அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியா அல் அதான் வித்தியாலய மாணவன் ஒருவனிடம் (05) வெள்ளிக்கிழமை இனந்தெரியாதோர் இரத்தம் எடுத்ததால் கிண்ணியாவில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
கிண்ணியா மகரூப் நகரை சேர்ந்த சதாத் முகம்மது ருஸ்தி (11) என்ற மாணவன் அல் அதான் வித்தியாலயத்தில் 6 ஆம் தரத்தில் கல்வி கற்கிறான். இம்மாணவன் பாடசாலை முடிந்து வரும்போது வெள்ளை கார் ஒன்றில் வந்த சிலர் இவனை மறித்து இரத்தம் எடுத்ததாக தெரிய வருகின்றது.
இதனை அறிந்த இவனது தந்தை பாடசாலை அதிபரை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார். பாடசாலையில் அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை என அதிபர் அறிவிக்கவே பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. உடன் இது குறித்து கிண்ணியா பொலிஸ்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதோடு சிறுவனும் கிண்ணியா வைத்தியசாலையில் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டான்.
தற்போது இச்சிறுவன் மேலதிக பரிசோதனைக்காகவும், சட்ட வைத்திய அதிகாரியின் ஆலோசனையைப் பெறுவதற்காகவும் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாக கிண்ணியா தள வைத்தியசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி எம்.எச்.சமீம் தெரிவித்தார்.
இது குறித்து பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இச்சம்பவம் கிண்ணியாவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சிறுவனின் உடலில் ஏதும் நோய்க் கிருமிகள் புகுத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.