எமது நாட்டின் இரண்டாவது முஸ்லிம் நிதியமைச்சராகப்பதவியேற்ற எம்.எச்.எம். நெய்னா மரிக்கார். சி.அமு. முஹம்மது ஹனிபா தம்பதியினருக்கு நெய்னாமரிக்கார் மகனாக (1917. மே. 09) இல் பிறந்தார். அந்தவகையில் நூற்றாண்டு தினம் இன்றாகும்.
நெய்னாமரிக்கார் இந்நாட்டு அரசியலிலும், அரச சபையிலும் சமூகமட்டத்திலும் மிகவும் உயர்ந்து நின்ற மனிதராவார். அவர் பல்துறை ஆசானாக விளங்கினார். பல தேசத்தலைவர்களை உருவாக்கிய தேசத்தலைவர் டாக்டர் ரீ.பி.ஜாயாவினுடைய மாணவராக கொழும்பு சாஹிராக் கல்லூரியில் கற்றுத் தேர்ந்தார். ரீ.பி.ஜயாவினுடைய சமூகப்பற்றும் அரசியல் விழிப்புணர்ச்சியும் நெய்னா மரிக்காரை மிகவும் கவர்ந்தது. ஆகவே அந்த மாபெரும் தலைவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி தனது அரசியல் வாழ்க்கையை ஏற்றமிகு வழியில் நடாத்தத் தலைப்பட்டார்.
இந்த நாட்டில் முதல் எம். பி.யென பெயர் பெற்ற புத்தளம் எச்.எஸ். இஸ்மாயிலுக்குப் பிறகு இவர் புத்தளம் எம்.பி.யாகத் தெரிவு செய்யப்பட்டார். 1947இல் நடைபெற்ற தேர்தல் நியமனப்பத்திரத்தின் போது புத்தளம் தொகுதிக்கு போட்டி போடுவதற்கு யாரும் நியமனப்பத்திரம் செய்யாதவிடத்து எச்.எஸ். இஸ்மாயில் இந்த நாட்டின் முதல் எம்.பி.யென இன்றும் சரித்திரத்தில் தடம்பதித்துள்ளார்.
நெய்னாமரிக்கார் இங்கிலாந்து சென்று கேம்பிறிச் பல்கலைக்கழகத்தில் பரீஷ்டர் பட்டத்தைப் பெற்றார். அதன்பிறகு இவருக்கும் இவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான நிலப்பரப்பில் தென்னை விளைச்சல், உப்பு விளைச்சல் போன்றவற்றின் விருத்திக்காக வேண்டி மிகவும் பாடுபட்டார்.
1960 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் திகதி இவர், 4ஆவது பாராளுமன்றத்திற்கு புத்தளத்திலிருந்து தெரிவு செய்யப்பட்டார். அதன் பிறகு 1960, 1965, 1972, 1977, 1978 ஆகிய ஆண்டுகளில் இவர் பாராளுமன்றம் வருவதற்குரிய வாய்ப்பினை புத்தளம் மக்கள் தமது வாக்குகளின் மூலமாக பெற்றுக் கொடுத்து அவரைப் பெருமைப்படுத்தினர். 1965ஆம் ஆண்டு முதன்முதலாக இவர் உதவி நீதியமைச்சராக நியமனம் பெற்றார். அதன் பிறகு 1988ஆம் ஆண்டு அப்போது இருந்த நிதியமைச்சர் ரொட்ரீ டிமேல் பதவி விலகலின் காரணமாக நெய்னாமரிக்கார் நிதியமைச்சராக நியமனம் பெற்றார். அதன் மூலம் இந்த நாட்டின் இரண்டாவது முஸ்லிம் நிதியமைச்சர் என்ற பெயருக்கும் புகழுக்கும் உரித்தானவராக விளங்கினார். நெய்னாமரிக்கார் சிறந்த மார்க்கப்பக்தி கொண்டவர்.
இவரது அரசியல் வாழ்வை பிரகாசிக்கச் செய்வதற்காக இரு மைத்துனர்கள் மிகவும் நெருக்கமாகச் செயற்பட்டார்கள். தான் கற்ற கல்விக் கூடத்தை அதாவது கொழும்பு சாஹிராக் கல்லூரி தனிப்பட்ட பாடசாலையாக வரவேண்டும் என்பதற்காக அன்றைய தலைவர்களோடு ஒன்றிணைந்து பல போராட்டங்களில் அவர் கலந்துகொண்டார். அகில இலங்கை முஸ்லீம் லீக் தலைவராக இருந்த டாக்டர் கலீலோடும் சாஹிராவை மீளப்பெறுவதற்கான போராட்ட குழுவின் தலைவராகச் செயற்பட்ட முன்னாள் சட்டா அதிபர் ஏ.ஸீ.எம். அமீருடைய தலைமையில் பல தலைவர்கள் அணிசேர்ந்தனர். அவர்களில் பிரபலமிக்கவராக நெய்னாமரிக்கார் திகழ்ந்தார்.
இன்று கொழும்பு சாஹிராக் கல்லூரி முஸ்லிம்களுடைய தனிச்சொத்தாக தலைநிமிர்ந்து தலைநகரில் பிரகாசிப்பதென்றால் அதனை தனிப்பட்ட பாடசாலையாக உருவாக்கும் முயற்சியில் நெய்னாமரிக்காருடைய பங்கும் மிகப்பிரதானமாக பேசப்படுகிறது. அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் உப தலைவராக பல்லாண்டு காலம் சேவை புரிந்தார். நெய்னாமரிக்காருக்கு நல்ல குரல் வளமும் இருந்தது. அவர் கஷல் சங்கீதத்தில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். நாம் அவரோடு பல கூட்டங்களுக்கு பிரயாணம் செய்யும் போது வாகனத்தில் இருந்தே அந்த சங்கீதங்களை இசைத்து எம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்துவார்.
அவருக்குப் பிறகு ஒரு வருட காலம் மர்ஹும் ஹசன் குத்தூஸ் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தார். அதன் பிறகு புத்தளம் தொகுதிக்குரிய பாராளுமன்ற உறுப்பினராக அன்றைய ஜனாதிபதி ஆர். பிரேமதாச என்னை நியமித்தார். 15 ஆண்டு காலமாக எனக்குக் கிடைத்த பாராளுமன்ற நிதி அத்தனையும் நான் புத்தளம் தொகுதியின் அபிவிருத்திக்காக வேண்டித்தான் செலவிழித்தேன் என்பதனை இன்று மனநிறைவோடு மீட்டிப் பார்க்கின்றேன். எனவே நெய்னாமரிக்கார் 1995 பெப்ரவரி மாதம் 3ஆம் திகதி காலமானார்.
தேசிய பக்தரான நெய்னாமரிக்கார், ஒரு நூற்றாண்டு காலம் நாட்டின் நன்மைக்காக ஒற்றுமைக்காக வேண்டி, ஓர் இலங்கையின் கீழ் முஸ்லிம்கள் வாழ வேண்டும் என்ற டாக்டர் ரீ.பி. ஜாயாவினுடைய அரசியல் சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டு உழைத்த ஒருவர். அவருக்கு பிராந்திய எல்லைகளை மீறி அவருடைய சிந்தனை முழு முஸ்லிம் சமுதாயத்தையும் நோக்கியே செலுத்தப்பட்டது. அதனால் ஒற்றுமையான ஐக்கியப்பட்ட ஒரு இலங்கையினுள் நாங்கள் வாழ வேண்டும் என்று பேராவல் கொண்டு அரசியலில் உழைத்த ஒரு மகனாவார். அதன் மூலமாக ஏனைய மக்களுடைய நன்மதிப்பையும் பெற்றார்.
நெய்னாமரிக்கார் 25வருடமும் 6 மாதமும் 12 நாட்களும் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் அமைச்சராக இருந்தபோது அடிக்கடி பல சர்வதேச மாநாடுகளில் கலந்து கொள்வார். அவருடைய ஆழமான ஆங்கில அறிவும் அவரைப் பல மாநாடுகளுக்கு அனுப்புவதற்கு அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்தனவுக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.
சமுதாயப்பற்று நிறைந்த, நாட்டு நலனுக்காக உழைத்த, இந்த நாட்டு அரசியல் மூலமாக முஸ்லிம்களுக்கான பெருமையைப் பெற்றுத் தந்த முஹம்மது ஹனிபா நெய்னா மரிக்கார். அவருடைய பிறந்த நூற்றாண்டு விழாவை இன்று ஞாபகப்படுத்தி அவருடைய நற்சேவைகளை வல்ல அல்லாஹ் ஏற்று அவருக்கு மேலான ஜென்னத்துல் பிர்தௌஸை வழங்குவானாக!
தொகுப்பு - எம்.எஸ்.எம்.ஸாகிர்.