இணக்கம் காணப்பட்டது, இதனடிப்படையில் பிரதம செயலாளர்,முதலமைச்சின் செயலாளர்,அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர்,காணி ஆணையாளர்,அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர்,தொல்பொருள அதிகாரிகள்,இறக்காமம் பிரதேச சபையின் செயலாளர்,காணி அதிகாரிகள் மற்றும் கல்வியமைச்சரால் நியமிக்கப்படும் அதிகாரி ஆகியோர் இந்தக் குழுவில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரின் தலைமையிலேயே இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.இதனடிப்படையில் இந்தக் குழுவின் இறுதி அறிக்கையை விரைவில் வழங்க வேண்டும் என கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கேட்டுக் கொண்டார்.
எவ்வாறாயினும் பிரதம செயலாளர் தலைமையிலான இந்தக் குழு கூடி அது தொடர்பான காலஎல்லையை விரைவில் அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது,.
இறக்காமம் மாணிக்கமடு விவகாரம் தொடர்பில் கடந்த மாகாண சபைக்கூட்டம் இடம்பெற்ற போது அது தொடர்பில் கூட்டமொன்று அமைத்து சுமுகாமான நியாயமான தீர்வுகளை எடுப்பதற்கான தீர்மானமொன்று எடுக்கப்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.
சிறுபான்மை சமூகத்துக்கு அநீதிகள் ஏற்படாத வகையில் தீர்மானங்கள் எட்டப்பட வேண்டும் என கிழக்கு முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது,