ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் மத்திய அரசினால் மிகக் குறைந்தளவான நிதியே ஒதுக்கப்படுவதாக அம்மாகாண சபையின் தவிசாளர் சந்திரதாஸ கலபதி தெரிவித்துள்ளார்.
மாகாணசபை தவிசாளர்கள் சங்கத்தின் 7ஆவது தவிசாளர்கள் மாநாடு சனிக்கிழமை 27.05.2017 திருகோணமலையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சபை பேரவைச் செயலகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இம்மாநாட்டில் நாட்டிலுள்ள 9 மாகாண சபைகளின் தவிசாளர்கள் மற்றும் செயலாளர்கள் உட்பட பல அரச அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர்.
இந்த மாநாட்டுக்கு தலைமை வகித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாண சபைத் தவிசாளர், கிழக்கு மாகாண சபையைத் தவிர நாட்டின் அனைத்து மாகாண சபைகளுக்கும் மத்திய அரசினால் கூடியளவு நிதி வழங்கப்படுகின்றது. ஏனைய மாகாண சபைகளுடன் ஒப்பிடுகையில், கிழக்கு மாகாண சபைக்கு மாத்திரம் மத்திய அரசினால் மிகக் குறைந்தளவான நிதியே ஒதுக்கப்பட்டு வருவது வெளிப்படையான விடயம்.
இருப்பினும் நாங்கள் கிடைக்கின்ற தொகையினை வைத்து வெற்றிகரமாக எமது மாகாண சபையை நிலை குலையாது நடாத்திக் கொண்டிருக்கின்றோம்.